கும்பகோணம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவதற்காக ரூ.30,000 பணம் கேட்டு தரவில்லை என்றால் மனைவியை கொன்று விடுவதாக கூறி மற்றொரு இளைஞர் ஒருவரை டூவீலரிலேயே சென்னை வரை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தலில் ஈடுப்பட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு, வயது 43. திருமணமான இவர் மரப்பொருள்கள் தயாரிக்கும் வேலை செய்து வருகிறார். பாபநாசம் அருகே உள்ள உத்தமதானியை சேர்ந்தவர் உத்திராபதி (25) கூலி வேலை செய்து வந்துள்ளார். உத்திராபதிக்கு ரமேஷ்பாபுவுடன் ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ரமேஷ்பாபுவை ரூ.30, 000 கேட்டு உத்திராபதி கடத்தியுள்ளார். பணம் தரவில்லை என்றால் உன் மனைவியை கொன்று விடுவேன் என மிரட்டியதுடன் கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளார். பயந்து போன ரமேஷ்பாபு, வேறி வழி தெரியாமல் உத்திராபதி கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
அதன் பிறகும் ரமேஷ்பாபுவை விடாத உத்திராபதி அவரது டூவீலரிலேயே சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். கணவர் வீடு திரும்பாதது கண்டு பயந்து போன ரமேஷ்பாபு மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா, எஸ்.ஐ. கீர்த்திவாசன் தலைமையில் குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் போலீஸார் உத்திராபதியை கைது செய்ததுடன், டூவீலரையும் பறிமுதல் செய்தனர். உத்தரவிட்ட 24 மணி நேரத்தில் அதிரடி ஆக்ஷனில் ஈடுப்பட்ட போலீஸ் டீமை எஸ்.பி. ரவளிபிரியா பாராட்டியிருக்கிறார். இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், ``செல்போன் வாங்குவதற்காக ரூ.30,000 பணம் கேட்டு ரமேஷ்பாபுவை கடத்திய உத்திராபதி பணம் தரவில்லை என்றால் மனைவியை கொன்று விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.
ரமேஷ்பாபு பணம் கொடுத்ததும் புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். முன்னதாகவே நான் போற இடத்துக்கு சத்தம் போடமா வரணும் இல்லைன்னா கத்தியில் குத்திடுவேன் என மிரட்டிவிட்டார். ரமேஷ்பாபுவின் டூவீலரை வாங்கி அவரை பின்னால் உட்கார வைத்து சென்னை வரை சென்றிருக்கிறார் உத்திராபதி.
செல்போன் வாங்கியது போக மீதமிருந்த பணத்தில் ஜாலியாக செலவு செய்திருக்கிறார். மீண்டும் ரமேஷ்பாபுவை அழைத்து கொண்டு சென்றவர் விழுப்புரத்தில் இறக்கி விட்டு தலைமறைவாகி விட்டார். இது தொடர்பான புகார் வந்த அடுத்த 24 மணி நேரத்தில் உத்திராபதி பயன்படுத்திய செல்போனை வைத்து ட்ராக் செய்து கைது செய்திருக்கிறோம். அவர் வைத்திருந்த டூவீலரையும் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது’ எனத் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/mUJLPAq
via
