
இஸ்ரேல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. அந்த நாட்டின் நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்ட காரணத்தினாலேயே, மக்கள் வீதிக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகர்ப் பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைக் கண்டித்து 10 லட்சம் மக்கள் அணி திரண்டிருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. என்ன நடக்கிறது இஸ்ரேலில்?
நீதித்துறையில் சீர்திருத்தம்!
நீதித்துறைச் சீர்திருத்தங்களின்படி, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவோ, நீக்கவோ செய்யலாம். மேலும், நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் அரசு பிரதிநிதிகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம். இதனால், இஸ்ரேல் அரசு விரும்பும் நபர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். இதோடு அரசுத் தலைமை வழக்கறிஞரின் அதிகாரம் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது. இதற்கு, சாமானிய மக்கள் முதல் இஸ்ரேலின் மேல்மட்டத் தலைவர்கள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவ மந்திரியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பு தெரிவித்த அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் இஸ்ரேல் பிரதமர். மேலும் மக்களுக்கு இதில் ஏற்பில்லை என்பதால், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக் நீதித்துறை சீர்திருத்தங்களைக் கைவிட வலியுறுத்தியிருக்கிறார்.
வெகுண்டெழுந்த மக்கள்!
இஸ்ரேல் அரசு கொண்டு வந்த நீதித்துறைச் சீர்திருத்தம் நாட்டின் ஜனநாயக மாண்புகளைக் குறைக்கும் எனக் கூறி அனைத்துத் தரப்பு மக்களும் ஜனவரி மாதமே போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் நாடே ஸ்தம்பிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில், மார்ச் 27-ம் தேதி நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும்விதத்தில் பணிமுடக்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு அருகே 10 லட்சம் மக்கள் அணி திரண்டதால் இஸ்ரேல் அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
2023 ஜனவரி முதல் தொடரும் போராட்டத்துக்கு, பிரதமர் தனது கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார். `இது எதிர்க்கட்சிகளின் சதி' என்றும் சாடிவருகிறார். சாமானிய மக்கள் மட்டுமின்றி நாட்டின் ராணுவ வீரர்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் போராட்டத்தால் இஸ்ரேலில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. `நீதித்துறை சீர்திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகயிருக்கிறது. பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. ஆகவே, நாட்டின் பிரதமர் பதவி விலக வேண்டும்" என்றும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஊழல் குற்றச்சாட்டுகள்!
கடந்தகாலங்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தொழிலதிபரிடமிருந்து பரிசுப்பொருள்களைப் பெற்றதாகவும், மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. `இந்த விசாரணையில் சதி இருக்கிறது, விசாரணை அதிகாரியை முதலில் விசாரியுங்கள்' எனக் கூறியிருந்தார் பெஞ்சமின். தன்மீதான ஊழல் புகார்களை மறைக்கவும், தான் தப்பித்துக்கொள்ளும் நோக்கிலும் இந்தச் சட்ட மசோதாவை இஸ்ரேல் பிரதமர் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.
மக்களின் தொடர் போராட்டங்களால் நாட்டின் வணிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது, நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாலும், அரசின் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே இதை எதிர்ப்பதாலும், நீதித்துறை சீர்திருத்த மசோதாக்களை ஒத்திவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாஹு அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ``நீதித்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளில் அரசு மற்றும் அரசியல் தலையீடுகள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. கருத்தியல்ரீதியான எதிர்ப்புகளுக்கு இஸ்ரேல் அரசு செவிசாய்க்காததன் விளைவே மக்களை வீதிக்கு வரவைத்திருக்கிறது. 10 லட்சம் மக்கள் வீதிக்கு வந்து ஜனநாயகத்தை மீட்டெடுத்திருக்கின்றனர்" என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
from விகடன்
umn news
