நெல்லை: திமுக மாவட்டச் செயலாளருக்கு எதிராக அவதூறு! - போலீஸ் கமிஷனரிடம் புகார்

0

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கட்சியினரே முன்வைத்து வருகிறார்கள். அவருக்கு எதிரான அணியைச் சேர்ந்தவர்கள், சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தனர். தற்போது அவருக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

அப்துல் வஹாப் தனது ஆதரவாளர்களுடன்

அப்துல் வஹாப் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கட்சித் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்வதில்லை என்றும் கட்சித் தலைமையிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டதாம். நெல்லை மாநகரத்தில் உள்ள நான்கு பகுதிச் செயலாளர்களில் மூவர் அப்துல் வஹாபுக்கு எதிராக உள்ளனராம். மாநகரச் செயலாளர் சுப்பிரமணியனையும் அவர் அரவணைத்துச் செல்லாததால், அவரும் எதிரணியினருடன் சேர்ந்து விட்டார் என்பது தகவல்.

அப்துல் வஹாபுடன் உதவியாளர் சதீஷ்

இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வஹாபின் உதவியாளரான சதீஷ் என்பவர் பேசியதாக ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில், பேசும் சதீஷ்(ஆடியோவின் படி), ”உங்களை மாவட்டச் செயலாளரை வந்து பார்க்கும்படி பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. நீங்கள் இப்படியே இருந்தால் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்து, உங்களை நேரில் வந்து பார்க்க வைக்கும் நிலையை ஏற்படுத்துவோம்” என்று எச்சரிக்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. ஆடியோ குறித்து அவர்கள் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்தபோது போக்குவரத்துக்கு இடையூறான பேருந்து நிறுத்தங்கள் இடிக்கப்பட்டன. சில பேருந்து நிறுத்தங்கள் அழகுபடுத்தப்பட்டன. அந்த வகையில், வண்ணார்பேட்டை பாலத்தின் அடியில் பேருந்து நிறுத்தம் இருப்பதால், அதிலிருந்து 100 மீட்டரில் சென்னை சில்க்ஸ் முன்பு இருந்த பேருந்து நிறுத்தம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில், அதே இடத்தில் அவசரமாக பஸ் ஸ்டாப் கட்டப்படுகிறது.

சென்னை சில்க்ஸ் முன்பாக கட்டப்படும் பஸ் ஸ்டாப்

இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு பதிவு மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாபுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பதிவில், ”நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் ஜுவல்லரி நிறுவனங்களிடம் அப்துல் வஹாப் 25 லட்சம் ரூபாய் நன்கொடை கேட்டார். பலமுறை கேட்டு மிரட்டியும் அந்த நிறுவனம் கொடுக்காததால் கடையின் முன்பாக பேருந்து நிறுத்தம் அமைத்து இடைஞ்சல் கொடுக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்துல் வஹாபுக்கு எதிரான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனால் நெல்லை மாநகர காவல் ஆணையர் அவிநாஷ் குமாரை நேரில் சந்தித்த அப்துல் வஹாப், தனக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அப்துல் வஹாப் ஆதரவாளர்கள் கூறுகையில், “கட்சிக்காக சிறப்பாகப் பணியாற்றும் அப்துல் வஹாப் மீது எதையாவது சொல்லி அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் உள்ள சிலரே கங்கணம் கட்டிக் கொண்டு தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்.

போலீஸ் கமிஷனரிடம் அவதூறு புகார் அளிப்பு

வண்ணார்பேட்டை பஸ் ஸ்டாப் அகற்றப்பட்டதால் வயதானவர்கள், நோயாளிகள் நடந்துவரச் சிரமப்படுவதால் பஸ் ஸ்டாப் அமைத்துக் கொடுக்குமாறு அந்த வார்டின் தி.மு.க கவுன்சிலரான கந்தன் மாநகராட்சியிலும் எம்.எல்.ஏ-விடமும் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் அந்த இடத்தில் பஸ் ஸ்டாப் கட்டப்படுகிறதே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்கள். இதனிடையே, மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் அளித்த அவதூறு புகார் தொடர்பாக நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/ErC53hB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*