நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தவர் சரத். இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்கு கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்திருக்கிறார். தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், கல்லூரியைவிட்டு வெளியேறிய மாணவர் சரத், ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் பகுதியில் தங்கி உள்ள பத்துக்கு மேற்பட்ட மாணவர்களுடன் சேர்ந்து கஞ்சா போதையில் ஆடல், பாடல் எனக் கொண்டாடியதாகச் சொல்லப்படுகிறது. இதை கண்ட ஊர் மக்கள் ராசிபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்திருக்கின்றனர். இதில், அனைவரும் அளவுக்கு அதிகமான கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது. இதனால், அனைவரையும் கண்டித்த ராசிபுரம் காவல்துறையினர் கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். இதில், சில மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவர்கள் கஞ்சா போதையில் இருப்பதால் கல்லூரியின் விடுதியில் தங்கவைத்து பெற்றோர்களை வந்தவுடன் அவர்களுடன் அனுப்பி வைக்க காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.
அதனடிப்படையில், சக மாணவர்கள் இரவு உணவு அருந்திவிட்டு அனைவரும் அறையில் உறங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், விடுதி பாதுகாவலர் ஆய்வு பணியில் இருந்தபோது சரத் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி பாதுகாவலர், உடனடியாக புதுச்சத்திரம் காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார். அவரது தகவலை அறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர், சரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் இருந்தது குறித்து தன் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால், மனமுடைந்த சரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் சிலர் சரத்தின் இறந்த உடலை தூக்கிச்செல்வது போல் வெளியாகியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சரத் தற்கொலை செய்துகொண்டதை அறிந்ததும், கல்லூரி நிர்வாகத்தினர் சக மாணவர்களை வைத்து சரத் உடலை தூக்கிச்செல்ல வைத்து, போலீஸ் வருவதற்குள் வெளியே அப்புறப்படுத்த வைத்ததாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/C3wYEnV
via
