ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா: சிறப்பு அபிஷேக அலங்காரங்கள்; திருமுறைப் பாராயணம்; களைகட்டிய தஞ்சை!

0

தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன், உலக மாதேவி சிலைகளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது.

தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திர தினம் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 1037 வது சதய விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கப்பட்டது. இதற்காகப் பெரிய கோயில் முழுவதும் மின்னலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரத்தில் ஜொலித்துத் தங்க கோயிலாகக் காட்சி தந்த பெரிய கோயிலின் அழகைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சதய நட்சத்திரமான இன்று விழாவின் முக்கிய நிகழ்வுகள் வெகு விமர்சையாகக் கொண்டப்பட்டு வருகின்றன. காலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. பின்னர், தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் திருக்கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கினார். தொடர்ந்து, ராஜராஜ சோழன் மீட்டெடுத்த, தேவார நூல்களுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஓதுவார் தேவார நூல்களை யானை மீது வைத்து எடுத்துச் சென்றார். கோயிலில் 48 ஓதுவார்கள், திருமுறை வீதிகளில் தேவாரம் பாடிக் கொண்டு சோழன் சிலையைச் சென்றடைந்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராஜராஜ சோழன் சிலைக்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, சதய விழாக் குழுத் தலைவர், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

கோயிலுக்குள் பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜ சோழன், உலக மாதேவி உலோகசிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சதய விழாவிற்காக ராஜ ராஜ சோழன், உலக மாதேவி சிலைகளுக்கு முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாசார்யர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். இதற்காக ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சதய விழாவைக் காண வந்த பக்தர்கள் சிலைகள் முன்பு மெய் சிலிர்தப்படி ராஜராஜசோழனே போற்றி எனக் கோஷமிட்டபடி வணங்கிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்கள பொருள்களால் பேரபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் பலர் பெருவுடையாரே எனக் கை கூப்பி வேண்டிக் கொண்டனர். சதய விழாவிற்காகத் தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரியவர்கள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து ராஜ ராஜ சோழனை தரிசித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இரவு ராஜராஜசோழன் மற்றும் உலக மாதேவி சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடக்க இருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/uLS0Rbk
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*