``ஓ.பி.எஸ்ஸுக்கு தேவர் அருள் இல்லை; உதயநிதிக்கு அரசியல் அறிவு வளரணும்" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

0

" உங்கள் ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததால்தால், மழைநீர் வடிகால் பணி தாமதம் என்கிறார்களே?"

``குறைச்சொல்லும் நேரம் இது இல்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கும்நேரத்தில், நீர் நிலைகள், வடிகால் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டிய நேரம் இது. ஆனால், அபாண்டமான குற்றசாட்டுகளை எதிர்க்கட்சி மீது சுமத்தவேண்டும் என்பதை ஆளும்கட்சி கடமையாக வைத்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றத்தில் மட்டும் 3,327 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக இருக்கிறதா? போதாத குறைக்கு 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாமல் 80 சதவிகிதம் பூர்த்தியாகிவிட்டதாக கூறுகிறார்கள்."

சென்னை மழை

" ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்களே?"  

"இரண்டு சம்பவத்திலும் ஆணையம் அமைத்ததே எடப்பாடியார் தான்.. அதனால்தான் முழு அறிக்கை வெளியாகி, விவாதங்கள் நடக்கிறது. இதில் உரிமை கொண்டாட தி.மு.க-வுக்கு தார்மீக உரிமை கூட இல்லை. அவ்வளவு ஏன் தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையம் அறிக்கையெல்லாம் கிடப்பில் கிடக்கிறது. அதைப்பற்றி அவர்கள் பேசத் தயாரா? "

``ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய அறிக்கையில் உங்கள் தரப்பில் இருக்கும் விஜயபாஸ்கர் பெயர் அடிப்பட்டிருக்கிறதே?"

"இதில் நான் கருத்துச் சொல்ல முடியாது. சம்பந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும்."

ஆறுமுகசாமி ஆணையம்

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி-யை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி கூறியது பொய் என்பது உறுதியாகி இருக்கிறது?"

``ஏதோ இதற்கு முன்பு தமிழகத்தில் கலவரம் நடக்காதது மாதிரிவும், துப்பாக்கிச் சூடே நடக்காததுபோலவும்... சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் இதுதான் முதல் துப்பாக்கிச்சூடு போல பேசுகிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எந்த முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். கலவரம் நடக்கும்போது, அங்கிருந்த மாவட்ட நிர்வாகம் தான் பணிகளை மேற்கொள்ளும். முதல்வர் செய்திச் சேனல்களை பார்த்து தெரிந்துக் கொள்ள கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கிறதா... அது என்ன தேசவிரோத குற்றமா?"

``மாநிலத்தில் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தை செய்திச் சேனலை சாதாரண மக்கள் பார்த்து தெரிந்து கொள்வதற்கும் முதல்வர் தெரிந்து கொள்வதற்கும் வித்தியாசமில்லையா?"

``உளவுத்துறை போன்ற அமைப்புகள் விஷயத்தை தன்னிடம் சொல்லவில்லை என்று எடப்பாடியார் மறுக்கவில்லை. சம்பவம் நடக்கும்போது தலைமைச் செயலகத்திலேயேதான் அவர் இருந்தார். அரசு அமைப்புகள் தன்னிடம் சொல்லும் ரகசிய தகவல்களை முதல்வர் எப்படி வெளியே சொல்ல முடியும்?"

ஆர்.பி.உதயகுமார்

``கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அ.தி.மு.க ஒரு அறிக்கையோடு கடமையை முடித்துவிட்டதே?"

``நாடு முழுவதும் ராமஜென்ம கலவரம் நடந்தபோது, தமிழகம் அம்மா ஆட்சியில் அமைதியாக இருந்தது. 1998-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற கோவை தொடர் குண்டுவெடிப்பு போலவே, தற்போதும் தி.மு.க ஆட்சியில் பயங்கரவாதம் வேரூன்றி தலைதூக்குகிறது. இதை தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆனால், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தெரியாமல் குழந்தை தனமாக பேசுகிறார். பயங்கரவாத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்."

``ஆனால், என்.ஐ.ஏ பாஜகவின் கிளை அமைப்புபோல செயல்படும் என்கிறார்களே?"

``முதல்வர்தான் விசாரணையை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தார். அப்படி இருந்தும், இதுபோன்ற கருத்துக்களை அவர்களின் கூட்டணி கட்சியினரே கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது சரிதான்."

கோவை கார் வெடிப்பு

``கடந்த 10 ஆண்டுகளாக மதுவிற்பனை செய்த நீங்கள், தற்போது திபாவளி பண்டிகைக்கான மதுவிற்பனை குறித்து கவலைப்படுவது நியாயமா?"

``எதிர்க்கட்சியாக இருக்கும் போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வீடு முன் நின்று அவர்தான் போராட்டம் செய்தார். இப்போது ஆளும்கட்சியாக வந்தபின்னர், மதுவிற்பனை கொடிக் கட்டிபறக்கிறது."

