Baby:`காதல் படத்தில் இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்!'- ஆனந்த் தேவரகொண்டாவின் `பேபி' எப்படி இருக்கு?

0

காதலும் காதல் சார்ந்த கதைகளும், சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்று.

காதல் படங்கள் சொல்லப்படுவதில் புதுமை இருந்தாலோ அல்லது அதன் எமோஷன் நன்கு கடத்தப்பட்டிருந்தாலோ, அதற்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி திடீரென்று ஏதொவொரு மொழியில் ஒரு காதல் படம் வெளியாகி, மற்ற மாநிலங்களில் கூட மக்களால் கொண்டாடப்படும். அதனை சிலாகித்து பல சோஷியல் மீடியா பதிவுகள், இன்ஸ்டா ரீல்ஸ்களும் இணையத்தை தெறிக்கும். 'பிரேமம்', '96', 'தியா' என ஒவ்வொரு மொழியிலும் சில உதாரணங்கள் இருக்கின்றன.

அப்படி டோலிவுட்டில் தற்போது வெளியாகி இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் காதல் படம்தான், 'பேபி'. ஒரு சிலர் இந்தப் படத்தைக் கொண்டாடி ஹார்டின் விடுகிறார்கள். ஒரு சிலருக்குப் படம் சுத்தமாக பிடிக்கவில்லை என தம்ப்ஸ் டவுன் காட்டுகிறார்கள் என இரண்டு எக்ஸ்ட்ரீமும் இருக்கிறது. படம் எப்படியிருக்கிறது?

வைஷ்ணவி சைதன்யா

கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஹீரோ ஆனந்த் தேவரகொண்டா (ஆனந்த்). அவரது எதிர் வீட்டுப் பெண் வைஷ்ணவி (வைஷ்ணவி சைதன்யா). இருவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். வைஷ்ணவிக்கு ஆனந்த் மீது ஒருதலைக் காதல். அது வெகு விரைவில் டபுள் சைடாகிறது. ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாகக் காதலிக்கின்றனர். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஆனந்த் ஆட்டோ டிரைவராகிவிடுகிறார். நாயகியோ படிப்பில் கில்லி. பெரிய கல்லூரி ஒன்றில் சேர்க்கிறார். அங்கு ஆடம்பரமாக உள்ள அவரின் தோழிகளுடன் சேர்ந்து அவர்களின் வாழ்க்கை முறைக்கு இவரும் பழக்கப்படுகிறார். நடை, உடை, மேக்கப், ஹேர்ஸ்டைல், பப்புக்கு செல்வது, நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது என அனைத்திலும் மாற்றங்கள்.

அந்த கேங்கில் இருக்கும் விராஜ் அஷ்வின் என்ற பையனோடு நட்பாகிறது. அவரது ஆடம்பர வாழ்க்கை வைஷ்ணவிக்கு பிடித்துப்போய் பழகத் தொடங்குகின்றனர். ஆனால், அஷ்வின் மனதிலோ காதலோட்டம். இந்த பாய் பெஸ்டியின் என்ட்ரி ஆனந்த் - வைஷ்ணவி காதலை என்ன செய்கிறது, வைஷ்ணவியின் மனக் குழப்பம், அவர் எடுக்கும் முடிவுகள்,வைஷ்ணவியையே நினைத்து உருகிக்கொண்டிருக்கும் ஆனந்தின் மனநிலை, இவர்களுக்குள்ளான மனக்கசப்புகள் என கதை நீள்ள்ள்கிறது. இறுதியில் ஆனந்த் - வைஷ்ணவி காதல் கரை சேர்ந்ததா அல்லது கரைந்து போனதா என்பதை ட்விஸ்ட் என்று சில விஷயங்கள் வைத்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் தேவரகொண்டா

மிடில் கிளாஸ் இளைஞனாக ஆனந்த் தேவரகொண்டா. சில காட்சிகள் நன்றாகவே நடித்திருக்கிறார். எமோஷன் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். சில காட்சிகளில் சிரிப்பு வந்துவிடுகிறது. கதைக்கு வலுசேர்க்கும் அழுத்தமான பாத்திரம் நாயகி வைஷ்ணவி சைதன்யாவுக்கு. அதில் நன்கு ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்தான் மொத்த படமும். படத்தில் கதாநாயகர்களை குறிப்பிட்ட ஹீரோவின் ரசிகர் எனக் காட்டுவது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் ஹீரோ `இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸின்' ரசிகர் என காட்டியிருக்கிறார்கள். வசனங்களுக்குப் பெயர் போனவர் த்ரிவிக்ரம். அதனால், அவரது வசனங்கள் ஆங்காங்கே படத்தில் இருந்தன. அவை எல்லாம் கிளாப் மொமன்டுகள். பழைய காலத்து கதைதான் என்றாலும் சில புதுமையான காட்சிகள், கவுன்ட்டர்கள் என இயக்குநர் சாய் ராஜேஷ் கவனிக்க வைக்கிறார். அதே சமயம், ஒரு கட்டத்தில் கதை முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், மீண்டும் தொடக்கப்புள்ளி வைத்து இழுத்திருப்பது ஏன், வாய் பேச முடியாத தன் அம்மாவிடம்  ஹீரோ ஒரு போதும் அன்பாக பேசாதது, எரிந்துவிழுவது ஏன் என பல கேள்விக்குப் பதிலில்லை. 

