12-ம் வகுப்பு புத்தகம், அசரடித்த நினைவாற்றல்: ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 6 வயது சிறுவன்!

0

நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள மகராஜநகர் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் பிரபுராஜ். அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி ஆர்த்தி ஹரிப்பிரியா, பல் மருத்துவராக உள்ளார். இந்த மருத்துவ தம்பதியின் மகனான சிறுவன் துர்கிருஷ் ஆத்விக், தனது ஆறு வயதிலேயே சாதனைகளைப் படைக்கத் தொடங்கியிருக்கிறார்.

பதக்கங்களுடன் சிறுவன்

குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் அனைத்தையும் அப்படியே மனதில் பதியவைத்து திருப்பிச் சொல்லியிருக்கிறார். அதனால் வியப்புற்ற பெற்றோர், சிறுவன் துர்கிருஷ் ஆத்விக்கை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது திருக்குறள், வெளிநாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்கள் எனப் பலவற்றை கற்றுக் கொடுத்துள்ளனர். அதனால் தனது குழந்தைப் பருவம் முதலாக தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் துர்கிருஷ்.

சிறுவன் துர்கிருஷ் ஆத்விக், தனது 3 வயது முதல் உலகப் பொதுமறையான திருக்குறளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கியிருக்கிறார். அதனால் மூன்றரை வயதில் 53 திருக்குறள்களை 3 நிமிடத்தில் ஒப்புவித்து சாதனை படைத்தார்.

சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரம்

அடுத்த சாதனை முயற்சியாக தனது நான்கரை வயதில், 100 திருக்குறளை 5 நிமிடங்கள் 40 வினாடிகளில் ஒப்புவித்தவரை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், டிரயம்ப் வேல்டு ரெக்கார்ட்ஸ், கிளோபல் ரெக்கார்ட்ஸ் அண்டு ரிசர்ச் பஃவுன்டேஷன் ஆகியவை அங்கீகரித்து கேடயம் மற்றும் சான்றிதழ்கள் அளித்தன.

தற்போது தன்னுடைய ஆறாவது வயதில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் வேதியியல் புத்தகத்தில் உள்ள கனிம அட்டவணையின் 10 தொகுப்பான கனிமங்களின் பெயர்களை 1 நிமிடம் 33 விநாடிகளில் ஒப்புவித்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையை எட்டிப் பிடித்துள்ளார்.

பாராட்டிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

இது தவிர இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்கள், உலக நாடுகளின் தலைநகரங்களை தவறின்றி கூறி பார்வையாளர்களை அசர வைக்கிறார். இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சாதனை சிறுவன் துர்கிருஷ் ஆத்விக்.பற்றி அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இது பற்றி சிறுவனின் தந்தை டாக்டர் பிரபுராஜ் கூறுகையில், “இளம் வயதில் நாங்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே திரும்பச் சொன்னதால் அவனுக்கு நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினோம். ஆனாலும் அவனைக் கட்டாயப்படுத்தி எதையும் படிக்க வைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் வீதம் கற்றுக் கொடுக்கிறோம்.

பெற்றோருடன் சிறுவன்

அதுவும் அவனுக்குப் பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது நாங்கள் சொன்னால் உடனே மனதில் பதிய வைத்துக் கொள்கிறான். 1330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் இளம் வயதில் ஒப்புவிக்கும் வகையில் திருக்குறளை கற்றுக் கொடுக்கிறோம். அந்த சாதனையை சிறுவன் துர்கிருஷ் ஆத்விக் விரைவில் படைப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JXm46zZ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*