கிருஷ்ணிகிரி மாவட்டம், ஓசூர் காமராஜர் காலனிப் பகுதியில் செயல்பட்டுவரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இன்று மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கு அருகே ஏதோ துர்வாடை வீசியதாகச் சொல்லப்படுகிறது. அதைச் சுவாசித்ததால் மாணவ, மாணவிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திடீரென அவர்கள் தலை கிறுகிறுத்து வாந்தி எடுத்து சுருண்டு விழத் தொடங்கினர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸுகள் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பள்ளியில் இருந்த மற்ற மாணவர்களையும் பாதுகாப்பு கருதி, அருகேயுள்ள விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்ததும் பெற்றோர்களும், ஊர் மக்களும் அங்கு கூடினர். மற்ற மாணவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில், அவர்களது பெற்றோர்களும் மருத்துவமனைகளுக்கு பிள்ளைகளை அழைத்துவந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காகவும், மருத்துவப் பரிசோதனைக்காகவும் அழைத்துவரப்பட்டதால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் செப்டிக் டேங்க்கிலிருந்து விஷவாயு வெளியேறியதால்தான் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி வளாகத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டிருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில், செப்டிக் டேங்க்கிலிருந்து விஷவாயு வெளியேறவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படியெனில், மாணவர்கள் பாதிக்கப்பட்ட காரணம் என்ன, அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்னையா, துர்வாடை வீசியதாகச் சொல்லப்படுகிறதே, அது எங்கிருந்து வீசியது என்றும் அக்கம், பக்கத்தில் பார்வையிட்டு அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள்.
இது பற்றி ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யாவிடம் கேட்டதற்கு, ‘‘மாணவ, மாணவிகள் நலமுடன் இருக்கிறார்கள். பாதிப்பில்லாத மாணவர்கள் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 10, 15 மாணவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். செப்டிக் டேங்க்கிலிருந்து விஷவாயு வெளியேறவில்லை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மாணவர்களிடம் ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்போது வரை என்ன காரணம் என்று தெரியவில்லை’’ என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/N3h8VyF
via
