கன்னியாகுமரி மாவட்டத்தில் மொழிப்போர் தியாகி சிதம்பர நாதன் 53-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். அவரிடம் விலைவாசி உயர்வை சுட்டிகாட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது குறித்தும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்த விவகாரத்தில் எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "விலைவாசி உயர்வு குறித்துப் பேசுபவர்கள் பெட்ரோலிய பொருள்களின் விலைவாசி குறித்து தயவுசெய்து கருத்தில் கொள்ளவேண்டும். பெட்ரோல் பொருள்களின் விலைதான் விலைவாசியை நிர்ணயிக்கக்கூடியவை.
பெட்ரோல், டீசல் விலை கூடினால் மற்ற எல்லாமே விலை கூடிவிடும். ரஷ்யாவிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசலை மத்திய அரசு வாங்கியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு அதிகமான பெட்ரோலிய பொருள்களை மத்திய அரசு வாங்கியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைந்தாலே அத்தியாவசியப் பொருள்கள் விலையும் குறையும். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
உலக வரலாற்றிலும் சரி, இந்திய வரலாற்றிலும் சரி தகுதியானவர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அரசியலில் வாரிசு என்ற பேச்சு விவாதப் பொருளே தவிர அதில் எதார்த்தங்கள் கிடையாது. தகுதி இல்லாத ஒருவரை கொண்டுவந்து அரசியலில் திணிப்பதுதான் தவறு. எத்தனையோ திணிக்கப்பட்ட தலைவர்கள் அதில் தொடரமுடியாமல் போயிருக்கிறார்கள். திணிப்பு என்பது ஆரோக்கியமான அரசியலுக்கு பொருத்தமானதாக இருக்காது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உருவாகி வந்தார். அதற்கு எதிராக பலர் பேசினாலும் அவர் வெற்றிகரமான தலைவராக மாறினார். இப்போது உதயநிதி விஷயத்திலும் திணிப்பு என சொல்லமுடியாது. அவர் உருவாகி வருகிறார். அவருக்குப் பேச தெரிகிறது, மக்களை கவர தெரிகிறது, ஒரு விஷயத்தில் செயல்புரிய தெரிகிறது. உருவாகி வருவதை விமர்சிப்பது தவறு.
கஷ்டப்பட்ட தொண்டர்களுக்கு கட்சியில் வழியில்லை என்று சொல்லமுடியாது. தி.மு.க-வில் நான் ஒரு நிஜமான எடுத்துக்காட்டு. நான் அடிப்படையாக பணியாற்றி இன்று அமைச்சராகவும், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது உண்மையான தொண்டனுக்கு இடம் இல்லை என எப்படி சொல்ல முடியும். பொதுமக்களை ஈர்க்கும் தன்மை சில தலைவர்களுக்கு இருக்கிறது. உதயநிதி சினிமாவில் இருக்கிறார், பன்முகத்தன்மையோடு செயல்படுகிறார். ஒரு ஆளுமைமிக்க குடும்பத்திலிருந்து வருவதே வேல்யூ அடிஷன்தான். உதயநிதியின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்த்துவிட்டு கருத்து கூறட்டும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/J5xVPKO
via
