கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்: எறிபத்த நாயனாரின் பூக்குடலைத் திருவிழா - நிகழ்வின் சிறப்புகள்!

0

கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசித் திருவிழாவை முன்னிட்டு, இன்று எறிபத்த நாயனார் பூக்குடலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னொரு காலத்தில், புகழ் சோழர் என்ற மன்னன் கரூர் மாநகரை ஆண்டுவந்தார். அதே நகரில், சிவகாமி ஆண்டார் என்ற தீவிர சிவபக்தர் வசித்துவந்தார். அவர், நாள்தோறும் அதிகாலையில் எழுந்து, நந்தவனத்திற்குச் சென்று அன்றலர்ந்த பூக்களைப் பறித்துவந்து, பசுபதீஸ்வரருக்குச் சமர்ப்பித்து வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பூக்குடலைத் திருவிழாவில் பக்தர்கள்

அந்த வகையில், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி நாளன்று, நந்தவனத்தில் பூக்களைப் பறித்து, வழக்கம்போல் இறைவனுக்குப் பூஜைக்காகக் கொண்டு செல்லும்போது, சிவகாமி ஆண்டார் முனிவரைப் பட்டத்து யானை கீழே தள்ளி, பூக்குடலையைத் தட்டிவிட்டுச்சென்றது. இதனால், பூக்கள் எல்லாம் கீழே சிதறின. அதைப் பார்த்துக் கோபமுற்ற சிவகாமி ஆண்டார், 'சிவ சிவா' என்று கத்தியவாறு சாலையில் விழுந்துகிடந்தார். அப்போது, அவ்வழியாக வந்த எறிபத்த நாயனார், நடந்ததைக் கேட்டு, சிவபூஜைக்குத் தடை ஏற்படுத்திய யானையையும் அதன் பாகனையும், தனது கையில் வைத்திருந்த இலைமலிந்த வேலால் வெட்டி வீழ்த்தினார்.

இதை அறிந்த புகழ் சோழ மன்னன், படைகளுடன் அங்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது, எறிபத்த நாயனாரின் மீது எந்த விதமான தவறும் இல்லை என்றும், பட்டத்து யானையால்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்றும் அறிந்து, மிகவும் மனம் வருந்தினார். உடனே, ''பட்டத்து யானை இந்த நாட்டுக்குச் சொந்தமானதால் நானும் அதற்கு ஒரு காரணம்" என்று தன் தலையைத் துண்டிக்குமாறு தன்னுடைய உடைவாளை உருவி, எறிபத்த நாயனாரிடம் வழங்கினார். அப்போது சிவபெருமான், உமாதேவியுடன் விண்ணில் காட்சியளித்து, "இறைவனுக்குப் பூக்களால் செய்யப்படும் பூஜையின் அருமை குறித்தும், சிவத்தொண்டர்களின் பக்தியை உலகிற்குத் தெரியப்படுத்தும் வகையிலும் நாம் நடத்திய நாடகமே இது" என்றார்.

பூக்குடலைத் திருவிழாவில் பக்தர்கள்

இதனால் அகமகிழ்ந்த மன்னர், சிவனை மனமுருகி வேண்டிக்கொண்டார். தன்னை வைத்துப் பரம்பொருளான இறைவன் இந்த நாடகத்தை அரங்கேற்றியதை நினைத்து, சொல்லொண்ணா உணர்ச்சிக்கு ஆட்பட்டு நெக்குருகிப்போனார். பின்னர், உயிரிழந்த யானை மற்றும் அதன் பாகர்கள் அனைவரும் உயிர்பெற்றனர். அந்த நிகழ்வு நடந்த அதே இடத்தில்தான், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மகா அஷ்டமியன்று, சிவனடியார்கள் சார்பில் அந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், பக்தர்கள் மத்தியில் அதை நடத்திக் காட்டி வழிபட்டுவருகிறார்கள். இந்த வருடமும் பூக்குடலைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து பக்தர்களும் பூக்குடலை ஏந்தி, ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, தாங்கள் கொண்டுவந்த பூக்களை இறைவனுக்கு வழங்கி வணங்கினார்கள்.

பூக்குடலைத் திருவிழாவில் பக்தர்கள்

ஊர்வலத்தில் புகழ் சோழர் மன்னன், சிவகாமி ஆண்டார், எறிபத்த நாயனார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வர் அலங்கார வல்லியுடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கூட்டமைப்பினர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/mp9iQ3l
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*