கேரளா: கொலை செய்யப்பட்ட அட்டப்பாடி மதுவின் வீட்டுக்குச் சென்ற கவர்னர் - நடந்தது என்ன?!

0

கேரள மாநிலம் பாலக்காடு முக்காலி பகுதியில் பசிக்காக கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி பழங்குடியினத்தை சேர்ந்த அட்டப்பாடி மது 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி அடித்து கொலைச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பகுதி வியாபாரிகள், கார் டிரைவர்கள் மற்றும் சிலர் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக உள்ள பட்டியலில் உள்ள ஹுசைன், மூன்றாவது குற்றவாளியான சம்சுதீன், 16-ம் குற்றவாளியான முனீர் ஆகியோர் சேர்ந்து மதுவை தாக்கியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 16 பேர் மீது கொலை, பழங்குடியினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உணவு திருடியதாக கூறி மதுவை பிடித்து அஜமுடி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய காரணமான ஆறுபேரும் இந்த குற்றவாளிகள் பட்டியலில் உண்டு. அதில் சி.ஐ.டி.யு நிர்வாகியும் டாக்ஸி டிரைவருமான சம்சுதீன் கம்பால் தாக்கியதில் மதுவின் விலா எலும்பு முறிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 15 இடங்களில் ஏற்பட்ட காயங்களால் மது இறந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

கொலை செய்யப்பட்ட அட்டப்பாடி மது

அட்டப்பாடி மது கொலை வழக்கில் சாட்சிகள் பலரும் கோர்ட்டில் வாக்குமூலத்தை மாற்றி கூறி வருகின்றனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுவதாக மதுவின் குடும்பத்தினர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதுபற்றி மதுவின் தாய் மல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ``மது வழக்கில் சாட்சிகள் பல்டியடித்து வரும் நிலையில் மத்திய அரசு உதவ வேண்டும்" என அமித் ஷாவுக்கு அளித்த மனுவில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் மதுவின் குடும்பத்தினரை நேற்று அவர்களது வீட்டுக்கே சென்று திடீரென சந்தித்தார்.

மதுவின் தாயுடன் கவர்னர் ஆரிப் முகமது கான்

பாலக்காடு மாவட்டம் சிட்டக்கி பகுதியில் உள்ள மதுவின் வீட்டுக்கு சென்ற கவர்னர் ஆரிப் முகமதுகான் அங்கு அவரது தாய் மல்லியிடம் பேசியுள்ளார். `மதுவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’ எனவும், மதுவின் குடும்பத்தினரின் வேதனையில் பங்கெடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மதுவின் குடும்பத்தினர் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி கூறியதாக கவர்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கவர்னர் வருகையால் மதுவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக மதுவின் சகோதரி சரசு தெரிவித்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/iOC3k8Z
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*