`ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும்’ ; `ஆளுநரைக் கையாளத் தெரியவில்லை’ - அரசியல் கட்சிகளின் பார்வை என்ன?

0

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவியேற்றது முதலே சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி புயலைக் கிளப்பியிருக்கிறார் தமிழக ஆளுநர். அதற்குத் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

என்ன பேசினார் ஆளுநர்?

- ஆளுநரே முதன்மையானவர். சட்டப்பேரவை ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

- சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாவானது ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும்.

- வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் தொண்டு நிறுவனங்களுக்கு வருகிறது. ஆனால் அந்த நிதி, குறிப்பிட்ட தொண்டுக்குப் பயன்படுத்தப்படாமல், வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிதி உதவிகள் பெரிதும் உதவியிருக்கின்றன. உதாரணமாகக் கூடங்குளம் அணு உலை அமைக்கப்படும்போது, பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

- தமிழக சட்டப் பேரவை தீர்மானங்களை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகவே பொருள்

`ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும்’

இது தொடர்பாக நம்முடன் பேசிய திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் சிவ ஜெயராஜ், ”ஆளுநர் ஆர்.என் ரவி இவ்வாறு பேசுவது முதன்முறையல்ல. தொடர்ந்து இதுபோலான விரும்பத்தகாத வகையில் பேசிவருகிறார். ‘அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்தான் ஆளுநர்’ என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது, அதனை மதிக்காமலும் சட்டப் பேரவையை உதாசீனப்படுத்துவது போலவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களையும் அவமானப்படுத்து போல் பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. மசோதாவை அரசு அனுப்பி வைத்தால் ஒன்று ஒப்புதல் அளிக்கவேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும், அதுவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணி.

சிவா ஜெயராஜ்

ஆனால் தமிழக சட்டப் பேரவை தீர்மானங்களை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகவே பொருள் என பேசியுள்ளாரே, இது அரசியலைப்பு சட்டத்தில் எங்காவது இருக்கிறதா? ஆளுநரே முதன்மையானவர். சட்டப்பேரவை ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது என ஆளுநர் பேசுகிறார் என்றால் அரசியலைப்பு சட்டத்தை மீறுவதாகப் பொருள். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநராகத் தொடர தகுதியற்றவர். உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்திட வேண்டும்” எனக் கொதிக்கிறார் அவர்.

`அதிகார வரம்பை மீறிய செயல்’

``ஆளுநர் பேசிய கருத்துகள் அனைத்தும் அவரின் அதிகார வரம்பை மீறியவை. மக்களின் நலனுக்கு எதிரான விஷயங்களைச் செய்வதையும் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இவர் என்றாவது மரணமடைந்த ஒரு குடும்பத்தையாவது சந்தித்து விசாரித்ததுண்டா? மாறாக ஆன்லைன் ரம்மியை நடத்தும் தொழிலதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

இதுபோன்ற செயல்களை எப்படி ஜீரணித்துக் கொள்ள இயலும்? மக்களின் நலன்களின் சிறிதேனும் நாட்டம் இருக்கிறதா அவருக்கு? ஆர்.என் ரவி ஆளுநராகத் தொடரும் தகுதியை இழந்துவிட்டார்” என்கிறார் சிபிஎம் கட்சியின் முக்கிய பிரமுகர் ஜி.ராமகிருஷ்ணன்.

எந்த மசோதாவையும் நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை அரசியலைப்பிற்கே எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

பாஜக வினரோ, அரசியலமைப்பில் இருப்பதை தான் ஆளுநர் பேசுகிறார் என்கிறார்கள்.

`திமுக-வுக்கு ஆளுநரைக் கையாளத் தெரியவில்லை’

அதிமுக வின் சசிரேகா, ``அதிமுக ஆட்சிக் காலத்திலும் ஆய்வுப் பணிக்குச் செல்கிறேன், தூய்மை பணிக்குச் செல்கிறேன் என அப்போதைய ஆளுநரின் தலையீடுகள் இருந்தாலும் மக்கள் நலனில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு சட்ட நுணுக்கங்கள் குறித்து அறிந்திடாத அரசாக இருக்கிறது. ஆளுநர் எதிர்த்து வசனம் பேசிக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராதபோதும் சட்ட நுணுக்கங்களை அறிந்து நீதிமன்றத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தினோம்.

சசிரேகா

திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களே 38 எம்.பிக்கள் இருக்கிறார்கள், சட்டமன்ற மன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருந்தும் எதுவும் செய்யமுடியாமல் ஆளுநர் மீது பழி சொல்கிறார்கள், குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ’ஆளுநரைக் கையாளத் தெரியாமல் திணறுகிறது திமுக அரசு’ என விமர்சிக்கிறார் அவர்.

``மக்கள் போராட்டத்தை அவமதிப்பதா?”

``அதிகார திமிரில் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என் ரவி. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் ஆளுநர் ஆர்.என் ரவியின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதற்காகவாவது கொஞ்சம் நன்றிக் கடனுடன் தமிழக ஆளுநர் நடந்துக் கொள்ள வேண்டும். தமிழ் மண்ணிலிருந்து கொண்டு மக்களை சீண்டுவது ஏளனம் செய்வது போல் ஆளுநர்கள் தொடர்ச்சியாகப் பேசி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தி திணிப்பு போராட்டத்தை தன்னெழுச்சியாக நடத்திய மாநிலம் தமிழ்நாடு, அநீதிகளை எதிர்த்துப் போராடக் கூடிய குணம் படைத்தவர்கள் தமிழர்கள். இந்நிலையில் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தினர் எனப் போராடிய மக்களைக் கொச்சைப் படுத்துகிறாரா ஆளுநர் ஆர்.என் ரவி?

இடும்பாவனம் கார்த்திக்

ஸ்டெர்லைட் ஆலை விதிமீறலில் ஈடுபட்டதை நீதிமன்றங்களே சுட்டிக் காட்டி ஆலை நிர்வாகத்திற்குத் தண்டனையாக பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு மற்றும் சுகாதார சீர்கேடுகள் இருந்ததால் மண்ணில் மக்கள் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 100வது நாளில் அரங்கேறிய அறவழிப் போராட்டத்தை வன்முறை நிகழ்வாக மாற்றியது காவல்துறையே தவிர மக்கள் அல்ல.” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்.

”தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் அவர்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும்” என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ள நிலையில் கருத்தைத் திரும்பப் பெறுவாரா ஆளுநர்?!



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*