தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் எத்தனை தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது?, இந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு எந்தளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து, மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்ததாவது,
``தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டின் 602 நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.
2020ம் ஆண்டில் 755 நிறுவனங்களும், 2021ம் ஆண்டில் 1,103 நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. 2022ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை 1,501 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 2019-ம் ஆண்டில் 344 நிறுவனங்களும், 2020-ம் ஆண்டு 380 நிறுவனங்களும், 2021-ம் ஆண்டில் 515 நிறுவனங்களும், 2020-ம் ஆண்டில் நவம்பர் 30 -ம் தேதி வரை 661 நிறுவனங்களும் ஸ்டார்ட் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க ஒதுக்கப்பட்ட முதலீடு குறித்து எந்த தகவலும் சேமிக்கப்படவில்லை. ஸ்டார்ட் அப் திட்டங்களை தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் "ஸ்டார்ட் அப்" திட்டத்தின் மூலம் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது" என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த எம்.பி., சு.வெங்கடேசன் இதுகுறித்து கூறுகையில், ``புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90-லிருந்து லிருந்து 95 சதவிகிதம் வரை தோல்வி அடைவதாக வரும் செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளனவா? அரசின் கணக்குகள் மேற்கூறிய ஊடக ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறதா? இல்லையென்றால் அரசின் கணக்குப்படி தோல்வி சதவீதம் எவ்வளவு? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
இதற்கு அமைச்சர் அளித்த பதிலில் '1961 நடவடிக்கை ஒதுக்கீடு விதிகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்வர்த்தக வளர்ச்சித் துறையின் (DPIIT) கீழ் வருகிறது. அத்துறை தந்த தகவல்களின்படி இந்திய அரசு ஸ்டார்ட் அப் முன்முயற்சி குறித்து விரிவான அணுகுமுறையை வகுத்துள்ளது. இதனால் தேசத்தின் ஸ்டார்ட் அப் சூழல் முறைமை முதிர்ச்சி அடைந்து உலகின் மூன்றாவது பெரும் ஸ்டார்ட் அப் சூழல் முறைமையாக வளர்ந்துள்ளது.
640 மாவட்டங்களில் 84,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 45 சதவிகித நிறுவனங்கள் இரண்டாம், மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 8.4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் ரூ 8000 கோடி ரூபாய் மதிப்புள்ள யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளன, என்ற அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 90 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அல்ல. பிரபல வணிக இதழ்களின் ஆய்வுகள் தந்துள்ள தகவல்கள் ஆகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் என்ற நிலையிலிருந்து வேலை தருபவர்களாக மாறி விட்டார்கள் என்று பிரதமர் உட்பட அமைச்சர்கள் தம்பட்டம் அடித்தார்கள்.
ஒரு அறிவிப்பை பரபரப்பாக வெளியிட்டு விளம்பரம் தேடுவது, பிறகு அதன் வெற்றி தோல்வியைக் கூட மதிப்பிட அளவுகோல் வைத்திருக்காமல் அடுத்த பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது என்பதே அரசின் வாடிக்கையாகிவிட்டது.
எவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது பற்றி மையப்படுத்தப்பட்ட தகவல்களே அரசிடம் இல்லை என்று அமைச்சர் கூறுவது அதிர்ச்சி தருகிறது. வேலையின்மை குறித்தும் அரசிடம் தகவல் சேகரிப்பு இல்லை. சி.எம்.ஐ.இ விபரங்களை வெளியிட்டால் ஏற்க மாட்டார்கள். சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டால் உள்நோக்கம் கூறுவார்கள். இது என்ன நியாயம்? அரசு தனது திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/SKtBoI6
via
