குழந்தை திருமணம்: சிதம்பரத்தில் இரு தீட்சிதர்கள் கைது; சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு!

0

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தங்களுடைய குழந்தைகள், திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே, இந்த தீட்சிதர்கள் சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து வைப்பதாக புகார்கள் எழுந்துவந்த நிலையில், அண்மை சில வாரங்களாக குழந்தை திருமண புகாரில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மீண்டும் ஒரு குழந்தை திருமண சம்பவத்தில் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள்

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், சிதம்பரம் தீட்சிதர்களின் இரு குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் நடத்தப்பட்டதாம். இந்த குழந்தை திருமண சம்பவம் குறித்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு வந்த தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்... சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்துவைத்த காரணத்திற்காக... சிறுமியின் தந்தையும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் செயலாளருமான ஹேமசபேச தீட்சிதரையும்; சிறுவனின் தந்தை வெங்கடேச தீட்சிதரையும் கைது செய்த போலீஸார், இருவர் மீதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறை காவலில் அடைத்தனர்.

முன்னதாகவே, இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் மற்ற தீட்சிதர்களுக்கும் தெரிந்ததால்... கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயிலின் வாசலின் முன்பு அமர்ந்து நள்ளிரவு வரையில் சுமார் 4 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதினால், சிதம்பரம் நடராஜர் கோயில் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மேலும், இந்த ஒரு வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டுமே, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 வழக்குகள் தீட்சிதர்கள் தரப்பிலானது எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/YWps82E
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*