ஆர்.பி.உதயகுமார்

``அப்படியென்றால், இப்போது நீங்கள் எதிர்க்கட்சி என்பதால் டாஸ்மாக் குறித்து சம்ரதாய கவலைபடுப்படுகிறார்களா?"

``அப்படியில்லை... எங்கள் ஆட்சியில் படிப்படியாக 500 கடைகளை குறைத்தோம். ஆனால், தற்போது டாஸ்மாக் கடைகளில் அமைச்சருக்கு பணம் கொடுத்துவிட்டு, ஓப்பன் பார் வைக்கும் அளவுக்கு அதை விரிவு படுத்திருக்கிறார்கள். தனிநபர் சாராய சாம்ராஜ்யம் நடக்கிறது என்பதை தான் அப்படி குறிப்பிட்டேன்."

" அண்ணா கொள்கையை பின்பற்றுவதாக கூறும் நீங்கள் தீபாவளிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துவது சரியா?"

" அண்ணா கொள்கையைதான் நாங்கள் கடைபிடிக்கிறோம். ஆனால், எம்.ஜி.ஆர், அம்மா வாழ்த்துச் சொன்னார்களே... கொள்கையை மாற்றிக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், மக்கள் எதிர்பார்ப்பை முதல்வராக நிறைவேற்றவேண்டும்."

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி


" கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவிட்டு மதுரையில் கட்டமைப்பு சரியில்லாதபோது முதலீட்டாளர்கள் வானத்திலிருந்தா வருவார்கள் என்று விமர்சனம் செய்வது வேடிக்கையாக இல்லையா?"

" மதுரையில் ஐ.டி பார்க் அமைக்க தேர்வான இடம் அருகே, மய்ய பேருந்து நிலையம், பூ மார்க்கெட் என நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இதை முதலீட்டார்கள் விரும்ப மாட்டார்கள். நான் அமைச்சராக இருந்தபோது பாண்டிக் கோயில் அருகே ஐ.டி பார்க் திறக்கப்பட்டுள்ளது. அதை மேம்படுத்த வேண்டும்."

"ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டவர் என்று ஓ.பி.எஸ் விமர்சனம் செய்யும் நீங்களும்தான் பல முறை நிலைப்பாட்டை மாற்றிருக்கிறீர்களே?"

" அம்மா மறைவுக்கு பிறகு எல்லாரும் சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கிவிடவேண்டும் என்று கட்சியினர் தீர்மானம் போட்டார்கள். அதைதான் நான் வழிமொழிந்தேன். இப்போது கட்சியினர் எடப்பாடியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு, இந்த நிமிடம் வரை அதே நிலைபாடில்தான் நான் இருக்கிறேன். ஆனால், ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்

"  அ.தி.மு.க ஆட்சியில் துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி ரூபாய் வரை பேரம் நடந்தாக முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டிருக்கிறாரே?"

" இதற்கு சம்பந்தப்பட்ட  துறையின் முன்னாள் அமைச்சர் அன்பழகன் தெளிவாக கூறிவிட்டார். ஆளுநருக்கும் ஆட்சியாளருக்கு இருக்கும் புரிதலின் அடிப்படையில்தான் மரபுவழியில்தான் நியமனம் நடக்கிறது. இருந்தபோதும் துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு சம்பந்தமில்லை. தேடுதல் குழுதான் முடிவு செய்கிறது. "


" தமிழகத்தில் 73 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து சொல்லும் நீங்கள், 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?

" எங்கள் ஆட்சி முடியும்போது 60 லட்சம் இருந்தது. இப்போது 73 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் வைத்திருந்தோம். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன திட்டம் வைத்தீர்கள் என்பதே எனது கேள்வி."

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

" உங்களின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்காக சட்டமன்றத்தே புறக்கணிப்பது நியாயமா?

" அ.தி.மு.க-வின் பொன்விழா நிறைவுநாள் விழாவை மழுங்கடிக்கவே, அதேநாளில் (17.10.2022) சட்டமன்றத்தை திமுக கூட்டியது. இரண்டாவதாக துணைத்தலைவர் என்பது எனக்கானதில்லை. அது எங்களின் உரிமை பிர்சனை. அதை மறுத்ததால்தான் சட்டமன்றத்தை புறக்கணித்தோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை, எங்கள் பொதுச் செயலாளர் பக்கத்தில், அதுவும் துணைத் தலைவர் என்ற பொறுப்பில் அமரவைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். அவரது விருப்பத்துக்கெல்லாம் எங்களால் நடக்க முடியாது. குறிப்பாக அப்படி ஒரு பதவியே இல்லை என்று கூறிவிட்டு, ஓ.பி.எஸ்-ஸை, துணைத் தலைவர் என்று பேச அழைக்கிறார் சபாநாயகர். அதன் உள்நோக்கம் என்ன? இதேபதவியில் கடந்த 5 ஆண்டுகளாக துரைமுருகன் இருந்திருக்கிறாரே... உங்களுக்கு ஒரு நீதி... எங்களுக்கு ஒரு நீதி?"

