Aadujeevitham Review: பிரித்விராஜின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்; ஆனாலும் இது மிஸ்ஸிங் சாரே!

0

கேரள மாநிலத்தின் கிராமம் ஒன்றில், தன் தாய் (ஷோபா மோகன்) மற்றும் கருவுற்றிருக்கும் தன் மனைவி ஸைனுவுடன் (அமலா பால்) வாழ்ந்து வருகிறார் நஜீப் முகமது (பிரித்விராஜ்). தன் வறுமையிலிருந்து விடுபடவும், தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும், தன் வீட்டை அடமானம் வைத்து, அப்பணத்தில் சவுதி அரேபியா நாட்டின் விசாவிற்கு ஏற்பாடு செய்கிறார்.

பல்லாயிரம் மலையாளிகள் போல கல்ஃப் மீதான பல கனவுகளோடு சவுதி அரேபியாவில் இறங்குகிறார் நஜீப். அரேபியர் ஒருவர் அவரை ஏமாற்றி, அழைத்துச் சென்று, நடு பாலைவனத்தில் ஆடுகளையும், ஒட்டகங்களையும் மேய்க்கும் அடிமையாக மாற்றுகிறார். உடலும், மனமும் ஒடுங்கிப் போன நஜீப், அந்த அடிமை சிறையிலிருந்தும், அனல் கக்கும் பாலைவனத்திலிருந்தும் எப்படித் தப்பித்தார் என்ற நீண்ட நெடிய போராட்டத்தைச் சமரசமின்றி சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ப்ளெஸ்ஸி.

Aadujeevitham Review | The Goat Life Review
ஆலப்புழாவைச் சேர்ந்த நஜீப் முகமது என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, பென்யாமின் எழுதிய `ஆடுஜீவிதம்' என்ற நாவல், மலையாள இலக்கியத்திலும், மலையாளிகளின் மனதிலும் தனி இடத்தைப் பிடித்தது. அந்நாவலைத் தழுவி, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் ப்ளெஸ்ஸி.

நஜீப் கதாபாத்திரத்திற்குத் தன்னைத் தேர்ந்தெடுத்த முடிவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் பிரித்விராஜ். படத்திற்காக உடலை உறுக்கிய விதத்தில் அர்ப்பணிப்பைக் காட்டுவதோடு, தன் உடல்மொழியால், பாலைவன வெட்கையையும், மனத்தின் ஆற்றாமையையும் ஆழமாகக் கடத்தவும் செய்கிறார். மொழிப் புரியாமல், தான் சொல்ல வருவதைச் சொல்ல முடியாமல் தவிக்கும்போது அந்தத் தவிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. பல காட்சிகளைத் தனியாளாகத் தாங்கி, கைதட்டல் பெறுகிறார். நஜீப்பைப் போல அடிமையாகும் ஹக்கீம் கதாபாத்திரத்தில் கே.ஆர்.கோகுல் கவனிக்க வைக்கிறார். தனிமையும், பாலையின் சூழலும் சேர்ந்து அவர் மனதைப் பிறழ்வாக்கும் இடங்களில் நம் மனதைக் கனக்க வைக்கிறார்.

நஜீப்பிற்கு உதவும் இப்ராஹிம்மாக ஜிம்மி ஜியன் லோயிஸ், காலிஃப் ஆக தலிப் அல் பலுஷி ஆகியோர் படத்திற்குத் தேவையான இறுக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஸைனுவாக அமலா பால், நஜீப்பின் தாயாக ஷோபா மோகன் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை, அவர்களை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குறையைத் தவிர!

சுனில் கே.எஸ்ஸுன் ஒளிப்பதிவு லாங் ஷாட்களில் பிரமாண்டமான பாலைவனத்தின் அபாயத்தையும், க்ளோஸ் அப் ஷாட்களில் நஜீப்பின் பயத்தையும் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறது. முக்கியமாக, பாலையின் வெயிலையும், நிலவொளியையும் காட்சிகளை ஆழமாக்கப் பயன்படுத்திய விதம் சபாஷ். பின்கதையையும், நிகழ்கால கதையையும் ஒன்றோடு ஒன்று, மாற்றி மாற்றிக் கலக்கும் ஶ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, படத்தின் நிதானத்தைச் சுவாரஸ்யமாக மாற்றப் போராடியிருக்கிறது.

Aadujeevitham Review | The Goat Life Review
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் `ஓமனே' மற்றும் `இஸ்டிக்ஃபர்' பாடல்கள் படத்தோடு ரசிக்க வைக்கின்றன. `பெரியோனே' பாடலை ஆங்காங்கே சிறுசிறு பகுதிகளாகப் பயன்படுத்தியது ரசிக்க வைக்கிறது என்றாலும், பொருத்தமான இடத்தில் அப்பாடலை முழுமையாக வைத்து கதைக்கருவிற்குக் கூடுதல் வலுவைச் சேர்த்திருக்கலாம். பின்னணி இசையில் இன்னொரு நாயகனாக வலம் வருகிறார் இசைப்புயல். திரைக்கதை பேசத் தவறவிட்ட, இறையையும், மன எழுச்சியையும் தன் இசையால் பேச முயன்றிருக்கிறார்.

