ஆயுதத்தைத் தூக்கியெறிந்த பெண் மாவோயிஸ்ட் - மனம் திருந்தியதால் தமிழக அரசு செய்த உதவி!

0

ர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா. 40 வயதான இந்தப் பெண், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுவந்தார். இவர், கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மாவோயிஸ்ட் அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணியாற்றியிருக்கிறார். மது, நேத்ரா, விண்டு எனப் பல பெயர்களிலும் வலம்வந்திருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்த பிரபா மீது கர்நாடகாவில் மட்டும் 44 ஆயுத வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மனம் திருந்திய பிரபா

பிரபாவின் தலைக்கு அந்த மாநில அரசு 5 லட்சம் ரூபாய் சன்மானமும் அறிவித்திருந்தது. மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்த பிரபாவின் கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி மீதும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி, கேரள போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில், பிரபா மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறி, பொதுச் சமுதாயத்துடன் இணைந்து அமைதியான முறையில் வாழ விரும்புவதாக திருப்பத்தூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி, திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன் முன்பு அவர் சரணடைந்தார். பின்னர், வேலூர் அருகேயுள்ள அரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். பிரபாவிற்குப் பக்கவாதம் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதால், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின்கீழ் பிரபாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மனம் திருந்தி வாழ்ந்துவரும் மாவோயிஸ்ட் பிரபாவின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ‘ஆவின்’ பால் பூத் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று அந்தக் கடையின் திறப்பு விழா நடைபெற்றது.

கடையை திறந்துவைத்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன்

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், க்யூ பிரிவு எஸ்.பி கண்ணம்மாள், வேலூர் எஸ்.பி ராஜேஸ் கண்ணன், திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன், ராணிப்பேட்டை எஸ்.பி தீபாசத்யன் உட்படப் பலதுறை அதிகாரிகள் கலந்துகொண்டு, கடையைத் திறந்துவைத்து விற்பனையைத் தொடங்கிவைத்தனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், ‘‘சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மனந்திருந்தி வாழ விரும்பினால், அவர்களுக்குக் கட்டாயம் நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Oc3eIYj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*