
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இடவசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது, 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டடத்தில் மக்களவையில் சுமார் 888 பேர் வரையிலும், மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான உறுப்பினர்கள் அமரும் வகையிலும் கட்டப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் கூட்டு கூட்டத்தின் போது 1280 உறுப்பினர்கள் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் வருகிற மே 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், திறப்பு விழா தேதியான மே 28-ம் தேதி, சாவர்க்கரின் பிறந்தநாள் ஆகும். அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. “இது, தேசத்தின் முன்னோர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்” என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, “நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். நாடாளுமன்றமோ, சட்டம் இயற்றும் பிரிவாக உள்ளது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும். மோடியை பொறுத்தவரை, சுய கெளரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்” என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா, “புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறக்கக்கூடாதா?” என்று கேட்டுள்ளார். அதேநேரத்தில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. “புதிய கட்டடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாக அமைப்பின் தலைவர். சட்டம் இயற்றும் அமைப்பின் தலைவர் அல்ல. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவை தலைவரோ கூட திறந்து வைக்கலாம். அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது. பிரதமர் ஏன் தன்னுடைய நண்பர்களின் சொந்த பணத்தால் கட்டப்பட்டதுபோல் நடந்து கொள்கிறார்?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இருந்த திலகர் போன்றோருக்கு எதிராக இருந்த காங்கிரஸ், பல நேரங்களில் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஜால்ரா அடித்திருக்கிறார்கள். அதில் காந்தி விதிவிலக்காக இருந்திருக்கிறார். அதனால் வெள்ளைக்காரர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக இருக்கக் கூடிய காங்கிரஸ், இந்த இருவருக்கும் எதிராக சுதந்திர போராட்டத்தில் கடுமையா பங்கு கொண்ட சாவர்க்கர் பிறந்த தினத்தில் திறக்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது புரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளின் பரிபூரண பிம்பம் சாவர்க்கர். சாவர்க்கரை தேச துரோகி என்று சொல்லுபவன் பரிபூரண தேச துரோகி. கலப்படமற்ற தேச துரோகி. இந்த நாட்டின் ரத்தம் ராகுல் காந்தியிடம் ஓடவில்லை. இந்திய ரத்தம், இந்தியன் என்கிற எண்ணம் இரண்டுமே ராகுல் காந்திக்கு கிடையாது. அதனால் காங்கிரஸின் இந்த கருத்தில் அதிசயமில்லை... ஆச்சரியமில்லை.

அடுத்து... அந்தந்த மாநிலங்களின் அத்தனை முக்கியமான நிகழ்ச்சிகள், முக்கியமான திட்டங்கள் இவைகளை தொடக்கி வைப்பது, கலந்து கொள்வது, தீர்மானிப்பது ஆளுநர்கள் என்று இவர்கள் ஒப்புக் கொண்டால் இதையும் ஒப்புக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் அத்தனை நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்து கொள்ள கூடாது ஆளுநர் ஆர்.என்.ரவியைத்தான் ஆழைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க கூட்டணி கட்சிகளால சொல்ல முடியுமா? கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் செல்லா காசு, ஆளுநர்கள் அத்தனை திட்டங்களையும் துவக்கி வைப்பார்கள் என்று இவர்கள் ஒப்பு கொண்டால், இவர்கள் சொல்லும் கருத்தையும் ஒப்புக்கொள்வோம்” என்றார் காட்டமாக.
from விகடன்
umn news
