
வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துப் பிரபலமானவர் அங்காடித்தெரு சிந்து. புற்றுநோய் காரணமாக கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். மருத்துவ சிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் மருத்துவ உதவி கேட்டு அவர் கொடுத்திருந்த பேட்டி பலரையும் உறையச் செய்த நிலையில் அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிந்து இல்லாமல் அவர் இருந்த அறை அவரின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு இருந்தது. மருந்துகளின் வாசனை அந்த அறையை சூழ்ந்திருந்தது. மருத்துவ சாதனங்கள் ஆங்காங்கே இருந்தன. கண்ணீர் சுமந்து பேட்டிக் கொடுத்திருந்த சிந்து சிரித்தவாறு அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்தார். அவருடைய மகள் பவித்ராவிடம் பேசினேன்.
"மூணு வருஷமா அம்மா ரொம்பவே அவஸ்தைப்பட்டாங்க. நாங்க பார்க்காத ட்ரீட்மென்ட்டே இல்ல. கேன்சர் ஸ்டேஜ் அதிகமாகிடுச்சு. நுரையீரலில் தண்ணீர் ஏறிட்டதால மூச்சுவிட முடியாம கஷ்டப்பட்டாங்க. முதலில் ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் போனோம். அங்க பணம் கொடுக்க முடியலைன்னு ஓமந்தூரார் கூட்டிட்டு வந்தோம். அங்கேயும் அம்மாவுடைய சிகிச்சைக்கான வசதிகள் இல்லன்னு அம்மாவோட ஃப்ரெண்ட் ஜேம்ஸ்னு ஒருத்தங்க இருக்காங்க. அவங்க சொல்லி அவங்களுக்குத் தெரிந்த மருத்துவமனைக்கு வந்தோம். நுரையீரலில் தண்ணீரெல்லாம் இல்ல. கட்டி மாதிரிதான் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. அதுமட்டுமில்லாம கிட்னியும் பாதிக்கப்பட்டிருக்குன்னு சொன்னாங்க.
மூணு மாசமா அம்மா ஒருவேளை மட்டும் கொஞ்சமா கஞ்சி சாப்பிடுவாங்க. அவ்ளோதான்! அவங்களுக்கு எப்பவும் என்னைப் பற்றியே தான் கவலை. நான் ஃபேஷன் டிசைனிங் முடிச்சிருக்கேன். நடிகை சரண்யா மேடம்கிட்ட தான் படிச்சேன். அம்மா ரொம்ப வீட்டுக்குள்ளேயே வச்சு வளர்த்துட்டாங்க. எனக்கு வெளி உலகமே தெரியாது. எல்லாமே அம்மாதான். போன வருஷம் பொங்கல் அன்னைக்கு என் கணவர் இறந்துட்டாரு. எனக்கு ஒரு வயசுல பொண்ணு இருக்கா. அம்மா, பாப்பாவைப் பார்த்துட்டு வீட்ல தான் இத்தனை நாளா இருந்தேன். எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிட்டா நீ என்ன பண்ணுவ?னு என்னைப் பற்றி தான் கவலைப்பட்டுட்டு இருந்தாங்க. அவங்க இறந்து போகுறதுக்கு முந்தைய நாள் இரவு கூட என்னை தான் பார்த்துட்டே இருந்தாங்க.
அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு உதவி கேட்டப்ப சிலர் அவங்களால முடிஞ்ச உதவிகளைப் பண்ணினாங்க. பிளாக் பாண்டி அண்ணா அம்மாவுக்கு முடியலைன்னு சொன்ன அப்போதிலிருந்து இப்ப வரைக்குமே சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஐசரி கணேஷ் சாரும் ஹெல்ப் பண்ணியிருக்கார். மூணு வருஷமா அம்மா ஷூட்டிங் எங்கேயும் போகல. அம்மாவுடைய ஃப்ரெண்ட்ஸ், மீடியாவிலுள்ள சிலர் பண்ணின ஹெல்ப்னால தான் சர்வே பண்ணிட்டு இருந்தோம்.
