
ஒரு கற்பனையான நிலப்பரப்பில் பலசாலியான மலைக்கோட்டை வாலிபன் (மோகன்லால்) தன்னுடைய தம்பி சின்னப்பையன் (மனோஜ் மோசஸ்) மற்றும் ஆசான் அய்யனாருடன் (ஹரீஷ் பேரடி) ஊர் ஊராகச் சென்று அங்குள்ள பயில்வான்களை வென்று தன் புகழைப் பரப்புகிறான். அதைத் தொடர்ந்து, தனது சொந்த ஊரான அம்பத்தூர் மலைக்கோட்டைக்கு வருபவன், அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் தன் மக்களை மீட்க ஆங்கிலேயருடன் மல்யுத்த களம் காணக் களமிறங்குகிறான். இறுதியில், தன் மக்களை அடிமை சங்கிலியிலிருந்து எப்படி மீட்டான், உண்மையிலேயே இந்த வாலிபன் யார், அவனுக்கு எப்படி இவ்வளவு பலம் இருக்கிறது போன்ற கேள்விகளுக்கான பதிலைச் சொல்கிறது லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் 'மலைக்கோட்டை வாலிபன்'.
பயில்வானுக்கான தோற்றத்துடன் தொடக்கக் காட்சியிலேயே ஸ்கோர் செய்கிறார் மோகன்லால். சின்ன சின்ன முகபாவத்தால் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் அகத்தை விளக்கும் பணியைச் சரியாகவே செய்திருக்கிறார். டானிஷ் சைட் அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியைத்தான் செய்திருக்கிறார் என்றாலும், மிரட்டலைத் தாண்டி ஓவர் ஆக்டிங்கால் நம்மைச் சோதிக்கவே செய்கிறது அக்கதாபாத்திரத்தின் தன்மை. ஹரீஷ் பேரடி, மனோஜ் மோசஸ், கதா நண்டி ஆகியோரின் நடிப்பில் குறையேதுமில்லை.
குழந்தைகளுக்கான அமர்சித்ர கதைகள், வாண்டு மாமா கதைகள், அம்புலி மாமா போன்ற ஒரு நாட்டுப்புறக் கதையைக் கையில் எடுத்துக்கொண்டு, அதில் பேன்டஸி, சர்ரியலிஸம், மனித அறம், சமகால படங்களின் அடையாளங்கள் எனப் பல ப்ளேவர்களைச் சேர்த்து, ஒரு வித பிரத்யேக கதைசொல்லலால் ஒரு சோதனை முயற்சியை அரங்கேற்றியிருக்கிறார் இயக்குநர் லிஜோ.
இயக்குநர் எதிர்பார்த்த இந்தக் கதைசொல்லலுக்கு உறுதுணையாக இருக்கிறது மது நீலகண்டனின் ஒளிப்பதிவு. க்ளோஸ் அப் ஷாட்கள், லாங் ஷாட்கள், கட்டே இல்லாத நீண்ட நெடிய சிங்கிள் டேக் ஷாட்கள் எனப் பெரும்பாலான ப்ரேம்கள் ஓவியமாக கண்முன் நிற்கின்றன. ஆங்காங்கே மேடை நாடக பாணியிலான கேமரா நகர்வுகளும், காமிக்ஸ் பாணியிலான ப்ரேம்களும் கவனிக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதையின் சொதப்பலால் இவை ஓவியமாக மட்டுமே மனதில் நிற்கின்றன.
பிரஷாந்த் பிள்ளையின் இசையில் 'ராக்' பாடல் மட்டும் ஆர்வம் தர வைக்கிறது. ஏனைய பாடல்கள் பார்வையாளர்களுக்குச் சோதனையே! பின்னணி இசையால் திரையில் பிரமாண்டத்தைக் கொண்டு வருகிறார் பிரஷாந்த் பிள்ளை. சாமுராய், மேற்கத்தியப் பாணி, எம்.ஜி.ஆர், பக்திப் பாடல்கள், நாட்டுப்புற இசைக் குறிப்புகள், பெர்சிய இசை எனக் கதாபாத்திரங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் கூடுதல் விளக்கம் தர முயன்றிருக்கிறது பின்னணி இசை.
