கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். துணை மேயர் தமிழழகன் தி.மு.க-வைச் சேர்ந்தவர். சீனியரான தமிழழகனுக்கு மேயர் பதவி வழங்கப்படும் என தி.மு.க தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் சீட்டை ஒதுக்கியது தி.மு.க தலைமை. தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டதால் அதற்கு கட்டுப்பட்டு அதனை ஏற்றுக்கொண்டனர் கும்பகோணம் தி.மு.க நிர்வாகிகள்.
அதனால் மூன்று வார்டுகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவிக்கான ஜாக்பாட் அடித்தது. காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவரான லோகநாதன் 17-வது வார்டில் வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவரான சரவணவனை மேயர் வேட்பாளராக அறிவிக்க மேயராகப் பதவியேற்றார் சரவணன். இந்த நிலையில், சமீபத்தில் துணை மேயரான தமிழழகன் பிறந்தநாளை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
அதற்காக தி.மு.க-வினர் அவருக்கு `செயல் தலைவரே' என அடைமொழி கொடுத்து போஸ்டர் ஒட்டினர். மேலும் தி.மு.க கவுன்சிலர்கள் தமிழழகனை `செயல் மேயர்' என குறிப்பிட்டே அழைத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் கோஷமிட்டதுடன், `செயல் மேயர்னு போட்டுக்கலாம்' என வாதிட்டனர். உடனே, `அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?' என மேயர் கேட்க, `போடக்கூடாது என்பதற்கு சட்டம் இருக்கிறதா' என தி.மு.க-வினர் எதிர்கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து சலசலப்புடன் கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் மேயர் சரவணன், தமிழழகன் குறித்து பேசியதாக வெளியே பரவி வரும் தகவல் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
தி.மு.க கவுன்சிலர்கள் இந்த விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருக்கின்றனர். மேலும், தி.மு.க-வினர், `மேயர் சரவணனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்' என முடிவெடுத்திருப்பதாகவும் கும்பகோணம் அரசியல் வட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியியைச் சேர்ந்த வேறு நபரை மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல்களும் தி.மு.க வட்டத்தில் ஒலிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுவது சரவணனுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து விவரமறிந்த வட்டாரங்களில் பேசினோம். ``மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது ஏமாற்றத்தை தந்தாலும் தி.மு.க-வினர் தலைமையின் உத்தரவை மீறி எதையும் செய்யவில்லை. குறிப்பாக மேயராக வருவார் என பலராலும் பேசப்பட்டு வந்த தமிழழகன் பாரம்பர்யமான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோஷ்டி அரசியல் செய்யாதவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் ஸ்டாலின் சொல்வதை செய்வது மட்டுமே.
இந்த நிலையில் செயல் தலைவர், செயல் மேயர் விவகாரத்தில் மேயருக்கு வருத்தம் ஏற்பட... அதனைக் கூட்டத்தில் கேள்வியாக முன்வைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத தமிழழகன், `தலைவருக்காக பொறுத்துக் கொண்டிருக்கிறேன்' என கூட்டத்திலேயே கண் கலங்கினார். அதன் பிறகாவது சரவணன் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் சரவணன், `காங்கிரஸுக்கு மேயர் பதவி ஒதுக்கப்பட்டதுமே தமிழழகன் எங்க கட்சி மாவட்டத் தலைவர் லோகநாதனை பார்த்து, `மேயர் பதவி வேண்டாம் எனச் சொல்லுங்க... எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க'னு கேட்டார்' என சிலரிடம் பேசியதாகத் தகவல் வெளியானது.
இதுதான் தி.மு.க-வினரை கோபமடையச் செய்தது. தி.மு.க கவுன்சிலர்கள் தமிழழகனிடம், `நீங்க அப்படி கேட்டீங்களானு கேட்க'... `அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என அவர் சொல்லியிருக்கிறார். மேலும், `உங்க மீது களங்கத்தை ஏற்படுத்திய சரவணனின் செயல் பற்றி முதலமைச்சருக்கு கொண்டு செல்கிறோம். மேலும் இனி நாங்க அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கவுன்சிலரான அய்யப்பனை மேயராக அவர்கள் அறிவிக்கட்டும்' என தி.மு.க-வினர் கூறியிருக்கின்றனர்.
அய்யப்பன் வருவதை லோகநாதன் துளியும் விரும்பாததால்தான் சரவணனை ஆதரித்தார். இந்தச் சூழலில், `அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க-விடமே மேயரை பதவியை கொடுத்துவிட வேண்டும்' என லோகநாதன் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பிரச்னை எல்லை மீறி போக மேயர் பதவிக்கு சிக்கல் வந்து விடுமோ என உணர்ந்த சரவணன், தமிழழகன் குறித்து தான் பேசியதை வாபஸ் வாங்கிக் கொள்வதாகக் கூறி அவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதனை தமிழழகன் திருப்பி அனுப்பியதால் விவகாரம் இன்னும் முடிவிற்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.
தி.மு.க-வினர் நாங்க இதனை சும்மாவிடமாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிடயிருக்கிறோம் எனக் கூறிவருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
சரவணன் ஆதரவாளர்களோ, ``எளிமையான குடும்பத்தில் பிறந்த பாரம்பர்யமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் மேயரானதை உண்மையான ஜனநாயகம் என பலரும் கொண்டாடினர். மெஜாரிட்டி இல்லாத நிலையிலும் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார். தி.மு.க-வினரால் சரவணனை மேயராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த காழ்ப்புணர்ச்சியால் மறைமுகாக பல குடைச்சல்களை கொடுத்தனர். செயல் மேயர் எனக் கூறி மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். ஒற்றையாளாகப் போராடிவரும் சரவணனுக்கு, காங்கிரஸ் கட்சி பின்னால் இருப்பது மட்டுமே பலம்" என்றனர்.
இது குறித்து மேயர் சரவணனிடம் பேசினோம். ``பிரச்னையை மாவட்டத் தலைவர் மூலம் பேசி முடித்துவிட்டோம்" என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
துணை மேயர் தமிழழகனிடம் கேட்டபோது, ``சரவணன் பேசியிருப்பது அவருக்கு பக்குவமில்லை என்பதை காட்டுகிறது. அத்துடன் யாரும் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. அவங்க கட்சி மாவட்டத் தலைவரான லோகநாதன் கவுன்சிலர்கள் முன்னிலையில் தமிழ், செயல் மேயராக இருப்பார்னு மைக்கில் ஓப்பனாகப் பேசியிருந்தார்.
தலைமை என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய என்னை, நான் விட்டுகொடுக்க சொல்லி கேட்டதாகப் பேசியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றபோது, `என்ன தமிழ் என் மேல வருத்தமா'னு தலைவர் கேட்டார். அதைத்தான் மாமன்றக் கூட்டத்தில் எனக்குப் பதவி முக்கியமல்ல, அந்த ஒற்றை வார்த்தை போதும் எனக் கூறி கலங்கினேன். எனக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றம் எல்லாமே தலைவர் ஸ்டாலின்தான். காங்கிரஸ் கட்சி மேயருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/6CxYemW
via
