பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு பா.ஜ.க-வின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில், கடந்த 10 நாள்களாக, தமிழ்நாடு முழுவதுமுள்ள 60 பா.ஜ.க மாவட்ட அமைப்புகளில் மோடி லீக் கபடி போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் 61,000 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.
இதனையடுத்து இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கான இறுதிச்சுற்று போட்டி மதுரையில் கடந்த 27-ம் தேதி மதுரைக் கல்லூரி விளையாட்டு திடலில் தொடங்கி நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்ற 52 அணிகளுக்கான இறுதிப் போட்டியானது மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரை இறுதிச்சுற்றுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம்(கிழக்கு), சேலம்(மேற்கு) ஆகிய அணிகள் முன்னேறின.
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இரு அணிகளுக்கும் டாஸ் போட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதில் சேலம்(கிழக்கு) அணியினர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, ``இனி ஒவ்வொரு வருடமும் இதுபோன்று கபடி போட்டி நடத்தப்படும். அடுத்த முறை தஞ்சாவூரில் நடைபெறும். அடுத்த முறை முதல் பரிசாக ரூ.30 லட்சம் வழங்கப்படும். தமிழ்நாட்டு வீரர்களை இந்திய அணியில் விளையாட வைப்பதே எங்கள் நோக்கம். இந்த முறை 61,000 வீரர்கள் கலந்துகொண்டது போல், அடுத்த முறை கின்னஸ் சாதனையாக 1 லட்சம் வீரர்களை பங்கேற்கவைக்க தமிழ்நாடு கபடி கழகத் தலைவர் சோலை ராஜா முயற்சி செய்யவேண்டும்.
குஜராத் போன்ற மாநிலங்களிலுள்ள 'கபடி சென்டர் ஆப்ஃ எக்ஸலென்ஸ்'-ஐ தமிழ்நாட்டிலும் விரைவில் கொண்டு வருவோம். மயிலாடுதுறையில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன" என்றார்.
அவருக்கு முன்னர் பேசிய பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன், ``கபடி போட்டி சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. மோடி கபடி என்பது புதிய வார்த்தையாக மாறியிருக்கிறது. இனிமேல் தமிழ்நாட்டில் கபடி விளையாடும் வீரர்கள் `கபடி... கபடி' என்று உச்சரிப்பதற்கு பதிலாக `மோடி கபடி... மோடி கபடி!' என்று உச்சரித்துத்தான் விளையாடுவார்கள்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/NOY8EpK
via
