தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கயத்தாறு, வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயதான இவர், சமையல் வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார். இவர் சார்ந்த சமுதாயத்தின் பெயரில் அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார். அதே குழுவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவில் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவதில் ஒருவருக்குள் போட்டி ஏற்பட்டுள்ளதாம். அதில், ஒருவருக்கொருவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அவரவரின் தனித்தளங்களிலும் வாக்குவாதம் நீடித்துள்ளது. இந்த நிலையில், அதே குழுவில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த பந்தல்ராஜ் என்பவருக்கும் சுரேஷுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரையும் குழுவில் உள்ளவர்கள் பலமுறை சமாதனம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், சுரேஷூவும் பந்தல் ராஜூவும் போனில் பேசி சண்டையிட்டுள்ளனராம். இந்த நிலையில், பந்தல்ராஜ் தனது நண்பர்களுடன் வந்தனர். கயத்தாறு வடக்குத்தெருவில் உள்ள சுரேஷின் வீட்டிற்குச் சென்று இன்று அதிகாலையில் கதவைத் தட்டியுள்ளனர்.
கதவினை சுரேஷின் தாயார் ரேவதி திறந்துள்ளார். பந்தல்ராஜ் உள்ளிட்ட 6 பேர் ரேவதியைக் கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர். வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனைப் பார்த்த ரேவதி அலறிக் கத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அதற்குள் அந்த கும்பல் காரில் பறந்து சென்றது. உடனடியாக சுரேஷை மீட்டு திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். சமூகம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுதல் தொடர்பான மோதலால் சுரேஷ் கொலை செய்யபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருநெல்வேலியைச் சேர்ந்த பந்தல்ராஜ் உள்ளிட்ட 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் பந்தல்ராஜ் உள்ளிட்ட 6 பேரும் வாட்ஸ்அப் குழுவில் கருத்து மோதலின் விளைவாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/K1YEBhM
via