வைஷ்ணவியின் வீட்டில் இவர் என்ன செய்கிறார், எங்கே செல்கிறார், இவரின் நண்பர்கள் யார், முழுக்க முழுக்க ஆளே மாறிப்போனது எப்படி என எந்த கேள்வியும் கேட்கவில்லை. அது யதார்த்ததில் இருந்து விலகியிருக்கிறது. தோழிகள் மூலம் தன்னை மாடர்ன் பெண்ணாக மாற்றிக்கொள்ளும் நாயகி, அடுத்த காட்சியிலேயே அவர்களைவிட பர்ஃபெக்டான மாடர்ன் லுக்கில் இருப்பதால் 'எப்புட்றா?' என நம் மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்கிறது. ஹீரோயினை தவிர, வேறு யாரும் அவர் ஆட்டோவில் செல்வது போன்று காட்டவில்லை. தனக்கு துரோகம் செய்துவிட்டாள் என்று தெரிந்தவுடன், காதலியை கொலை செய்கிறேன் என்று ஆத்திரப்பட்டு வீட்டுக்கு சென்ற ஹீரோ, அங்கு நாயகி தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து, அவள் போர்வையை சரி செய்துவிட்டு வருவது காமெடி. சில இடங்களில் அண்ணன் விஜய் தேவரகொண்டாவை ரிப்ளிக்கேட் செய்கிறார், ஆனந்த் தேவரகொண்டா. 

பேபி

ஒரு மாடர்ன் காதல் கதைக்கான விஷுவலை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், பால்ரெட்டி. விஜய் பல்கனின்னின் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். லவ் படங்களில் பாடல்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. ஆனால், அது இங்கு மிஸ்ஸிங். படம் 2 மணி நேரம் 51 நிமிடங்கள். என்ன சொல்ல வருகிறார்கள் என்பது ஒரு சில காட்சிகளிலேயே புரிந்துவிடுகிறது. ஆனாலும், இவ்வளவு நீளம் வைத்திருப்பது படத்தின் பெரிய மைனஸ். காதல் படங்களில் வில்லனாக இருப்பது காதலே அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அல்லது சமூகம். காதலர்கள் இருவர் காலப்போக்கில் வெவ்வேறு வாழ்க்கை முறைக்கு மாறும்போது, உளவியலா, பொருளாதார ரீதியாக என பல தளங்களில் இருவருக்கும் வித்தியாசம் உண்டாகும். அதை சரியான விதத்தில் கையாள முடியாமல் தடுமாற்றம் ஏற்படுவது யதார்த்தம். அதை எப்படி கையாள்வது என்பது இன்று பலருக்கும் இருக்கும் கேள்வி.

ஆனால், அப்படியான ஒரு கதையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் அதற்கு சரியான தீர்வைத் தந்தாரா என்றால் இல்லை. மாறாக, எளிய பின்னணியிலிருந்து மாநகரங்களுக்குச் செல்கிற பெண் குடிப்பது, பப்புக்குச் செல்வது என பழகுவார்கள் என்பதாகக் காட்டி, அவர்கள் பின்னாட்களில் தடம் மாறிச் செல்வர் எனும்விதமாக திரைக்கதை அமைத்திருப்பது ஏமாற்றமான ஒன்று. வெளியூர்களுக்குச் சென்று படிக்கும் சுதந்திரம் இன்றும் பெண்களுக்கு மறுக்கப்படுகிற சூழலில் இதுபோன்ற சித்தரிப்புகள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த 'பேபி' படத்தில் வில்லனாக இருப்பது ஹீரோயின்தான் என்பது போல சித்தரித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. கதையின் சுவாரஸ்யத்தைத் தாண்டி பொறுப்புணர்வுடனும் எழுதப்பட்டிருந்தால் மேலே சொன்ன காதல் படங்களின் வரிசையில் பேபியும் இருந்திருக்கும். ஆனால், அப்படி இல்லாதது ஏமாற்றமே!



from Movie Reviews
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*