தன் மனைவி மற்றும் தாயைப் பிரிந்து நஜீப் சவுதி அரேபியாவிற்கு வருவது, அங்கே பாலைவன ஆட்டுப்பட்டிகளுக்கிடையே மாட்டிக்கொள்வது, கஷ்டப்படுவது என நேராகக் கதைக்குள் செல்கிறது படம். ஒருபக்கம் பாலைவனமும் அடிமை சூழலும் தரும் கொடுமை, மறுபுறம் பாலைவன வாழ்க்கையோடு, தன் சொந்த ஊர் வாழ்க்கையை இணைத்துப் பார்க்கும் பின்கதைகள் எனச் சில சுவாரஸ்யங்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன. பின்கதையில், மழை, ஆறு, குளம் என ஏதோவொரு வடிவில் பின்னணியில் பசுமையும் செழிப்பும் இருப்பதும், நிகழ் கதையில் பாலையில் நஜீப் நீருக்கு ஏங்குவதும் என இரு வேறு உலகங்கள் காட்டப்பட்ட விதம் கவனிக்க வைக்கிறது. பிரித்விராஜின் உயிர்ப்பான நடிப்பாலும், ஏ.ஆர்,ரஹ்மானின் பின்னணி இசையாலும், நஜீப் கதாபாத்திரத்தோடு எளிதிலேயே ஒன்றிவிட முடிகிறது.

Aadujeevitham Review | The Goat Life Review

ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் அந்தப் பாலைவனப் பயணம் போலவே எவ்வித சுவாரஸ்யமும் இன்றி நகர்கின்றன. துயரம், பெரும் துயரம், கடும் துயரம் என வரிசை கட்டி நகரும் எபிசோடுகளால் படத்தின் ஆன்மாவிலிருந்து நாம் விலக நேரிடுகிறது. பாலைவனத்தில் நஜீப்பிற்கு நடக்கும் புறச்சூழல் பாதிப்புகள் மட்டுமே அழுத்தமாகக் காட்டப்படுகின்றன. ஆனால், அவருக்குள் நிகழும் உளவியல் மாற்றங்களும், புறச்சூழலால் ஏற்படும் எண்ணவோட்டங்களும் மேம்போக்காகவே கையாளப்பட்டுள்ளன. முக்கியமாக, நஜீப் அப்பாலைவனத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டு அதோடு வாழப் பழகுகிறான், இத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அவனுக்குள் இருக்கும் விடுதலையின் வேட்கையைப் பாதுகாத்து வைத்திருப்பது எது, குடும்பத்தின் மீதான பாசமா அல்லது இறை நம்பிக்கையா போன்ற பிரதான கேள்விகளுக்குப் படத்தில் விடை இல்லை.

ஆடுகளுக்கும், ஒட்டகங்களுக்கும் நஜீப் பிரியாவிடை கொடுக்கும் காட்சியில் பிரித்விராஜின் நடிப்பு அபாரமாக இருந்தாலும், இவ்வுணர்ச்சிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஆடுகளுக்கும் நஜீப்பிற்கும் இடையிலான உறவை விளக்கும் காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லை. தொடக்கத்தில், நஜீப்பிற்கு உதவும் குட்டி ஆடு மட்டுமே நம் நினைவில் துள்ளி ஓடுகிறது. அந்த வகையில் இந்த `ஆடுஜீவிதத்தில்' ஆட்டிற்கும் நஜீப்பிற்குமான ஜீவனே மிஸ்ஸாகிறதே சேட்டா!

இரண்டாம் பாதியில், பாலையிலிருந்து நஜீப்பும், கூட்டாளிகளும் தப்பிக்கும்போது அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளும், அதைச் சமாளிக்க அவர்கள் போராடும் தருணங்களும் மட்டுமே கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. ஆனால், அவற்றையுமே நீண்ட காட்சிகளால் நம்மையும் அந்தப் பயணம் செய்த அளவுக்குச் சோர்வடைய வைத்துவிடுகிறார்கள். இறுதிப்பகுதி, பரபர என ஓடுவதால், எந்தக் காட்சியிலும் போதுமான விவரணை இல்லை. சில கேள்விகளுக்கான விடைகளை நாமே யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Aadujeevitham Review | The Goat Life Review

பாலைவனம் வெறும் அச்சுறுத்தும் அபாயகரமான உலகம் மட்டுமல்ல, பாலையின் குணமும், அதன் உயிர்களும் நாவலில் வரும் நஜீப்பிற்கு உயிர் வாழ ஓர் உத்வேகத்தைத் தரும். ஆனால், படத்தில் வரும் நஜீப்பிற்கு இந்தப் பாலை பயத்தை மட்டுமே தருகிறது. பசியும், தாகமும், உயிர் பயமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலான பாலையும் அவனின் மனதை எவ்வளவு தூரம் பிறழவைக்கிறது என்பதையும் நாவல் விரிவாகக் காட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு காட்சியிலும், நுணுக்கமான விவரிப்புகளால் நஜீப்பின் மன ஆழத்தை நமக்கு விளக்கி, அவனுக்குள் இருக்கும் பதற்றத்தையும் விடுதலைக்கான வேட்கையையும் கடத்தியிருக்க வேண்டும். மாறாக, நாவலுடைய முக்கிய காட்சிகளின் அணிவகுப்பாக மட்டுமே ஓடி முடிகிறது இந்தப் படம்.

அந்த வகையில் இந்த `ஆடுஜீவிதத்தில்' இன்னுமே ஜீவன் இருந்திருக்கலாம்.


from Movie Reviews
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*