கல்குவாரியை கண்டித்து 7-வது நாளாக விவசாயி உண்ணாவிரதப் போராட்டம்; பெருகும் ஆதரவு!

0

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில், நிபந்தனைகளை மீறி இயங்கும் ஓர் தனியார் கல்குவாரியால் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து விதிகளை மீறும் அந்தத் தனியார் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி,

கல் குவாரி

விஜயகுமார் என்ற விவசாயி தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ``கடந்த 15 ஆண்டுகளாக விதிகளை மீறி கனிமவளங்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிபந்தனையின்படி, குவாரியை சுற்றி பசுமை வளையம் அமைக்கவில்லை. குவாரியைச் சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், நிபந்தனையை மீறி எம்- சாண்ட் கழிவுகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கனிமவளம்

அவற்றிலிருந்து வரும் வெள்ளை புகையால் காற்று, நீர், மண் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விதிப்படி குவாரி நடத்தும் புல எண்கள், அனுமதி, உரிமையாளர் பெயர் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை கொண்ட பெயர் பலகை கூட வைக்கவில்லை.

தங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட எல்லைகளை காட்டும் வகையில் வண்ணமிட்ட கற்கள் எங்கும் நடப்படவில்லை. அரசு அனுமதித்துள்ள கல்குவாரி இயங்கும் நேரமான காலை 8.00 முதல் மாலை 5.00 மணி வரை மட்டும் இயங்காமல், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகுமார்

அதேபோல் குவாரியில் வெடி வைக்க அனுமதிக்கப்பட்ட நேரமான மதியம் 1 முதல் 2 மணி வரை மட்டும் வெடிக்காமல், குவாரிக்கு எப்பொழுதெல்லாம் கற்கள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இரவு, பகல் பாராமல் வெடி வைக்கப்படுகிறது.

அரசால் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் குழிகளை அமைத்து, சட்ட விரோதமாக கடத்தல் வெடி மருந்துகளை வாங்கி வெடி வெடித்து மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு அதிகாரிகளும் துணையாக உள்ளனர். அதனால் தான் நாங்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

போராட்டம்

7-வது நாளாக போராடும் விஜயகுமாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட குவாரியில் குதித்து போராட்டத்தில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டிருந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்ததால், இன்று அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் நடைபெறவில்லை. விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்குவாரி

ஆனால், பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JLVNjgQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*