ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரின் 3-வது மகள் ரேஷ்மா லதாவுக்கும், சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சென்னையில் கணவருடன் தங்கியிருந்த ரேஷ்மா, தலைப் பிரசவித்திற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்தார். குழந்தைப் பிறந்த நிலையில் தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தனியாகச் சென்றாராம். தனது பச்சிளம் குழந்தையை அவர் தூக்கிச்செல்லவில்லை. மாலை நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், பெற்றோர் போன் செய்திருக்கிறார்கள்.
‘சுவிட்ச்-ஆஃப்’ என வந்ததால் பதறிப்போன பெற்றோர், பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். ‘எங்குச் சென்றார்?’ என்ற தகவலே கிடைக்காததால், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், வாலாஜாபேட்டை அருகேயுள்ள சாத்தம்பாக்கம் காட்டுப்பகுதி, கால்வாய் தண்ணீரில் இளம்பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக இந்த மாதம் 7-ம்தேதி வாலாஜாபேட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. எஸ்.பி தீபாசத்யன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்துச்சென்று பார்வையிட்டனர். அடையாளம் தெரியாத அளவுக்கு இறந்தவரின் சடலம் அழுகியிருந்ததால், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் காணாமல்போன இளம்பெண்களின் பட்டியல்களை சேகரித்து, அடையாளம் காண முயன்றனர். அதில், இறந்தவர் ரேஷ்மா என உறுதியானது.
இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார் சடலம் கிடந்தப் பகுதியை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ரேஷ்மாவின் கொலைக்கான காரணம் தெரியவந்தது. கேமராவில் பதிவான காட்சி ஒன்றில், அவர் கடைசியாக ராணிப்பேட்டை அருகேயுள்ள மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவருடன் பைக்கில் செல்வது பதிவாகியிருக்கிறது.
இந்தக் குமரன் யாரென்று விசாரித்ததில், அவர் ரேஷ்மாவின் முன்னாள் காதலன் என்பதும், திருமணத்துக்குப் பின்னரும் இருவரும் தொடர்பில் இருந்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. குமரனுக்கும் வேறொரு பெண்ணுடன் திருமணமாகி, அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த நிலையில், கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் தாய் வீட்டிலேயே இருந்துவந்த ரேஷ்மா, முன்னாள் காதலன் குமரனிடம் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சம்பவத்தன்று இருவரும் பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத அந்தக் கால்வாய் பகுதிக்குச் சென்றிருப்பதால், ரேஷ்மாவின் கொலையில் குமரனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் செல்போன் சிக்னலின் உதவியுடன் அவரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/zpS8MRD
via