" தேவர் ஜெயந்திக்கான தங்க கவசத்தை கொடுக்கும் உரிமையை உங்களால் பெற முடியவில்லையே... இது ஓ.பி.எஸ்-ஸுக்கு வெற்றிதானே?"

" தங்க கவசத்தை தேவருக்கு சாத்தவிடாமல் தடைசெய்து, பழியை எங்கள்மீது சுமத்த ஓ.பி.எஸ் சூழ்ச்சி செய்கிறார் என்று எங்களுக்கு தகவல் வந்தது. அதன்படிதான், நீதிமன்றத்துக்கு நாடினோம். ஆனால், வங்கியில் இருந்து கவசத்தை வருவாய்துறை பெற உத்தரவிட்டது நீதிமன்றம். அப்படி தடையில்லாமல் தங்க கவசம் சாத்தப்படவேண்டும் என்று மேல்முறையிடு செய்யவில்லை. இதில் எடப்பாடியின் மதிநுட்பமும் இருக்கிறது. இதுவரை கவசத்தை எடுத்துக் கொடுத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இந்த முறை தேவரின் அருள் இல்லை."

ஆர்.பி.உதயகுமார்

"தேவரின் அருள் இல்லாததால்தான் எடப்பாடியால் பசும்பொன் வரமுடியவில்லையோ?"

"அப்படியெல்லாம் இல்லை. எடப்பாடி முதல்வராக இருந்துபோது தொடர்ந்து ஜெயந்தி விழாவில் பங்கேற்று இருக்கிறாரே... தேவரின் ஆசி இருப்பதாதால் இது நடந்தது. ஆனால், தற்போது எங்களுக்கும், ஓ.பி.எஸ்., சசிகலா என மூவருக்கும் அடுத்தடுத்து நேரம் ஒதுக்கி இருக்கிறது தி.மு.க அரசு. நாங்கள் எப்போதும் பலவீனமாக இருக்க வேண்டுமென்றே தி.மு.க நினைக்கிறது. அதை எடப்பாடியார் முறியடிப்பார்."

" பசும்பொன்னில் 'எடப்பாடி வாழ்க' என்ற கோஷத்தால் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறதே?"

"  ஒரு பிரச்னையும் இல்லை.. சிலர் செயற்கையாக திட்டமிட்டு அதுபோன்ற ஒரு ஏற்பாடை செய்திருந்தார்கள். மறுநாள் கூட நான் அங்கு சென்றபோது எந்த சலசலப்பும் இல்லையே"  

" தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இருப்பது அண்ணன் தம்பி போட்டி என்று கே.என்.நேரு கூறுயிருக்கிறாரே?"

" திராவிடர் கழகத்தில் இருந்து அரசியல் கட்சியாக பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க உருவானது. அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்.ஜி.ஆர் தலைமையில்  அ.தி.மு.க உருவாகியது. இது திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி தான். ஜமீன்களும், மிட்டா மிராசுகளும், அதிபர்களும்தான் தேசிய கட்சிகளில் அரசியலில் ஈடுபட முடிந்தது. தலைவர் தொண்டன் என்ற நிலையை அண்ணா மாற்றி, தலைவர் அண்ணனாகவும், தொண்டர்கள் தம்பிகளாகவும் கருதினார். அதனால்தான் தற்போதுவரை தேசிய கட்சிகளுக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை. திராவிட இயக்கங்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதன்படி, திராவிட இயக்கத்தில் இருக்கும் எல்லாரும் அண்ணன் தம்பிகள்தான்.  அதேநேரத்தில் தமிழக மக்களுக்கான சமூகநீதியை அ.தி.மு.கதான் அதிகமாக மீட்டெடுத்து உள்ளது."

ஆர்.பி.உதயகுமார்

" தயவு செய்து ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் போல இருக்காதீர்கள் என்று திருமண விழா ஒன்றில் உதயநிதி பேசிருக்கிறாரே?"

" உதயநிதிக்கு அரசியல் அறிவு வளரவேண்டும் என்பதே இது காட்டுகிறது. கருத்து வேறுபாட்டால்தானே தி.மு.க-வில் இருந்து எம்.ஜி,ஆர்., வைகோ உள்ளிட்டவர்கள் வெளியே சென்றார்கள். பொதுவுடமை கட்சியிலேயே இருபிரிவுகளாக இருக்கிறார்களே. கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டு, அதில் எதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்தான் கட்சியை வழிநடத்த முடியும்.  அவ்வளவுஏன், தற்போது தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் பாதிபேர் அ.தி.மு.க காரர்கள்தானே..."



from மாவட்ட செய்திகள் https://ift.tt/4XvlN3W
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*