வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் மனைவி லதா. இவர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வுக் கூட்டத்துக்கு வந்து, புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், ‘‘பிளஸ்-2 முடித்த என் மகனை வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்க்க முயன்றோம். அப்போது, எங்களுக்கு வேண்டிய நண்பர் சரவணன் மூலம் வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை அணுகினோம். இந்த தமிழ்ச்செல்வனின் தந்தை திருநாவுக்கரசு குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றிவருகிறார். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் ‘சீட்’ வாங்கித் தருவதற்காக 18.07.2021 அன்றைய தேதியில், ரூ.4.50 லட்சம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிய நாளிலிருந்து, ‘அடுத்த வாரம் சீட் கிடைத்துவிடும்; அடுத்த மாதம் சீட் கிடைத்துவிடும்’ என்ற ஒரே கதையை திரும்ப திரும்பச் சொல்லிவந்தார்.
தமிழ்ச்செல்வன் ஓராண்டு ஆகியும் அதே பதிலைத்தான் சொல்கிறார். இதனால், என் மகனின் மேற்படிப்பு தாமதமாகி அவன் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டான். இந்த நிலையில், சமீபத்தில் வேறொரு கல்லூரியில் மகனை சேர்த்துவிட்டோம். இதனால், நாங்கள் கொடுத்தப் பணத்தை தமிழ்ச்செல்வனிடம் திரும்பக் கேட்டோம். அவர் 2 செக்குகளை கொடுத்தார். கடந்த மாதம் 25-ம் தேதி, அந்த செக்குகளை வங்கியில் செலுத்தியபோது, ‘பணம் இல்லை’ என்று திரும்ப வந்துவிட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் சொல்கிறார். காவல்துறையில் பணிபுரியும் அவரின் தந்தையிடம் சொன்னால், ‘என் பையனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பணத்தை என்னிடமா கொடுத்தீர்கள்? அவனிடமே போய்க் கேளுங்கள்’ என்கிறார். எனவே, எங்களுடைய பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் வைக்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
புகாருக்குள்ளான தமிழ்ச்செல்வனின் தந்தையான குடியாத்தம் காவல் நிலைய எஸ்.ஐ திருநாவுக்கரசுவிடம் விளக்கம் கேட்டதற்கு, ‘‘என் பையன் வாங்கிய பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னிடம் இதுபற்றி கேட்க வேண்டாம். ஏற்கெனவே சொல்லிவிட்டேன். இந்தப் புகாருக்குள் என்னை இழுக்க வேண்டாம்’’ என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/9M54dWs
via
