போக்ஸோவில் ஆசிரியர் கைது... வழக்கை ரத்து செய்யப் போராடும் ஆசிரியர் கூட்டமைப்பு; நடந்தது என்ன?

0

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்துவதாக இரண்டு மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர் ஒரு வாரத்துக்கு முன்பு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மாணவிகள் புகார் அளிப்பதற்கு முன்பு, பள்ளியில் பெற்றோர் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், டி.இ.ஓ விசாரணை நடத்தி ஆசிரியர் மீது தவறு இல்லை என சி.இ.ஓ-வுக்கு அனுப்பியுள்ளார். இதுபற்றி அப்போது மாணவி ஒருவர் கூறும்போது,``ஆசிரியர் கிறிஸ்துதாஸ் இரட்டை அர்த்தத்தில், ஆபாசமாகப் பாடம் நடத்தினார். அதுபற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து டெஸ்ட் நோட்டில் எங்கள் நிலையை எண்ணி `பாரம் தாங்கல தாங்கல...' என்ற சினிமா பாடல் வரியை எழுதினோம். ஒரு மாணவன் குரோமோசோம் என எழுதியிருந்தான்.

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்

அந்த வார்த்தையை வைத்து குழந்தை பிறப்பது பற்றி பாடம் நடத்தியதுடன், மாணவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் பாடல் வரிகள் எழுதியதை பெரிதாக்கினார். ஆசிரியர் கிறிஸ்துதாஸ் இரட்டை அர்த்தத்திலும் குழந்தை பிறப்பது பற்றியும் பாடம் நடத்தியதை தலைமை ஆசிரியர் மற்றும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் தெரிவித்தோம். நடவடிக்கை எடுக்காததால் போலீஸில் புகார் அளித்தோம்" என்றார்.

இந்நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் தவறு செய்யவில்லை எனவும், அவர் மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ``ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கடந்த 24-ம் தேதி 11-ம் வகுப்புக்கு நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக சினிமா பாடலை எழுதி உள்ளனர் இரண்டு மாணவிகள். இதனால் மாணவிகளிடம் பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் சிலர், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இல்லை என அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால், பள்ளிக்கு தொடர்பு இல்லாத ஓர் அமைப்பைச் சேர்ந்த கும்பல் பள்ளிக்குள் அத்துமீறி புகுந்து ஆசிரியரை தாக்க முயன்று, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இரணியல் பள்ளியில் பெற்றோர் முற்றுகை

முதற்கட்டமாக நடந்த அனைத்து விசாரணையிலும் ஆசிரியர் மீது தவறு இல்லை என அறிக்கை கொடுத்த நிலையில், கடந்த 14-ம் தேதி போக்ஸோ சட்டத்தில் ஆசிரியர் கிறிஸ்துதாசை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், ஆசிரியர் கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயல் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவறு செய்யாத ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பொய்யாக போடப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/vkw8TEF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*