புதுச்சேரி சேதராப்பட்டு கிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கடந்த 2007-ம் ஆண்டு 800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது மாநில அரசு. ஆனால் தற்போதுவரை எந்த ஒரு தொழிற்சாலையும் வராத நிலையில் அந்த நிலம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு விவசாயமும் நிறுத்தப்பட்டதன் காரணமாக மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. அதில் தேக்கு மரங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இப்பகுதியில் நூறு ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இச்சூழலில் கரசூர், சேதராப்பட்டு பகுதிகளில் அரசு கையகப்படுத்தியுள்ள இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாக வனத்துறைக்கு புகார்கள் வந்தன.
அதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு வெட்டப்பட்ட மரங்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் வன அதிகாரிகள், காவல் துறையினர் வெட்டப்பட்ட மரங்கள் உள்ள பகுதிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். கரசூர், சேதராப்பட்டு பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள மரங்கள் குறித்து அவர்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். அப்போது வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுக்க எண்கள் போடும் பணியைத் தொடங்கினர். வனத்துறை தரப்பில் விசாரித்தபோது, "15 நிமிடத்துக்கு 50 மரங்கள் என எண்களை குறிப்பிட்டோம்.
அதன்படி ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்" என்றனர். அதையடுத்து ஆயிரக்கணக்கான மரங்கள் எங்கு எடுத்து செல்லப்பட்டன என்பதை துணை வனக்காப்பாளர் தலைமையில் விசாரணை நடந்தது. மரங்கள் கொதிகலன்கள் உள்ள தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து அருகில் உள்ள சேதராப்பட்டு தொழிற்சாலைகளில் காவல் துறையினருடன் வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அங்கு சில தொழிற்சாலைகளில் புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் இருந்தன. அவை அனைத்தும் ஏஜெண்ட்டுகள் மூலமே பெறப்படுவதாக தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/RN8oDP6
via
