தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதும் இல்லை, மதிப்பதில்லை. இது ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
எங்களை அழைக்கக்கூடாது என தி.மு.க அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது. மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என ஒன்று உள்ளது என்றால், அது அ.தி.மு.க-தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி.. தி.மு.க -வாக இருந்தாலும் சரி... கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற சரித்திரத்தை உருவாக்கிய கட்சிதான் அ.தி.மு.க. செய்திகளுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சி நாங்கள் இல்லை.
தற்போதைய தி.மு.க அரசு, நிதி வருவாயைப் பெருக்க எந்த ஒரு கட்டமைப்பினையும் செய்யாமல், எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த அரசின் கையாலாகாதத்தனத்தின் காரணமாகத்தான் பால் விலை, தொழில் வரி, மின்கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இன்னும் பல்வேறு கட்டண உயர்வுகளின் அறிவிப்புகளும் வர உள்ளது.
`ஓசி பஸ்ஸில் மக்கள் பயணம் செய்கிறார்கள்’ என, உயர்கல்வித்துறையின் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த பின்பே தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் அமைச்சர். மக்கள் மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் திட்டங்களில் `இலவசம்’ என்ற வார்த்தையை மாற்றி `விலையில்லா திட்டம்’ எனச் சொன்னார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 40 இடங்களிலும் வெற்றி பெறும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/79xQU1a
via
