ரூ.730 கோடி வாடகை பாக்கி - மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

0

மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு, 1946 முதல் 99 ஆண்டுகளுக்கு, அரசுக்கு சொந்தமான சுமார் 160 ஏக்கர் நிலம், வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வாடகை தொகை காலத்துக்கு தகுந்தார் போல மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு முன்வந்தபோது, அதனை ஏற்க மறுத்து நீதிமன்றம் சென்றது சென்னை ரேஸ் கிளப்.

சென்னை உயர் நீதிமன்றம்

வாடகை பாக்கி

1946-ம் ஆண்டு சுமார் 160 ஏக்கர் பரப்பளவிலான அரசு நிலத்தைச் மெட்ராஸ் ரேஸ் கிளப்பு வசம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது. சுமார் ரூ.614 வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 1970-ம் ஆண்டு வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி, அரசு தரப்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்குப் பதிலளித்த சென்னை ரேஸ் கிளப், 1946-ம் ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்து எந்த விதிகளும் இல்லை என்றது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அரசு 1970 முதல் 2004 வரையிலான வாடகை பாக்கி தொகையாக சுமார் 730 கோடி ரூபாயைச் செலுத்தும்படி சென்னை ரேஸ் கிளப்புக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டது.

நீதிமன்றம் அதிரடி

வாடகை பாக்கி செலுத்த மெட்ராஸ் ரேஸ் கிளப்பு நிர்வாகம் தயாராக இல்லை. அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு நிர்ணயித்துள்ள வாடகை பாக்கி தொகையான சுமார் ரூ.730 கோடியைச் சென்னை ரேஸ் கிளப் நிர்வாகம் ஒரு மாதத்திற்குள் செலுத்திட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பு

மேலும், சந்தை மதிப்பு வாடகையை உயர்த்துவதற்குத் தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது. ஆகவே வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் மனுதாரரைக் காவல் துறையினர் உதவியுடன் வெளியேறி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது” என தனது உத்தரவில் தெரிவித்தது.

அறிவுரை வழங்கிய நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு காலத்துக்கு தகுந்தார் போல வாடகை தொகையை மறு சீரமைக்க ஆய்வுகள் நடத்தியிருக்க வேண்டும். மேலும் சுதந்திரத்துக்கு முன்பு நிர்ணயம் செய்த தொகையை வசூலிக்காமல், நிகழ்கால சந்தை மதிப்பை வைத்து அரசு நிர்ணயம் செய்திருக்க வேண்டும். 2004-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி கிட்டதட்ட 12,381 கோடி ரூபாயை 2 மாதங்களில் செலுத்தக் கூறி ஒரு மாதத்தில் நோட்டீஸ் அனுப்பவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. குறிப்பிட்ட பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்பாடுகளில் எந்த பொது நலனும் இல்லை. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாமே என யோசனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதென்பது ஊரறிந்தது. இந்த வேளையில் அரசுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி உள்ளிட்டவற்றை அரசு முறையாக வசூலிப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும் நீதிமன்றம் குறிப்பிட்டது போலச் சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு சரியான நேரத்தில் வாடகை தொகையை உயர்த்திடுவதிலும், அரசு கவனம் செலுத்திட வேண்டும். மேலும் சென்னை ரேஸ் கிளப்பை போல் காலம் தாழ்த்தி வருவோரின் பட்டியலை அரசு வெளியிட்டு வாடகை தொகை வசூலை வேகப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*