நெல்லை: பரிசு விழுந்ததாகக் கூறி பண மோசடி; அப்பாவி கிராம மக்களை ஏமாற்றிய மூவர் கைது!

0

மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஏமாற்றும் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸார் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும்போதிலும், அத்தகைய தவறான நபர்களிடம் அப்பாவி மக்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு கும்பல் ஏமாற்றி பணம் பறித்த தகவல் தெரியவந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம், கீழதென்கலம் கிராமத்தைச் சேர்ந்த காசி ராமர் என்ற 50 வயது விவசாயியை அடையாளம் தெரியாத நபர்கள் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். அவருடைய மொபல் நம்பர், பரிசுக் குலுக்கல் மூலம் தேர்வாகியிருப்பதாகவும், அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக விழுந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

பரிசாகக் கிடைத்திருக்கும் இரு சக்கர வாகனத்தைப் பெறுவதற்கு பணம் செலுத்துமாறு கேட்டிருக்கின்றனர். குறைந்த பணத்துக்கு இரு சக்கர வாகனம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் காசி ராமர் இரண்டு தவணைகளாக 38,000 ரூபாய் பணத்தைச் செலுத்தியிருக்கிறார். அதன் பின்னர் அந்த நபர்களிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதனால் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பரிசு விரைவில் வரும் என்று நாள்களைக் கடத்தியிருக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுடன் கைதானவர்கள்

ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை காசி ராமர் உணர்ந்து, நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனிடம் இது குறித்து புகார் அளித்தார். அதே போல மேலச்சேவல் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்ற 38 வயது இளைஞரும் அதே கும்பலிடம் 42,000 ரூபாய் இழந்திருக்கிறார். அவரும் இது குறித்து புகார் அளித்ததால் இந்தக் கும்பல் குறித்து விசாரணை நடத்துமாறு சைபர் க்ரைம் போலீஸாருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டார்.

மோசடி கும்பலைப் பிடிக்க சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மோசடியில் ஈடுபட்ட கும்பல் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற சைபர் க்ரைம் போலீஸார், மோசடி கும்பலைச் சேர்ந்த இசக்கிமுத்து, அய்யனார், காளீஸ்வரன் ஆகிய மூவரைக் கைதுசெய்தனர்.

கைது

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தினமும் அப்பாவி மக்களைத் தொடர்பு கொண்டு பரிசு விழுந்திருப்பதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, அந்தக் கும்பலிடமிருந்து கார், இரு சக்கர வாகனங்கள், லேப் டாப், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்கள், இத்தகைய மோசடி கும்பலை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Hb4Xfuq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*