தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கோவை தனி கவனம் பெறும். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கோவை மாவட்டத்தை ஸ்வீப் அடிக்க, 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றியை பெற்றது. முக்கியமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை பார்முலா பேசு பொருளானது.
ஹாட்பாக்ஸ், வெள்ளி கொலுசு, பணம் என்று பரிசு மழை கொட்டியது. இந்நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.
கோவை தேர்தல் ரேஸில் எப்போதும் அதிமுக தான் முன்னிலை வகிக்கும். ஆனால், இந்த முறை திமுக தான் முதலில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவுப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி உருவாக்கும் பணியை திமுக தொடங்கியுள்ளது.
அதன்படி 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் கோலப் போட்டி நடைபெற்றுள்ளது. பெண் வாக்காளர்களை கவரும் விதமாகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பூத் வாரியாக 3,069 இடங்களில் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திமுக பூத் வாரியாக ஹாட்பாக்ஸ்களை இறக்கியிருப்பது என்று அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையடுத்து,அதிமுகவும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடங்க உள்ளனர். சமீபத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “எப்பவும் நம்மதான் தேர்தல் வேலைய முதல்ல தொடங்குவோம். இப்ப அவங்க பூத் கமிட்டி அமைக்க தொடங்கிருக்காங்க.
அவங்களால முழுசா எல்லாம் பூத் கமிட்டி போடவே முடியாது. நம்மதான் இங்க பெரிய கட்சி. வீதிக்கு இரண்டு பேர் அடிப்படைல பூத் கமிட்டிக்கு 18 பேரை நியமிக்கணும். உடனடியா இந்த வேலைய தொடங்குங்க.” என்று உத்தரவு போட்டிருக்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g4nTHO
via
