
2021-ம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட `காட்ஸில்லா வெர்சஸ் காங்' படத்தின் அடுத்த பாகம்தான் இந்த `Godzilla x Kong: The New Empire'. தமிழில் `காட்ஸில்லா அண்டு காங்: ஒரு புதிய சாம்ராஜ்யம்'. படத்தின் டைட்டிலில் இருக்கும் வித்தியாசம்தான் கதையிலும். கடந்த பாகத்தில் இரண்டு மெகா மான்ஸ்டரும் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதை நோக்கிக் கதை நகர்ந்தது. இம்முறை காங்கும் காட்ஸில்லாவும் இணைந்து மற்றொரு மான்ஸ்டரிடம் மோதினால் எப்படி இருக்கும் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது படம். கடந்த படங்களிலிருந்த பரபர திரைக்கதையும், அதிரடி ஆக்ஷனும், வைரல் தீம் மியூசிக்கும் இந்தப் படத்திலும் இருக்கின்றனவா?
இது மான்ஸ்டர்வெர்ஸில் வெளிவரும் ஐந்தாவது படம் என்பதால் இதற்கு முந்தைய பாகங்களைப் பார்த்திருந்தால் நிகழ்வுகளைப் பின்தொடர்வது எளிதாக இருக்கும். இல்லையென்றாலும் தனி ஆக்ஷன் படமாகப் பார்க்க முடியும். கடந்த பாகத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு பூமிக்குள் இருக்கும் மற்றொரு உலகமான ஹாலோ எர்த்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது காங். அதன் இனத்தில் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே ஆள் அது மட்டும்தான் என்பதால் சாய்வதற்குத் தோள் எதுவுமில்லாமல் தனிமையில் தவிக்கிறது.
இன்னொரு புறம், நம் உலகில் அவ்வப்போது சின்ன சின்ன சம்பவங்களைச் செய்துவிட்டு சைலன்ட் மோடில் இருக்கிறது காட்ஸில்லா. இப்படியான மான்ஸ்டர்களைக் கண்காணித்து ஆராய்ச்சி செய்யும் மோனார்க் நிறுவனமும் அடுத்தடுத்த டாஸ்க்குகளைக் கையில் எடுத்து வேலைகளில் மும்முரமாக இருக்கிறது.
திடீரென இரண்டு மான்ஸ்டர்களுமே வழக்கத்துக்கு மாறாகச் செயல்பட, காரணம் என்ன எனக் குழம்பி நிற்கிறார் மோனார்க்கில் இருக்கும் டாக்டர் ஐலீன் ஆண்ட்ரூஸ் (ரெபெக்கா ஹாஸ்). இவரைக் கடந்த பாகங்களில் பார்த்திருக்கலாம். காங்குடன் சிறப்புத் தொடர்பு கொண்டிருக்கும் ஈவி இனத்தின் கடைசி ஆளான சிறுமி ஜியா இவரது வளர்ப்பு மகள். ஜியாவும் திடீரென எதோ ஒரு பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதாகக் கனவுகள் (விஷன்) காண்கிறார். ஆனால், அவை என்ன சொல்ல வருகின்றன என்பது அவருக்குப் புரியவில்லை. இதற்கும் காட்ஸில்லா, காங்கின் விநோதமான நடவடிக்கைகளுக்கும் என்ன தொடர்பு, காங்கும் காட்ஸில்லாவும் இணைந்து சண்டையிட்ட/சண்டையிடப்போகும் அந்தப் பெரிய வில்லன் யார் என்பதுதான் இந்தப் பாகத்தின் கதை.
படத்தில் மனித கதாபாத்திரங்களே குணச்சித்திர கதாபாத்திரங்கள்தான். இருந்தாலும் மொத்தமாக அவர்களை ஓரம்கட்டிவிடக்கூடாது எனப் போனால் போகட்டும் என்பதாகக் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆக்ஷன் படங்களில் நகைச்சுவைக்காகவே ஓரிரு கதாபாத்திரங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். அந்தப் பணியை பிரையன் டைரி ஹென்றி, டான் ஸ்டீவன்ஸ் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எமோஷனல் காட்சிகளைத் தாங்கி பிடிக்க வேண்டிய ரெபேக்கா ஹாலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். செவித்திறன் சவால் கொண்ட சிறுமியாக வரும் கெய்லி ஹாட்டில் சைகை மொழியிலேயே உணர்வுகளைத் திரையில் கடத்துகிறார். ஆனால், படத்தைத் தாங்கிப்பிடிக்கும் மாஸ் ஹீரோ காங்தான்!
