ஜூனியர் மாணவர்களிடம் எல்லை மீறிய ராகிங்; 7 பேர் சஸ்பெண்ட் - வேலூர் சி.எம்.சி விடுதியில் அதிர்ச்சி!

0

வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மாணவர் விடுதி, பாகாயம் பகுதியில் இருக்கிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவர்கள் பலரையும் ஆடைகளை கழற்றச்சொல்லி உள்ளாடையுடன் விடுதி வளாகத்தை சுற்றி வரச்செய்த சீனியர் மாணவர்களின் ‘ராகிங்’ வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோ காட்சியில், மாணவர்கள் பலரும் அரை நிர்வாணத்துடன் வரிசையாக செல்கிறார்கள். ஒருசில மாணவர்களை சேற்றில் படுக்கச்சொல்லியும் அபத்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், முட்டைகளை வீசியெறிவதும் அழுக்குத் தண்ணீரை பீய்ச்சியடிப்பதும், அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

ராகிங் காட்சி

இந்தச் சம்பவம் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. ரகசியமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த காட்சிகள் தற்போதுதான் ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்கள் தங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், சி.எம்.சி ராகிங் தடுப்புக் கமிட்டிக்கும் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில், சீனியர் மாணவர்களால் தங்களுக்கு நேரும் உடல்ரீதியான கொடுமைகளையும் அவர்கள் விவரித்திருக்கிறார்கள்.

‘``ஆடைகளை கழற்றச்சொல்லி விடுதியில் இருக்கும் மேடையில் தங்கள் உடலை காட்சிப்படுத்தச் சொன்னார்கள். விடுதியில் சாப்பிடுவதற்கு முன்பு சீனியர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாத இருட்டான அறைகளுக்கு அழைத்துச் சென்று உடல்ரீதியாக துன்புறுத்தினார்கள். இந்த மாதம் 5-ம் தேதிகூட ராகிங் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்’’ என்று பல தகவல்களை, அந்தக் கடிதத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியிருக்கிறார்களாம்.

ராகிங் காட்சி

இதையடுத்து, புகாருக்குள்ளான சீனியர் மாணவர்களிடம் ராகிங் தடுப்பு கமிட்டிக் குழுவினர் தீவிர விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். முதற்கட்டமாக, சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம், இது தொடர்பான புகார் டெல்லியில் இருக்கும் ராகிங் தடுப்புப் பிரிவினருக்கும் சென்றிருக்கிறது.

இதுபற்றி சி.எம்.சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, ‘‘அந்தக் காட்சிகள் எங்கள் மாணவர் விடுதியில் நடந்தவைதான். இதுதொடர்பாக ராகிங் தடுப்புக் கமிட்டியினர் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும் ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்திருக்கிறோம். சந்தேகத்தின்பேரில், 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். முழு விசாரணைக்குப் பின்னர் இந்த ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறைக்கு இதுவரை எந்தப் புகாரும் வரைவில்லை என்கிறது எஸ்.பி அலுவலக வட்டாரம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/7EMCmwD
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*