அம்மா லாக்டவுன் சமயத்தில் பொதுசேவை நிறைய பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப அடிக்கடி மயங்கி விழுந்துட்டு இருந்தாங்க. என்னன்னு செக் பண்ணிப் பார்த்தப்ப தான் மார்பக புற்றுநோய் இருக்குன்னு சொன்னாங்க. 30 வயசுக்கு மேல உள்ள பெண்களுக்கு அல்லது ஜீன் மூலமாகவும் வரலாம்னு சொன்னாங்க. எங்க பாட்டிக்கு ஏதோ ஒரு வகை கேன்சர் இருந்திருக்கு. ஆரம்பத்திலேயே பெட் ஸ்கேன் எடுத்திருக்கணும். நாங்க அது எடுக்காம நேரடியா Biopsy பண்ணினதுதான் பிரச்னையாகிடுச்சு. கேன்சர் உடம்புல பரவிடுச்சு. ஆப்ரேஷன் பண்ணியும் சரியாகல!" என்றவர் தொடர்ந்து பேசினார்.
"இன்டஸ்ட்ரியில் பாதி பேருக்கு அம்மா இறந்தது தெரியல. இப்ப தான் ஃபோன் பண்ணி சிலர் பேசிட்டு இருக்காங்க. அம்மாவோட ஃப்ரெண்ட் கீதான்னு ஒருத்தங்க இருக்காங்க. அவங்கதான் அவங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்றாங்க. இந்த வீடு வாடகை வீடு. என்னால மாச, மாசம் வாடகை கொடுக்க முடியாது. அம்மா அளவுக்கு எனக்கு திறமை கிடையாது. ஒத்திக்கு வீடு பார்த்துப் போனா எனக்கும் ஹெல்ப் ஆக இருக்கும். அதே மாதிரி இப்ப கைக்குழந்தையை வச்சிருக்கேன். அதனால பொட்டிக் மாதிரி வச்சா பாப்பாவையும் பார்த்துகிட்டு, வருமானத்துக்கும் ஒரு வழி கிடைக்கும். அது ரெண்டுக்கும் தான் ஹெல்ப் தேவைப்படுது. அதற்கான உதவிகள்தான் இப்ப கேட்டுட்டு இருக்கோம்.
விஜய் சேதுபதி சார்கிட்ட விஷயத்தை சொல்லியிருக்கோம். பார்த்துட்டாருன்னா கண்டிப்பா உதவி பண்ணுவாருன்னு நம்பிக்கை இருக்கு. சீமான் சார்கிட்டேயும் சொல்லியிருக்கோம். அவரும் ரெண்டு நாளில் சொல்றேன்னு சொல்லியிருக்கார். அம்மாகிட்ட இல்லைன்னாலும் மத்தவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிற கேரக்டர்.
நமக்கு ஏன் இந்த நிலைமைன்னுதான் வருத்தப்பட்டாங்க. ராத்திரியெல்லாம் தூங்கவே மாட்டாங்க. முழுசா என்னைப் பற்றித்தான் யோசிச்சிட்டே இருப்பாங்க. இப்ப கூட நிம்மதியா போனாங்களான்னு கூடத் தெரியல. பொண்ணுக்காகவும், பேத்திக்காகவும் கொஞ்ச நாள் இருக்கணும்னு நினைச்சாங்க. நம்ம லைஃப்ல கணவரும், அம்மாவும் ரொம்ப முக்கியம். ஒரே வருஷத்துல எனக்கு ரெண்டு இழப்பு. அவங்க ரெண்டு பேரும் இல்லாம வெளியில தான் ஏதோ பேசிட்டு இருக்கேன். மனதளவுல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். குழந்தைக்காகத்தான் போயிட்டு இருக்கேங்கிற மாதிரி தான் இருக்கு!" என்றவரின் குரல் தழுதழுத்தது. ஆறுதல் கூறி விடைபெற்றோம்.
சிந்து தொடர்பாக பவித்ரா இன்னும் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
from விகடன்
Umn news
