திருவண்ணாமலை மாவட்டம், படைவீடு அருகேயுள்ள கேசவபுரம் கிராமத்தில், கமண்டல நதிக்கரையோரம் அமைந்திருக்கிறது காளியம்மன் திருக்கோயில். இக்கோயில் கருவறைக்குள் ஒரு சிற்பத்தொகுதியும், அதன் எதிரில் ஒரு நடுகல் இருப்பதையும் ‘சம்புவராயர்’ ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் அமுல்ராஜ் மற்றும் வரலாற்று ஆய்வாளர் விஜயன் இருவரும் கண்டறிந்து, ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றி முனைவர் அமுல்ராஜ் கூறுகையில், ‘‘கேசவபுரம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த சிற்பத்தொகுதி மிகவும் முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். இச்சிற்பம் கி.பி 14-ம் நூற்றாண்டைச்சேர்ந்த ‘வென்று மண்கொண்டான்’ என்னும் ஏகாம்பரநாத சம்புவராயரின் பள்ளிப்படைக் கோயிலாகும். சம்புவராய மன்னர்களில் தனியரசையே கி.பி 1322-ல் அமைத்தவர்தான் இந்த வென்று மண்கொண்ட சம்புவராயர். மிகவும் புகழ்பெற்று, ‘சகலலோக சக்கரவர்த்தி; சென்ற திசை வென்றான்’ போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றவர் இவர். இவரது தனியரசு 1339 வரை நிலைத்திருந்தது’’ என்கிறார்.
வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் தெரிவிக்கையில், ‘‘கேசவபுரம் கிராமத்தில், காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள சிற்பங்கள் வென்று மண்கொண்டானின் பள்ளிப்படை கோயில் சிற்பங்கள்தான். சிற்பத்தொகுதியில் மன்னனும், அவரது தேவியர்களும் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். சுமார் 2 அடி உயரம்; 3 அடி அகலம் கொண்ட கற்பலகையில் ஓர் அழகிய திருவாசி அலங்கரிக்க, அதன்கீழ் வென்று மண்கொண்டான் கம்பீரமாக சடைமுடித்த கொண்டையுடனும், முகத்தில் அழகான மீசையுடனுமாக அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் வலப்புறம் இருவரும், இடப்புறம் மூவருமாக 5 மகளிர் வணங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் பட்டத்து ராணியும், துணைவியர்களுமாக இருக்கக்கூடும்.
இவர்களுக்கு மேற்புறமாக சாமரம் வீசியபடி ஒரு பணிப்பெண்ணும், அரசனுக்குரிய வெண்கொற்றக் குடையும் உள்ளன. மேலிரு விளிம்புகளில் வாள் மற்றும் உலகின் கண் மறையாத சூரியனும் இடம்பெற்றுள்ளது. மூலவர் அறைக்கு எதிரே, இச்சிற்பத்திற்கு எதிர் திசையில் மூவர் நிற்கும் நடுகல் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இது, மன்னரை அரசியர்கள் வணங்குவதுபோல உள்ளது. இப்பள்ளிப்படை சிற்பத்தின் பின்னால், சுதையினால் காளிதேவியின் உருவம் அமைத்து, காளிகோயில் எனத் தற்போது அழைத்து வருகின்றனர். பள்ளிப்படைக் கோயில் என்பது மன்னன் மரணித்தபிறகு அவர்களைப் புதைத்த அல்லது எரித்த இடத்தின்மீது கட்டப்படுவதாகும்.
வென்று மண்கொண்ட சம்புவராயர் படைவீட்டில் இயற்கை எய்தினார். அவரது உடல் கேசவபுரம் கிராமத்திற்கு அருகில் ஓடுகின்ற கமண்டல நதிக்கரையில் எரியூட்டப்பட்டது. இந்த எரிசாம்பலை கங்கை நதியில் கரைப்பதற்காக, அவரது மகன் ‘முதலாம் ராஜநாராயண சம்புவராயன்’ தமது அமைச்சர் மாதையனை அனுப்பிவைத்தார். அவர், அங்குசென்று எரிசாம்பலைக் கரைத்துவிட்டு திரும்பிய பின்னர், ஆரணிக்கு கிழக்கே ‘குட்டியம்’ என்ற ஊரில் பெருமளவில் நிலத்தைப் பரிசாக அளித்து, ‘கங்கையாடி மாதையன்’ என்ற பட்டத்தையும் தமது அமைச்சருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கிறார் முதலாம் ராஜநாராயண சம்புவராயன்.
இந்த செய்தியைக் குட்டியம் கிராமத்தில் மாதையன் கட்டுவித்த ‘ஏகாம்பர ஈஸ்வரர் கோயில்’ குமுதப் பட்டையின் கல்வெட்டும் உணர்த்துகிறது. அக்காலத்தில் மன்னர் வென்று மண்கொண்ட சம்புவராயர் எரியூட்டப்பட்ட இதே இடத்தில்தான் இந்தப் பள்ளிப்படைக் கோயிலானதும் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் காலப்போக்கில் சிதைந்துவிட்டது. இக்கோயிலின் கற்களைக் கொண்டே அருகில் உள்ள அலியாபாத் அணைக்கட்டை 1869-ல் ஆங்கிலேயர்கள் கட்டியிருக்கிறார்கள் எனவும் கருதமுடிகிறது’’ என்கிறார்.
கேசவபுரம் கிராமத்தில் வசிக்கும் முதியவர் விஜயராகவன் கூறுகையில், ‘‘காளியம்மன் கோயிலைக் கட்ட நாங்கள் கடைக்கால் தோண்டியபோது, மண்ணுக்கடியில் நிறைய எரிசாம்பல் இருந்தது. இப்போதும் இதற்கடியில் சாம்பல் உள்ளது’’ என்கிறார்.
‘‘இந்த வாய்வழித் தகவலும் மேற்கண்ட வரலாற்று நிகழ்வுகளுக்கு மிக முக்கிய ஆதரமாக உள்ளது. சோழ அரசர்களின் நம்பிக்கைக்குரிய சிற்றரசர்களாக இருந்த சம்புவராய மன்னர்களின் தலைநகரமாகவும், படைநகரமாகவும் இடைக்காலத்தில் சிறப்புற்று இருந்த படைவீட்டில் சம்புவராய மன்னரின் பள்ளிப்படைக் கோயில் எழுப்பப்பட்டிருந்தது என்பதற்கான முக்கிய வரலாற்றுச் சான்றுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன’’ எனப் பெருமைக்கொள்கிறார் முனைவர் அமுல்ராஜ்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/26jECPf
via
