நாட்டார் கோயில்கள் அதிகம் அமைந்துள்ள உசிலம்பட்டி வட்டாரத்தில் கருமாத்தூர் அருகே பூசாரிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கழுவநாதர், மாயாண்டி சுவாமி, விருமன் மற்றும் பேச்சியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நேற்று வெகு விமிரசையாக நடைபெற்றது.
வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தக் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பூசாரிப்பட்டியில் கழுவநாதர், மாயாண்டி சுவாமி, விருமன், பேச்சியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. இக்கோயிலின் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்குப் பின் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கோயிலில் மூலவர் பேச்சியம்மனாகப் பார்வதியும், கழுவநாதன் எனும் கலியுகநாதனாக சிவபெருமானும், காவல் தெய்வமாகக் குதிரை மீது விருமாண்டியாக பிரம்மாவும், மாயனாக விஷ்ணுவும் என மூவரும் ஒரே இடத்தில் அமைந்துள்ள தலம் இது. விருமன் எனும் பிரம்மாவிற்கு சிலை உள்ள தலம் என்ற சிறப்பும் உள்ளது.
அண்ணன் விருமனுக்குப் பேச்சியம்மன் அளித்த வாக்குப்படி ஒவ்வோர் ஆண்டும் ஆடிக் கடைசி வெள்ளியில் கறுப்புக் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து படையல் வைக்கும் திருவிழா, மாசி சிவராத்திரி விழா என இக் கோயிலில் கொண்டாடப்படும் திருவிழா மிக சிறப்பாக நடக்கும்.
இக்கோயில் வரலாறு பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, "ஆதி காலத்தில் இமய மலையிலிருந்து தென்பகுதியை நோக்கி பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி தெய்வங்கள் வந்து கொண்டிருந்தனர்.
கருமாத்தூரை நெருங்கியபோது, இந்த இடம் தனக்குப் பிடித்திருப்பதால் இங்கேயே தங்கிக் கொள்ளப் போகிறேன் என்று பார்வதியம்மன் பேச்சியம்மனாக இந்தத் தலத்தில் வந்து குடியேறியிருக்கிறாள். அப்போது இந்தப் பகுதியில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த பேய்க்காமன் என்பவருக்கு, தினமும் மேள தாளங்கள் முழங்க பூஜைகளைச் செய்து கொண்டிருந்த பேச்சியம்மனான பார்வதியைப் பற்றித் தெரியவருகிறது. தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசங்களை உடலில் போட்டு கொண்டு பேச்சியம்மனைப் பயமுறுத்தி இந்த இடத்தை விட்டு வெளியேற மிரட்டியுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த விலங்கு மாமிசங்களை பூமாலையாக மாற்றிக் காட்டியுள்ளாள் பேச்சியம்மன்.
இதைப் பார்த்து பயந்தாலும், இது என்னுடைய பகுதி, இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும், மீண்டும் வருவேன் என்று பேய்க்காமன் எச்சரித்துவிட்டு செல்கிறார். அவரிடமிருந்து நிரந்தரமாகப் பாதுகாத்துக் கொள்ள மலையாள நாட்டில் விருமாண்டியாக மாறியிருந்த பிரம்மாவை தங்கை பேச்சியம்மன் அழைத்து வந்தார். அதன் பின் விருமன் என்ற விருமாண்டி பேய்காமனுடன் போரிட்டு இந்தப் பகுதியை தங்கைக்காகப் பெற்று கொடுத்துள்ளார்.
தன்னுடன் அண்ணன் விருமன் இல்லையென்றால் மீண்டும் ஆபத்து வந்துவிடும் எனப் பயந்த பேச்சியம்மன், விருமனை கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் இறங்கச் சொல்லி பூட்டி வைத்து, ஒவ்வொரு ஆடி மாதமும் அண்ணனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்வதாக உறுதியளித்து இந்த இடத்தில் அமர்ந்து இருவரும் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்" என்றனர். இதுமட்டுமின்றி இத்தெய்வங்களைப் பற்றி நாட்டார் கதைகளும் இப்பகுதியில் சொல்லப்படுகின்றன.
மூலவர் பேச்சியம்மனாக பார்வதியும், கழுவநாதன் எனும் கலியுகநாதனாக சிவபெருமானும், காவல் தெய்வமாக குதிரை மீது விருமனாக பிரம்மாவும், மாயனாக விஷ்ணுவும் மூவரும் ஒரே இடத்தில் அமைந்துள்ள தலமாக இது விளங்குகிறது. விருமன் எனும் பிரம்மாவிற்கு சிலை உள்ள தலம் என்ற சிறப்புடன் இத்தலம் காணப்படுகிறது.
அண்ணன் விருமனுக்கு அளித்த வாக்குப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியில் கறுப்பு கிடா வெட்டி சிறப்புப் பூஜைகள் செய்து படையல் வைக்கும் திருவிழா, மாசி சிவராத்திரி விழா என வெகுவிமர்சையாக இக்கோயிலில் கொண்டாப்படுகிறது.
இந்தத் தலத்தில் உள்ள தெய்வங்களை வணங்கி சென்றால் நினைத்த காரியம் கைகூடும் எனவும், இங்கு உள்ள நாவல் மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
நேற்றைய தினம் குடமுழுக்கு விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருக்க, சிவாசாரியர்கள் ஆறு கால பூஜைகள் செய்து கழுவநாதர் கோயிலில் உள்ள கோபுரத்திலும், மாயாண்டி சுவாமி, விருமாண்டி, பேச்சியம்மன் கோயிலில் உள்ள கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/NyuhMkv
via
