கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில் சம பலத்தில் அ.தி.மு.க, தி.மு.க தலா 6 உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இருந்தனர். இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய தினம் அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஆறு பேரை திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்திருந்தார். இதனால், அ.தி.மு.க உறுப்பினர்கள் வருகை தந்தால் மட்டுமே தேர்தல் நடத்த போதிய எண்ணிக்கை இருக்கும் என்ற நிலை உருவானது. ஏற்கெனவே, 5 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டடு, போதிய உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் பங்கேற்காத நிலையில்... கடந்த 19-ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெறக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் மூலமே வெளியிட வேண்டும் என உத்தரவு பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நாளன்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திண்டுக்கல்லில் இருந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவருடன் வந்த கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு அ.தி.மு.க உறுப்பினர் திருவிக மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். திருவிக கடத்தப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க-வினர் கோஷம் எழுப்பினர். அப்போது அ.தி.மு.க-வினரும், தி.மு.க-வினரும் இடையே மாறி மாறி கோஷம் எழுப்பிதால், கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி செருப்புகள் வீசிக்கொண்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, தேர்தல் நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார். இதனால், அன்று தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வாக்குப்பதிவு முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். வாக்குப்பதிவு நடைபெற்றபோது எடுத்த வீடியோக்களையும் சமர்பித்தார். இதற்கிடையில், தேர்தல் நடைபெற்ற அன்று, திருவிக கடத்தப்பட்டதால், அவரால் வாக்களிக்க முடியவில்லை என்று திருவிக தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு, 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், 'தி.மு.க 7 வாக்குகளும், அ.தி.மு.க 4 வாக்குகளும் பெற்றுள்ளன. கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் திருவிக வாக்களித்திருந்தாலும், அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்க முடியாது' என்று வாதங்களை முன்வைத்தார்.
அதனால், நீதிபதிகள், 'தேர்தல் முடிவை அறிவித்துக்கொள்ளலாம். அதேநேரம், திருவிக கடத்தல் சம்பந்தமாக திண்டுக்கல் உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இப்படி, தேர்தல் முடிவை வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும், அ.தி.மு.க வேட்பாளர் ரமேஷ் 4 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், கரூரில் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளதால், அ.தி.மு.க தரப்பு, கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலின்போது தி.மு.க-வினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, வரும் 29-ம் தேதி கரூரில் போராட்டம் நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க-வுக்கு வாக்களித்த 6 தி.மு.க உறுப்பினர்கள் தவிர, அ.தி.மு.க-வைச் சேர்ந்த 5 பேரில் ஒரு மாவட்ட கவுன்சிலர், தி.மு.க வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்ததால், மொத்தம் 7 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். செந்தில் பாலாஜி தரப்பு அந்த ஒரு அ.தி.மு.க உறுப்பினரை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்திருப்பதாக, அ.தி.மு.க சார்பில் குற்றம்சாட்டுகின்றனர். தி.மு.க வேட்பாளருக்கு மாறி வாக்களித்த அந்த அ.தி.மு.க மாவட்டக் குழு உறுப்பினர் யார் என்பது குறித்து அ.தி.மு.க-வுக்குள் பரபர 'டாக்' ஓடிக்கொண்டிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/ChL1fSo
via
