புதுச்சேரி: ``ஏழை மக்களுக்கு எதிரான திட்டம்...” - பிரீபெய்டு மின் கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

0

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அது தொடர்பாக சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர்.

புதுச்சேரி அரசு

இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. அதையடுத்து அரசின் நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் தனியார்மயமாக்குவதில் அரசு பிடிவாதம் காட்டியதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர் மின்துறை ஊழியர்கள். ஒட்டுமொத்த மாநிலமும் இருளில் மூழ்கியதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, முதல்வர் ரங்கசாமி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில்தான் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டி வருகிறது அரசு.

மின்துறையை தனியார்மயமாக்கும் விவகாரமே இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இந்த புதிய திட்டத்திற்கு மேலும் எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 4,07,000 லட்சம் ஸ்மார்ட் பிரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள 33 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் பிரீபெய்டு முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின் நிறுவனமான பி.பி.சி.சி.எல். செயல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் புதுவை மின்துறை சார்பில் அரசு செயலாளர் அருணும், பி.பி.சி.சி.எல் நிறுவனம் சார்பில் சச்சின் சுக்லா ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம்

இந்தத் திட்டத்தின்படி, நுகர்வோர் தங்களது மின்சார பயன்பாட்டை அறிந்து, அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு கவலைப்படாத என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு, மின் துறையில் பிரீபெய்டு கட்டண முறையை கொண்டு வந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விசுவாசியாக இருக்கிறது. அதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். மின் துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதிலேயே புதுச்சேரி அரசு குறியாக இருக்கிறது. இப்போது பிரீபெய்டு மின் கட்டணத்திற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

பிரீபெய்டு திட்டம் வந்த பின்னர் திடீரென மின் கட்டணத்தை உயர்த்தும் அபாயம் இருப்பதால் கண்டிப்பாக மக்களை பாதிக்கும். மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசியப் பட்டியலில் இருப்பது. இனி பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலியாக இருக்கும் அரசை எதிர்த்துப் போராட மக்கள் முன்வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.கவின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், “மின்துறை தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்துவதில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

தனியார்மயமாக்கலுக்கு ஏதுவாக பல செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தனியார் பயன்படும் விதத்தில் அனுகூலமாக மக்களின் மீது பல்வேறு அடக்குமுறை திட்டங்கள் ஏவப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மின்கட்டணத்தை வசூல் செய்வதில் ப்ரீபெய்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து,  அதற்கான ஒப்பந்தம் இரண்டு நாட்களுக்கு முன்பு போடப்பட்டது. புதுச்சேரியில் உள்ள 4.7 லட்சம் மின்விநியோக இணைப்பு ஸ்மார்ட் மீட்டர், எலக்ட்ரானிக் மீட்டர், அனலாக் மீட்டரை 251 கோடி ரூபாய் செலவில் முழுமையாக மாற்றம் செய்து ப்ரீபெய்டு மீட்டராக மாற்றப்பட உள்ளது. மக்கள் மீது திணிக்கும் ஒப்பந்தத்தில் அரசு கையொப்பமிட்டிருப்பது தவறான ஒன்றாகும்.  இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள்.

மின் விநியோகம் என்பது மக்களின் அத்தியாவசியமான ஒன்று. மக்களுக்கு அரசு பாதுகாப்பாக இல்லை. தினக்கூலி ஊழியர்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருள்களை வாங்க சிந்திப்பதை விட மின்சாரம் கட்டணம் எவ்வளவு கட்ட வேண்டும் என சிந்திக்கும் சூழலை இது உருவாக்கும். ஒருவேளை மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால் அவர்கள் ரீசார்ஜ் செய்யும் வரை பல அவதிக்குள்ளாவார்கள். பல அரசு துறைகள் மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளனர். இதில் குறிப்பாக பொதுப்பணித்துறையில் 110 கோடியும், உள்ளாட்சி துறையில் 98 கோடியும், கூட்டுறவுத்துறை 65 கோடியும், ஸ்ஸ்பின்கோ 60 கோடியும் பாக்கி வைத்துள்ளனர். இதனை வசூல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் நிறுவனம் இந்த திட்டத்தை முதன் முதலில் அரசு துறைகளில்தான் செயல்படுத்த உள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் 4,07,000 லட்சம் மின் இணைப்புகள் உள்ள புதுச்சேரியில் முழுமையாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். முழுக்க முழுக்க மக்களுக்கு விரோதமான திட்டம் இது.

இதனால்தான் இமாச்சால பிரதேசத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு வாக்களிக்காமல், காங்கிரசை வெற்றி பெற செய்தனர். எனவே மக்களை பாதிக்கும் இந்த ப்ரீபெய்டு மின்சார திட்டத்தை முதலமைச்சரும், அரசும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது புதுச்சேரி அ.தி.மு.கவின் கோரிக்கை. இந்த திட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயகக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே தமிழக மின்துறையில் மத்திய அரசால் சீர்திருத்தம் செய்ய முயன்றபோது, மக்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் முழுமையாக எதிர்த்தார். எனவே புதுச்சேரியில் தொடர்ந்து இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துமேயானால் அ.தி.மு.க தலைமை மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று புதுச்சேரியில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/dPAiuCj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*