நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த குமார், சமூக ஆர்வலராக உள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, பள்ளிபாளையம் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்றதாகவும், அதை தட்டிக்கேட்டதோடு, போட்டோ, வீடியோ எடுத்ததால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னைத் தாக்கியதாக குற்றம்சாட்டுகிறார். நான்கு மாதங்கள் ஆகியும் தன்னைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், சென்னையில் போராட்டம் நடத்தும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில், 'என்ன நடந்தது?' என்று இரா.குமாரிடம் கேட்டோம்.
"சமூக ஆர்வலரான நான், பள்ளிபாளையத்தில் நடக்கும் அவலங்கள், பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அந்த வகையில்தான், கடந்த அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி அன்று, பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வது வார்டில் உள்ள பெரியார் நகரில் தாபாங்கிற பெயர்ல சந்துகடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்து, அங்கு போனேன்.
அங்க வெளிப்படையா மது விற்பனை செய்த அர்த்தநாரிங்கிறவர்கிட்ட, 'காந்தி ஜெயந்தி அன்று மது விற்கலாமா?. சட்டவிரோதமாக ஏன் இப்படி மது விற்கிறீங்க?'னு கேட்டேன். அதுக்கு அவர், 'நகர்மன்ற தலைவர் பட்டாஸ் செல்வராஜ் சொல்லித்தான் விற்கிறோம். பட்டாஸ் பைனான்ஸ் கம்பெனி பக்கத்துலேயே மது விற்பனை நடக்குது'னு சொன்னார். அதனால், அங்க போய் பார்த்தேன். அங்கேயும் மது விற்பனை நடந்ததால், அதை என்னோட செல்போன்ல போட்டோ, வீடியோ எடுத்தேன். உடனே, சேர்மன் செல்வராஜ் பைனான்ஸ்ல வேலை செய்யும் பாலாஜிங்கிறவர், என்னோட செல்போனை பிடிங்கியதோட, என்னைத் தாக்க ஆரம்பித்தார்.
அங்க வேலை செய்ற சதீஸ், பெரியார் நகர்ல மது வித்த அர்த்தநாரி இன்னும் பெயர் தெரியாதவங்கனு 10 பேர் சேர்ந்து என்னை கடுமையாக தாக்கினாங்க. ஒரு மணி நேரம் அங்கேயே வைத்து என்னைத் தாக்கினாங்க. உள்காயம் ஏற்படுற மாதிரி தாக்கினாங்க. அதன்பிறகு அவங்களே பள்ளிபாளையம் காவல் நிலையத்துக்கு போன் செய்து, நான் அவங்ககிட்ட பிரச்னை பண்ணியதாகவும், என்னை பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல் கொடுத்தாங்க.
போலீஸ் பாலாஜிகிட்ட இருந்த என்னோட போனை வாங்கித்தராம, என்னை மட்டும் ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க. ஆனால், என்னால நடக்கவே முடியலை. மயக்கம் வந்து, ரொம்ப முடியாம போயிட்டு. அதனால், பள்ளிபாளையம் ஜி.ஹெச்சுல அட்மிட் ஆனேன். ஆனால், எனக்கு தலையில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதால், ஸ்கேன் எடுத்து பார்க்கணும்னு சொல்லி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல்கிச்சைக்கு அனுப்புனாங்க. மறுநாள் பழனி எஸ்.ஐ வந்து, என்கிட்ட வாக்குமூலம் வாங்கினார். 'இந்த விவகாரத்தை எஸ்.ஐ செந்தில்தான் டீல் பண்றார்'னு சொன்னார். இந்நிலையில், எனக்கு இப்படி ஆனதை கேள்விப்பட்ட சமூக ஆர்வலர் ஜெயக்குமார் என்பவர், எஸ்.ஐ செந்திலுக்கு போன் பண்ணி, என்னோட போனை வாங்கித்தர கேட்டிருக்கிறார். ஆனால் எஸ்.ஐ, நான் முழுபோதையில் தள்ளாடியபடி பாலாஜியிடம் பிரச்னை பண்ணியதாகவும், தான்தான் கைத்தாங்கலாக ஸ்டேஷனுக்கு என்னை அழைச்சுட்டு வந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதோடு, 'ரிமாண்ட் பண்ணலாம்னு இருந்தேன். குமார் அதுக்குள்ள தப்பிச்சு, ஆஸ்பத்திரிக்கு போயிட்டாப்புல'னு என்னைப்பத்தி தவறாகச் சொல்லியிருக்கிறார். அதனால், என்மேல சேர்மன் தரப்பு பொய்வழக்கு போட முயற்சிப்பது புரியவந்துச்சு. இதனால், அப்போதைய நாமக்கல் எஸ்.பிகிட்ட புகார் கொடுத்தோம். டிஎஸ்.பியை விட்டு விசாரிக்க சொல்றதா சொன்னார். ஆனால், டி.ஸ்.பி விசாரிக்கலை. டி.எஸ்.பி மகாலட்சுமிகிட்ட கேட்டும், அவர் சரியாக ரெஸ்பான்ஸ் பண்ணலை.
