கால்நடை முகாம்: 3 மணிநேரம் தாமதமாக வந்த அமைச்சர்; தண்ணீர், உணவின்றி தவித்த மாடுகள்!

0

தஞ்சாவூரில் கால்நடை துறை சார்பில் நடைப்பெற்ற சிறப்பு முகாமினை துவக்கி வைப்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல மணி நேரம் தாமதமாக வந்ததால் தீவனம் குடிக்க தண்ணீர் இல்லாமல் மாடுகள் மா... மானு கத்திக் கொண்டே இருந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கால் நடைகளுக்கான சிறப்பு முகாமில் மாடு

தஞ்சாவூர் மாவட்டம் செல்லப்பன்பேட்டையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. காலை 10.30 மணியளவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு முகாமினை துவக்கி வைப்பார் என அறிவிக்கப் பட்டிருந்தது. காலை 8 மணிக்கெல்லாம் விவசாயிகள் மாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்தார். இதனால் மாடுகள் தீவனமின்றி, குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி கத்திக்கொண்டே இருந்தது. மாடு கத்துவதை சமாளிக்க முடியாமல் மாட்டின் உரிமையாளர்களான விவசாயிகள் திணறினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

விவசாயிகள்

இது குறித்து பேசிய விவசாயிகள் சிலர், "அமைச்சர் 10 மணிக்கெல்லாம் வந்துடுவார். அவர் வரும்போது மாடு இருக்க வேண்டும் என கால்நடை துறை அதிகாரிகள் எங்களை அவசரப்படுத்தினர். நாங்க மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் 8 மணிக்கெல்லாம் அழைத்து வந்து கட்டி விட்டோம். பசுமாடு, கன்றுக்குட்டி என மொத்தம் நூறு மாடுகள் இருக்கும்.

அமைச்சர் வருவதற்கு தாமதமானது. மேய்ச்சலுக்கு செல்லாமல் வந்து விட்டதால் கொஞ்ச நேரத்துலேயே மாடுகள் அம்மா அம்மானு கத்த ஆரம்பித்து விட்டது. அதிகாரிகள்கிட்ட கேட்டால் அமைச்சர் இதோ வந்துடுவார்னு சொல்லிக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் எல்லா மாடுகளும் கத்த தொடங்க கால்நடை துறை ஊழியர்கள் மாடுகளுக்கு புல் வாங்கி வந்து கொடுக்க ஓரளவுக்கு சமாளித்தோம்.

மாடு

தஞ்சாவூரில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அதனை முடித்த பிறகே சுமார் 1 மணியளவில் இங்கு வந்தார். முதலில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அமைச்சர் செயல்பட்டிருக்க வேண்டும். திடீரென மாட்டை புது இடத்தில் கட்டியதால் அவை மிரட்சியில் கத்திக் கொண்டே இருந்தன. இது போன்ற நிகழ்ச்சிக்கு வரும்போது இனியாவது ஐந்து அறிவு ஜீவன்களின் நிலையை எண்ணி குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும்" என்றனர்.

பேச்சில இருக்குற அக்கறை...

நிகழ்ச்சியை துவக்கி வைத்து பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "நம் வீட்டில் பிள்ளையாக வளர்க்கின்ற கால்நடைகளுக்கு உடல் உபாதை ஏற்படுவதை சரி செய்வதற்காக இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு துவங்கிய நிகழ்ச்சியில் மாடுகள் அம்மா, அம்மானு கத்தியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்களோ இல்லையோ மாடு அம்மா என்று கத்துவது, நான் சொல்வதை கேட்பது போன்ற உணர்வைத் தருகிறது. நாம் கால்நடைகளுக்கு உரிய மரியாதை தர வேண்டும்" என்றார். அக்கறையாக பேசுகிறார். ஆனால் அவர் குறித்த நேரத்துக்கு வரலையேனு விவசாயிகள் கமெண்ட் அடித்துக் கொண்டே சென்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/9mlzEGs
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*