`டிக்கெட் எடு!’ - கண்டிப்பு காட்டிய நடத்துனர்... மனம் குமுறிய மாற்றுத்திறனாளி- அதிகாரிகள் நடவடிக்கை!

0

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ஃபாசில் (20). இவருக்கு பிறவியிலிருந்தே பார்வைக்குறைபாடு இருந்திருக்கிறது. அத்துடன் இரண்டு கண்களும் தெரியாது. ஆனாலும், வீட்டிலேயே முடங்கிப் போகாமல், படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

தினமும் முக்கணாமலைப்பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு அரசுப் பேருந்தில் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் (16-ம் தேதி) வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். பின்னர் கல்லூரி முடித்து மதியம் புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் வழியாக  மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியிருக்கிறார். அப்போது, முகமது ஃபாசிலிடம் டிக்கெட் எடுக்கும்படி பேருந்து நடத்துனர் கேட்டிருக்கிறார். உடனே முகமது ஃபாசில், தன்னுடைய அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்து காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது நடத்துனர், `டிக்கெட் எடுத்தால், காலாடிப்பட்டி சத்திரத்துக்குப் போகலாம். இல்லையென்றால் கீழே இறக்கிவிடுவேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாகத் தெரிகிறது. அதையடுத்து, வேறு வழியின்றி மாணவன் முகமது ஃபாசில் ரூ.15 கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டு காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கியிருக்கிறார்.

மாற்றுத்திறனாளி பஸ் பாஸ் காலாவதி ஆகிவிட்ட நிலையில், அந்த மாணவர் விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அடையாள அட்டையைப் பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில், வீட்டுக்குச் சென்ற முகமது ஃபாசில், "எனக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் போன்று, மாற்றுத்திறனாளிகள் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது" என்று வருத்தத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், அவர் அந்த வீடியோவில், பேருந்தில் பல பயணிகள் இருந்தும், தனக்காக ஒருவர்கூட பேசவில்லை என வேதனை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளான நிலையில், புதுக்கோட்டை போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சம்மந்தப்பட்ட பேருந்து நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை

இது தொடர்பாக, மாணவன் முகமது ஃபாசிலிடம் பேசினோம். ``சம்மந்தப்பட்ட நடத்துனரை வேலையைவிட்டு நீக்க வைப்பது என் நோக்கமில்லை. என்னைப் போன்று இனி யாருக்கும் இப்படி ஒரு சம்பவம் நேரக்கூடாது என்று நினைத்துதான் இந்தச் சம்பவத்தை வெளியே கொண்டு வந்தேன். அவருக்கு வேலை போனால், அவருடைய குடும்பம் சிரமப்படும். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம். இது தொடர்பாக பரிசீலியுங்கள். `மாற்றுத்திறனாளிகளை மரியாதையாக நடத்தினால் போதும்' என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். நான் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன், எங்களை மனரீதியாக பாதிக்கவிடாமல் பார்த்தால் மட்டும் போதும்" என்றார் உருக்கமாக.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/tdZym3g
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*