இதனால், நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தோம். இதனால், எஸ்.ஐ செந்தில், என்னையும், பாலாஜியையும் அழைத்து விசாரித்தார். ஆனால், பாலாஜி தரப்பு என்னோட செல்போனை தராம, என்னை சேர்மன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொன்னது. அதுக்கு, 'முடியாது'னுட்டு வந்துட்டேன். இதனால், அந்த மாதம் 19 - ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனால், எஸ்.ஐ செந்தில், பாலாஜிகிட்ட இருந்த என்னோட செல்போனை வாங்கி என்கிட்ட கொடுத்தார். ஆனா, அவங்க மேல எஃப்.ஐ.ஆர் போடலை. இதனால், அப்போதைய சேலம் மண்டல காவல்துறை டி.ஐ.ஜியை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், சேர்மன், பாலாஜி, அர்த்தநாரி, சதீஸ்னு 11 பேர் மேல எஃப்.ஐ.ஆர் போடலை. இதனால், பல்வேறு அமைப்புகளோட சேர்ந்து வர்ற 30 ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதற்கான போஸ்டரை சென்னையில் ஒட்டி வருகிறோம். பள்ளிபாளையம் நகராட்சியில் 20 இடங்களில் சட்டவிரோத மது விற்பனை நடக்குது. இதை செய்ய வைப்பது நகராட்சி சேர்மன் 'பட்டாஸ்' செல்வராஜ்தான். அதோடு, பைனான்ஸ்கிற பெயர்ல மக்களை கந்துவட்டியால் சேர்மன் தரப்பு கொடுமைபடுத்துது. ஆனால், அதை தடுக்காத போலீஸ், தடுக்க நினைத்த என்னை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்குது. என்மேல பொய் வழக்கு போட முடியலன்னதும், பணம் கேட்டு நான் அவங்களை மிரட்டியதாகவும், அதனால் அவர்கள் என்னைத் தாக்கியதாகவும் கதையை மாத்துறாங்க. இதை நான் சும்மா விடப்போவதில்லை" என்றார் ஆவேசமாக!.
இதுகுறித்து, குமாரைத் தாக்கியதாகச் சொல்லப்படும் பாலாஜியிடம் பேசினோம்.
"நாங்க மதுவெல்லாம் விற்கவில்லை. நானும், சேர்மனும் சேர்ந்து முன்பு பட்டாஸ் கடை நடத்தினோம். இப்போ, நான் தனியா நடத்திக்கிட்டு இருக்கிறேன். குமார் அன்னைக்கு என்கிட்ட வந்து, 'ஒரு நிகழ்ச்சி நடத்தணும். ரூ. 2000 பணம் வேண்டும்'னு கேட்டார். நான் தர முடியாதுனு சொன்னதும், பிரச்னை பண்ணினார். அதனால், இரண்டு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது. நான் அவர் செல்போனை எல்லாம் பிடுங்கவில்லை. தவறான தகவல்களை பரப்பி, எங்க மேல கேஸ் போட பார்க்கிறார்" என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து, பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் 'பட்டாஸ்' செல்வராஜிடம் பேசினோம்.
"குமார், லெட்டர் பேடு கட்சி நடத்துபவர். அதை வைத்து மிரட்டி பலர்கிட்டயும் பணம் பறிக்க முயற்சி பண்ணுவார். அப்படிதான், அன்னைக்கு அவங்கக்குள்ள பிரச்னை நடந்திருக்கு. இதுல என் பேரை ஏன் இழுக்குறார்னு தெரியலை. நான் எங்கேயும், யாரையும் சட்டவிரோதமாக மது விற்க சொல்லவில்லை. நானும் மது விற்கவில்லை. பாலாஜி என்பவர் யாரென்று தெரியவில்லை. என்ன நடந்தது என்று தீர விசாரித்துவிட்டு, எழுதுங்க. என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. மருத்துவமனையில் இருக்கிறேன். அதனால், நான் பிறகு பேசுகிறேன்" என்றபடி, போனை வைத்துவிட்டார்.
இறுதியாக, பள்ளிபாளையம் காவல்நிலைய எஸ்.ஐ செந்திலிடம் பேசினோம். ``நான் டெபுடேஷன் பணியில் வேறு இடத்துக்கு வந்துள்ளேன். ஆய்வாளர்தான் அந்த வழக்கை விசாரிக்கிறார். அவரிடம் பேசுங்களேன்" என்றவரிடம், "உங்கமீதுதான் குமார் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்" என்றோம்.
அதன்பிறகு பேசிய எஸ்.ஐ செந்தில், "பாலாஜி தரப்புக்கும், குமார் தரப்புக்கும் ஏதோ பிரச்னை. அதனால், அடிச்சுக்கிட்டாங்க. நான்தான் குமார் செல்போனை பாலாஜிகிட்ட இருந்து வாங்கிகொடுத்தேன். மத்தபடி, நான் குமார் மீது பொய் வழக்கு போட பார்த்தேன், சேர்மன், பாலாஜி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று சொல்வதுதான் பொய்க்குற்றச்சாட்டுகள்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/pJwBDaO
via
