தூத்துக்குடி: தன் மனைவிடம் தவறாக நடக்க முயன்ற தம்பி; கம்பியால் அடித்துக் கொன்ற அண்ணன், தாய் கைது!

0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா. இவருடைய மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு  பாண்டித்துரை, கருப்பசாமி என்ற இரண்டு மகன்கள். கொம்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.  பாண்டித்துரை, அவரின் தாய் ராமலெட்சுமி, மனைவி மந்திரலெட்சுமி, தம்பி கருப்பசாமி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கருப்பசாமி கடந்த 16-ம் தேதி இரவில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.

கைது செய்யப்பட்ட பாண்டித்துரை, அவரின் தாய் ராமலெட்சுமி

அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், அண்ணன், தம்பி இருவரும் ஒரே பைக்கில் டாஸ்மாக் கடைக்கு வந்து மது வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியின் அண்ணன் பாண்டித்துரையிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் தம்பியை கம்பியால் அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

”நான், என்னோட மனைவி, அம்மா, தம்பி நாலு பேரும் ஒரே வீட்லதான் வசிச்சிட்டு வர்றோம். என் தம்பி கருப்பசாமிக்கு கல்யாணம் ஆகல.  தினமும் மது குடிச்சிட்டுதான் வீட்டுக்கு வருவான். நாங்க இருக்குற வீட்டை ரெண்டு பங்கா பிரிச்சுக்கொடுன்னு எங்க அம்மாகிட்ட சண்டை போடுவான். அக்கம் பக்கத்துல உள்ளவங்க தடுத்து அவனுக்கு புத்திமதி சொல்லிட்டுப் போவாங்க. ஒரு வாரமா அவனோட அலம்பல் தாங்கல.  மதுபோதையில என் மனையிடம் பல முறை தவறா நடக்க முயற்சி செஞ்சிருக்கான். இதை என் மனைவி எங்கிட்ட சொல்லி அழுதா. நானும் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். நானும் அம்மாவும் அவனைக் கண்டிச்சோம்.  ஆனா, அவன் கேட்கலை. மறுபடியும் தவறா நடக்க முயற்சி செஞ்சான். இனிமேல் இவனை விட்டு வச்சா ஆபத்து, அவனை கொன்னுடலாம்னு முடிவு செஞ்சேன்.  

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

16-ம் தேதி ராத்திரி, போன்ல அவனோட சமாதானமாப் பேசுறமாதிரி பேசி,  மந்திதோப்பு பகுதியில உள்ள டாஸ்மாக் கடையில  மது  வாங்கிட்டு பக்கத்துல கூட்டிட்டு போனேன். மதுபோதை தலைக்கேறியதும் பழையபடி சொத்துப் பிரிக்கிறதை பற்றியும், என் மனைவியைப் பற்றியும் அவதூறாப் பேசுனான். மனைவியைப் பற்றி திரும்பவும் பேசுனதும் எனக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இரும்புக் கம்பியால தலையில நாலஞ்சு தடவ ஓங்கி அடிச்சேன். அதுல இறந்து போயிட்டான். அவன் இறந்த பிறகுதான் தப்பு பண்ணிட்டோமேன்னு என் மனசுக்கு உருத்துச்சு” என போலீஸாரின் விசாரணையில் கூறியுள்ளார் பாண்டித்துரை. இக்கொலை வழக்கில் பாண்டித்துரையுடன், கொலைசெய்ய  தூண்டியதாக அவரின்  தயார் ராமலெட்சுமியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.     



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Fu8qV4e
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*