சி.பி.எம் பெண் மேயரை கணவர் வீட்டுக்குப் போகச்சொன்ன காங்கிரஸ் எம்.பி; கேரளாவில் பரபர விவாதம்!

0

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக சி.பி.எம் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் இருக்கிறார். கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே மேயர் ஆனதால் இந்தியாவின் இளம் மேயராக அறியப்பட்டார் ஆர்யா ராஜேந்திரன். இவர் சில மாதங்களுக்கு முன், அவர் சார்ந்துள்ள சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ சச்சின்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சச்சின் தேவ், கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

திருமணம் முடிந்து பாலுச்சேரி சென்ற பிறகும் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மேயர் பணியையும் தொய்வில்லாமல் செய்து வருகிறார். இந்த நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 295 தற்காலிக பணியாளர்களை நியமிப்பதற்காக சி.பி.எம் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனிடம், கட்சி நிர்வாகிகள் மற்றும் அனுதாபிகளின் லிஸ்ட்டை மேயர் கேட்டதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் எம்.பி ஜெபி மேத்தர்

அந்தக் கடிதத்தை தான் எழுதவில்லை என ஆர்யா ராஜேந்திரன் மறுத்தார். தனக்கு அப்படி ஒரு கடிதம் கிடைக்கவில்லை என சி.பி.எம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பனும் தெரிவித்திருந்தார். ஆனால், மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திருவனந்தபுரம் மேயர் அலுவலகம் முன் தொடர் போராட்டத்தை நடத்தின. இதனால் மேயர் அலுவலகத்துக்கு மாற்றுப்பாதை வழியாக சென்று, தனது இருக்கையில் அமர்ந்தார் ஆர்யா ராஜேந்திரன். மேலும், அந்தக் கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டது என மேயர் ஆர்யா ராஜேந்திரன் கூறிவந்தார்.

போராட்டம் பெரிய அளவில் வெடித்ததால், இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். மேயர் ஆர்யா ராஜேந்திரனிடமும், சி.பி.எம் மாவட்ட செயலாளரிடமும் விசாரணை நடத்திவிட்டு அந்த கடிதம் போலியானது என்றும், அதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், கிரைம் பிரான்ச் அதிகாரிகள் மாநில டி.ஜி.பி-க்கு ரிப்போர்ட் அளித்துள்ளனர். இது, ஆர்யா ராஜேந்திரனை பாதுகாக்கும் பினராயி விஜயன் அரசின் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஆர்யா ராஜேந்திரன்

மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என, மகிளா காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் கோஷம் எழுப்பிய காங்கிரஸ் பெண் எம்.பி ஜெபி மேத்தர், "திருடிய பணத்துடன் மேயர் குட்டியே கோழிக்கோட்டுக்கு போ..." என கோஷம் எழுப்பி உள்ளார். குழந்தைகளை அழைப்பது போன்று மேயர் ஆர்யா ராஜேந்திரனை ’குட்டி’ என அழைத்து, அவரை கணவர் வீடான கோழிக்கோட்டுக்குப் போகும்படி காங்கிரஸ் எம்.பி கூறியது தன்னை கொச்சைப்படுத்தும் செயல் என ஆர்யா ராஜேந்திரன் கொந்தளித்துள்ளார். ``ஏழு நாள்களுக்குள் பத்திரிகைகள் மூலம் தனது கருத்தை ஜெபி மேத்தர் திரும்பப்பெறுவதுடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என கூறிய ஆர்யா ராஜேந்திரன் வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி ஜெபி மேத்தர், ``கணவருடைய வீடு மோசமான இடம் என யாராவது சொன்னால் அது கேரளத்தின் அனைத்து கணவன்மார்களையும், ஆண்களையும் அவமானப்படுத்தும் செயல். ரம்யா ஹரிதாசையும் நாங்கள் குட்டி எனதான் அழைத்தோம், அதுபோலதான் மேயர் குட்டி என அழைத்துள்ளோம். எனது கருத்தை திரும்பப்பெற முடியாது, சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்றார்.

போராட்டத்தில் ஜெபி மேத்தர் எம்.பி

சி.பி.எம் பெண் மேயரை குட்டி என அழைத்து கணவர் வீட்டுக்கு போகச் சொன்ன காங்கிரஸ் எம்.பி-யின் செயல், கேரளாவில் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Ub0FtLx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*