தீபி.எஸ்.ஜோசப்புடைய படத்தொகுப்பின் நுணுக்கத்தைத் திருவிழா காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் உணர முடிகிறது. ஆனால், மொத்த படத்தையுமே மறுபார்வை செய்து, இன்னும் செறிவாகத் தொகுத்திருக்கலாம். அக்கால கோட்டைகள், மல்யுத்த மேடைகள், குதிரைத் திருவிழா எனக் கலை இயக்குநர் கோகுல் தாஸின் உழைப்பில் குறையேதுமில்லை. ரங்கநாத் ராவியின் ஒலி வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.
வாலிபன் என்கிற பயில்வானின் அறிமுகக் காட்சிகள் நிதானமாகவும், படத்தின் கதைசொல்லலுக்கு முன்னோட்டமுமாகவும் அமைந்து, சிறிது சுவாரஸ்யத்தைத் தருகிறது. `செவன் சாமுராய்' படத்தின் `டொஷிரோ மிஃபுனே'வின் சாமுராய் தோற்றத்தையும் நினைவூட்டுகிறது இந்த வாலிபனின் தோற்றம்.
ஆனால், அதற்குப் பிறகு அதே கதைசொல்லல் அன்ன நடை போட்டுச் சோதிக்கிறது. இதுவரையிலான சினிமாக்களின் இலக்கணம், கதைசொல்லல் பாணியை உடைத்து, புதிய முறையில் முயன்றிருக்கிறார்கள் என்றாலும், அதற்கு நியாயம் செய்யும் வகையில் நேர்த்தியான திரைக்கதை அமைக்கப்படவில்லை. வழக்கமான பேன்டஸி நீதிக்கதையை ஒரு ஆர்ட் ஹவுஸ் பாணி கதை சொல்லலில் கடமைக்கு எனப் புகுத்தியிருப்பதுதான் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. அதுவும் முதல் ஒரு மணி நேரம் எங்குமே நகராத கதையால், இந்தப் படத்தின் நோக்கம்தான் என்ன என்றும் கேட்க வைக்கிறது.
பொதுமறையான கதைக்கரு என்பதால் நிறைய நிலப்பரப்பின் அடையாளங்களையும் பல்வேறு காலகட்டங்களின் சூழலையும் வைத்து, கதை நடக்கும் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பேன்டஸி என்றாலும் அந்த உலகம் எப்படி இயங்கும் என்பதற்கான லாஜிக்கைச் சொல்லாததால் இந்தத் தெளிவின்மையும் படத்திற்குப் பாதகமாகிறது.
இரண்டாம் பாதியில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சண்டைகள், அடிமைகளாக்கப்பட்டவர்களின் எழுச்சி, குதிரைத் திருவிழா, வாலிபனின் பின்கதை எனப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைந்திருந்தாலும், ஆமை வேகத் திரைக்கதை எல்லா சுவாரஸ்யங்களையும் கலைத்துப் போட்டு விடுகிறது. வண்ணங்களாலும், சின்ன சின்ன பின்கதைகளாலும் சில குறியீடுகளைக் கடத்த முயல, சோர்ந்து கிடக்கும் நம்மால்தான் அவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. தொழில்நுட்ப ரீதியிலான பிரமாண்ட திரைமொழியும், நடிகர்களும் மட்டுமே சிறிதளவு நம்பிக்கை தருகிறார்கள்.
`மக்கள் நாயகன்' கதைகள் எந்த ஜானருக்கும் புதியது இல்லைதான். பேன்டஸி, பீரியட் எனப் பல தளங்களில் அந்தக் கதைகள் புழங்குவது உண்டு. ஆனால், இந்த வகை நாயக பிம்பக் கதைகளைப் பொருத்தவரை, அதை எந்தளவு சுவாரஸ்யமாகத் தருகிறோம் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. மிரட்டலான மேக்கிங் மட்டும் படத்தைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் திரைக்கதையில் பெரிதாக அக்கறை செலுத்தாத மற்றுமொரு சுமாரான படைப்பாகவே இது சுருங்கிப் போகிறது. அதனாலேயே நம் மனதில் கோட்டை கட்ட மறுக்கிறான் இந்த `மலைக்கோட்டை வாலிபன்'.
from Movie Reviews
Umn news
