தூர்தர்ஷனின் பிரபல செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் உயிரிழப்பு!

0

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இங்குள்ள செல்வந்தர்களின் வீடுகளில் மிகவும் அரிதாக தொலைக்காட்சி பெட்டிகள் இருந்த காலம் அது. அப்போது மக்களின் பிரதான மற்றும் ஒரே சேனல் என்றால் அது தூர்தர்ஷன்தான். அந்தக் காலகட்டத்தில் சினிமா மட்டுமல்லாது தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தவர்களும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டனர். அப்படி 1971-ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தவர் கீதாஞ்சலி ஐயர்.

கீதாஞ்சலி ஐயர்

திருத்தமான பேச்சு, தெளிவான உச்சரிப்பு, எளிமையான அலங்காரம் என அந்தக் காலத்தில் தன் தனித்துவமான அடையாளம் மற்றும் திறமையால் மக்களை ஈர்த்தவர் கீதாஞ்சலி.

இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் லோரெட்டோ கல்லூரியில் ஆங்கில பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் தேசிய நாடகப்பள்ளியில் டிப்ளோமாவும் முடித்துள்ளார். அதன் பிறகு 30 ஆண்டுக்காலம் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமானார்.

கீதாஞ்சலி ஐயர், தன் பணிக்காலத்தில் நான்கு முறை சிறந்த தொகுப்பாளர் விருதைப் பெற்றுள்ளார். குறிப்பாக 1989-ம் ஆண்டு இவரின் சிறந்த பணி மற்றும் பங்களிப்புக்காக இவருக்கு இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருது வழங்கப்பட்டுள்ளது.

தூர்தர்ஷனில் பணி ஓய்வுக்குப் பிறகு சிஐஐ எனும் இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பின் ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். மேலும் `கந்தான்' என்ற இந்தி தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

கீதாஞ்சலி ஐயர்

இந்நிலையில் கீதாஞ்சலி ஐயர் உடல்நிலை பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலை தன் 71-வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பொதுமக்களும், தொலைக்காட்சிப் பணியாளர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

``அவர் பார்கின்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார். இன்று காலை தன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீடுதிரும்பிய போது சரிந்து விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்” என கீதாஞ்சலியின் நண்பர் கூறியுள்ளார்.



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*