முழுக்க முழுக்க VFXதான் என்றாலும் வசனங்கள் எதுவுமில்லாமல் ஒரு கதாபாத்திரமாக காங்குடன் நம்மால் எமோஷனலாகத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது. கடந்த படங்களிலும் காட்ஸில்லாவை விட காங்கிடமே அந்த எமோஷனல் கனெக்ட் அதிகமாக இருந்தது. அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. கூடுதலாக ஒரு குட்டி குரங்கும் சேர்ந்துகொள்ள, அதற்கும் காங்குக்கும் ஆன கெமிஸ்ட்ரி அட்டகாசம்! அதிலும் க்ளைமாக்ஸில் குட்டி குரங்கின் அழிச்சாட்டியங்கள் பக்கா தியேட்டர் மெட்டீரியல்!
அவ்வப்போது பில்ட்-அப் கொடுத்தாலும் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ஒரு கேமியோ ரோலில்தான் வருகிறது காட்ஸில்லா. கடைசி ரீலில் வரும் சண்டையைத் தவிர்த்து அதற்கு இந்தப் படத்தில் பெரிதாக வேலை இல்லை.
பிரமாண்டமான நிலப்பரப்பு, உலகப்புகழ் பெற்ற முக்கிய இடங்களில் நடக்கும் டைட்டன்களுக்கு இடையேயான சண்டை என விஷுவலாக விருந்து படைத்திருக்கிறார்கள். வாய்ப்பிருப்பவர்கள் நிச்சயம் 3D-யில் இந்தப் படத்தைப் பாருங்கள். VFX, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என எதிலும் எந்த குறையும் இல்லாமல் சிறப்புச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அதே மெனக்கெடல் கதையிலும் திரைக்கதையிலும் இருந்திருக்கலாம். கதையையும் திரைக்கதையையும் கடந்த பாகத்தைக் காட்டி AI-யிடம் வாங்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் கூட வருகிறது. கிட்டத்தட்டக் கடந்த படத்தின் அதே டெம்ப்ளேட்தான். அதில் காட்ஸில்லாவைப் போன்ற மெக்கா காட்ஸில்லா வில்லன். இதில் காங்கைப் போன்ற ஸ்கார்கிங் வில்லன்.
ஆனால், எப்போது காட்ஸில்லாவும் காங்கும் மோதிக்கொள்ளப் போகின்றன என்ற பரபரப்பு கடந்த படத்தின் தொடக்கம் முதலே இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்! திரைக்கதையையும் அங்கும் இங்குமாக தங்கள் தேவைக்கு ஏற்ப வளைத்திருக்கிறார்கள்.
காங்குக்கும் மெட்டல் ஆர்ம் வேண்டுமா, இங்கயே இருக்கு, சாப்பிட பிரியாணி வேணுமா, இங்கயே இருக்கு என்பதாக ஹாலோ எர்த்தை ஸ்டோரேஜ் ரூம் கணக்காக டீல் செய்திருக்கிறார்கள். இப்படியான குறைகளை மறக்கடிக்கக் கடைசி 30 நிமிட ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அது எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பான திரை அனுபவமாக மாறியிருக்கிறது. (காட்ஸில்லா மீது காங் ஃபுட் போர்டு அடிப்பதை எல்லாம் பார்க்கலாம்.)
மொத்தத்தில், தற்போது ஹாலிவுட்டின் மினிமம் கேரண்டி ப்ரான்சைஸாக உருவெடுத்திருக்கும் மான்ஸ்டர்வெர்ஸில் மற்றுமொரு சராசரி படமாக வந்திருக்கிறது இந்த 'காட்ஸில்லா அண்ட் காங்'.
புதிதாக எதுவும் செய்திருப்பார்களா என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். காங்கும் காட்ஸில்லாவும் `நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி ஒரு மாஸ் மசாலா படத்தில் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையுடன் திரையரங்குக்குச் சென்றால் இந்தப் படம் உங்களை முழுவதுமாகத் திருப்திப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
from Movie Reviews
Umn news
