``சாதிரீதியா பாகுபாடு பார்க்குறாங்க?!" - புகாரளித்த ஊராட்சி மன்றத் தலைவி; அதிகாரிகள் விசாரணை

0

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், தி.மு.க-வைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சித் தலைவராக சுதா என்பவர் உள்ளார். இவர், பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில்தான், நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவி சுதா, வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை பரபர புகார் மனு ஒன்றை அளித்தார்.

ஊராட்சிமன்ற அலுவலகம்

அந்த புகாரில், ``ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள என்னை கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதிரீதியாக பாகுபாடு செய்து வரும் வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அ.தி.மு.க), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமாரசாமி (தி.மு.க) மற்றும் அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காமல் ஊராட்சி செயலர் நளினி ஆகியோர் செயல்படுகின்றனர்.

அதோடு, நளினியின் கணவர் மூர்த்தி என்பவர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் புகார் மனுவைத் தொடர்ந்து, நேற்று நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார் (தணிக்கை) மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உறுப்பினர்கள் பெயர் பலகை

தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவி சுதாவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று, காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விசாரணை செய்தனர். அதன்பிறகு, சுதா அளித்த புகார் மனுமீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகார் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டியல் சமுதாய ஊராட்சி மன்றத் தலைவி ஒருவர் புகார் கொடுத்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/YWjX6NH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*