``அலங்கார லைட்.. கூடுதல் மின் கட்டணம்” - தஞ்சை வியாபாரிகளுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்!

0

தஞ்சாவூர் வியாபாரிகள் தீபாவளி பண்டிகைக்கான வியாபாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கடைகளில் அமைக்கப்படும் சீரியல் செட் லைட் என சொல்லப்படுகிற அலங்கார விளக்குகளுக்குத் தனியாக கூடுதலாக 5% மின் கட்டணம் வசூலிக்கப்படும் என தஞ்சாவூர் மின்வாரியத்துறை வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளது தஞ்சை வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரியம்

கொரோனா பரவல், லாக்டெளன் உள்ளிட்டவையால் கடந்த இரண்டு வருடங்களாக வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர். தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறிவருவதால், அந்த பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர் வியாபாரிகள். குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கான வியாபாரத்தில் அனைத்துத் தரப்பு வியாபாரிகளும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்கார லைட்டுகளுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கபடும் என தஞ்சாவூர் மின்வாரியத் துறை ஊழியர்கள் நகரப் பகுதியில் சீரியல் லைட் அமைத்துள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்று வாய்மொழியாக கூறி வருவது வியாபாரிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டங்கள்

இது குறித்து வியாபாரிகள் வட்டத்தில் பேசினோம். ''வியாபாரிகள் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதனை வியாபாரிகளுக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். இந்தச் சூழலில், தற்போது தீபாவளி பண்டிகை வியாபாரத்தை அனைத்துத் தரப்பு வியாபாரிகளும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது மழை பெய்து வருவதும் வியாபாரத்தை பாதிக்க செய்கின்றன.

தீபாவளி பண்டிக்கைக்காக துணிக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையின் முன்பகுதியில் சீரியல் செட் லைட் எனப்படுகிற அலங்கார விளக்குகள் அமைப்பது வழக்கம். தஞ்சாவூரில் உள்ள பல கடைகளில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்

இதை அடுத்து மின்வாரியத் துறை ஊழியர்கள் அலங்கார விளக்குகள் அமைத்துள்ள ஒவ்வொரு கடைக்கும் நேரடியாக சென்று தங்கள் உயரதிகாரிகள் உத்தரவிட்டு வரச் சொன்னதாக கூறி அலங்கார விளக்கு பயன்படுத்துவதற்குத் தனியாக ஏற்கெனவே பயன்படுத்தியுள்ள மின் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக 5% மின் கட்டணம் வசூலிக்கப்படும் என வாய்மொழியாக கூறி வருகின்றனர்.

ஏற்கெனவே, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து அதற்கான எதிர்ப்புக் குரல்களும் கிளம்பின. இந்தச் சூழலில், சீரியல் செட் லைட்டைப் போடுவதற்கென தனியாக மின் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?

கடந்த ஆட்சியிலும், அதற்கு முன்பும் இப்படியொரு செயல் கடைபிடிக்கப்பட்டதே இல்லை. இந்தப் புதிய நடைமுறை தஞ்சாவூரில் மட்டுமா இல்லை, தமிழகம் முழுவதும் இது போன்ற நிலை வந்திருக்கிறதா என தெரியவில்லை.

தி.மு.க அரசு இதனை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு வியாபாரிகளைக் காக்கின்ற வகையிலான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்'' என்றனர்.

கலர் லைட்

வியாபாரிகள் இந்தக் கவலை குறித்து மின் வாரியத் துறை வட்டத்தில் பேசினோம். ''வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக, வியாபாரத்திற்கு அலங்கார விளக்குகள் அமைத்தால் அதற்கென தனியாக மின் கட்டணம் வசூலிக்கப்படும் என மின் வாரியத்தில் விதி இருக்கிறது.

அவற்றைப் பெரும்பாலான அதிகாரிகள் முறையாக கடைப்பிடித்து வியாபாரிகளிடம் வசூலிப்பது இல்லை. நிரந்தரமாக அலங்கார விளக்குகள் அமைத்திருந்தால் அதற்கென தனியாகவே மின் இணைப்பைப் பெற்றிருக்க வேண்டும் அந்த நடைமுறையும் பின்பற்றுவதில்லை. தஞ்சாவூரில் இதற்கு முன்பு சீரியல் லைட்டுக்கென தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது இல்லை'' என்றனர்.

தஞ்சாவூர் மின்வாரியத் துறையின் மேற்பார்வை பொறியாளர் நளினி என்பவரிடம் பேசினோம். ''கடைகளுக்கு உள்பகுதியில் அலங்கார லைட் அமைத்திருந்தால், அதற்குக் கூடுதல் கட்டணம் கிடையாது. வெளிப்பகுதியில் அமைத்திருந்தால் கட்டாயமாக வசூலிக்கப்படும்.

மின் கட்டணம்

வியாபாரிகளே மின் இணைப்பிற்கான மீட்டர் ரீடிங்கில் நம்பரைக் குறித்துவந்து நேரடியாக கட்டணத்தை செலுத்தி செல்லலாம். அதற்கான ரசீது கொடுக்கப்படும். இதுவரை வசூலிக்கப்படாத மின் கட்டணம் தற்போது தஞ்சாவூரில் வசூலிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

மின் வாரியத்தின் இந்த புதிய நடைமுறையால் வியாபாரிகள் அனைவரும் கொதித்துப் போயிருக்கின்றனர். மின் வாரியமும் தமிழக அரசுகளும் அவர்களின் மனங்களைக் குளிர வைக்குமா?



from மாவட்ட செய்திகள் https://ift.tt/0xX5eCg
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*