
எண்ணெய் கிணறு ஒன்று தீ பற்றி எரிந்து கொண்டிருக்க 24 மணிநேரத்தில் அதை அணைக்க வேண்டும், இல்லையேல் அருகிலிருக்கும் ஊரே அழிந்துவிடும் என்கிற கெடு விதிக்கப்படுகிறது. தீயை அணைக்கவேண்டும் என்றால் நைட்ரோகிளிசரின் எனும் வெடி பொருளை அதில் கொட்டி அங்கேயே ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த வேண்டும் என்கிற கட்டாயம். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு 500 மைல் தொலைவிலுள்ள பாலைவன பாதையில் இரண்டு ட்ரக்குகள் நிறைய நைட்ரோகிளிசரினை ஏற்றிக் கொண்டு பயணப்படுகிறது ஒரு சிறிய குழு.
சிறிய அசைவு ஏற்பட்டாலும் வெடித்துவிடும் என்கிற நைட்ரோகிளிசரின் ஒருபுறம் என்றால், வழிநெடுக தீவிரவாத கும்பலின் அட்டகாசமும் இருக்கிறது. இதை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள், எண்ணெய் கிணற்றின் தீ அணைக்கப்பட்டதா என்பதே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த 'The Wages of Fear' படத்தின் கதை.
இங்கே எப்படி ரீமேக் எனச் சொல்லிப் பல கிளாசிக் பர்னிச்சர்களை உடைத்திருக்கிறோமோ, அதேபோல இதே தலைப்பில் 1953-ம் ஆண்டு வெளியான படத்தினை உடைத்திருக்கிறது நெட்ப்ளிக்ஸ். அப்படி என்ன இருக்கிறது என்று அந்தப் படத்தில் என்று பார்த்தால் 1953-ம் ஆண்டு வெளியான அந்தத் திரைப்படம் உலகின் முக்கியமான திரில்லர் படங்களில் வரிசையில் தற்போது வரையிலும் பலரின் சாய்ஸாக டாப் 10 இடங்களுக்குள் இருக்கிறது. பிரஞ்சு நாவலிலிருந்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை முதலில் அமெரிக்காவில் வெளியிட கடும் நெருக்கடிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் படத்தில் எண்ணெய் வளங்களை வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்பதை மறைமுகமாகச் சாடியுள்ளது படம்.
அதேபோல பால்புதுமையினர் பற்றிய தெளிவான பார்வைகளையும் கொண்டுள்ளது. இது ஹாலிவுட் வட்டாரத்தில் புண்படுத்துகிற விஷயமாக அப்போது இருந்ததால் ஆரம்பத்தில் தயக்கத்துடன் பல வெட்டுகள் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. பின்னர் படம் பிரபலமடைய, அதனைத் தழுவி 1973-ல் ஒரு படமும், தற்போது நெட்பிளிக்ஸ் உருவாக்கியுள்ள இந்தப் படமும் வெளியாகியுள்ளன. அதேபோல தற்போது ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்' படத்துக்கும் இந்த படம் ஒரு வகையில் இன்ஸபிரேஷன். முதலில் தற்போது வெளியான படத்தைப் பார்த்துவிட்டு பிறகு அந்த கிளாசிக் படத்தினையும் பார்த்தால் மலையளவு வித்தியாசங்கள்.
தற்போது வெளியான படத்தில், எண்ணெய் கிணற்றினை அணைக்கச் செல்லும் குழுவினரின் முன்கதை, அவர்களை எதிர்க்கும் தீவிரவாத அமைப்பு யார், யார் இந்த எண்ணெய் கிணற்றினை அணைக்கச் சொல்கிறார்கள், அதற்கு எதற்கு இத்தனை தொகை தருகிறார்கள் என்ற எந்தத் தெளிவும் இல்லாமல் இருக்கிறது. அதே வேளையில் 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு அறிமுகத்தினை கொடுத்து கதையை நேர்கோட்டில் செலுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இது கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்ற வைத்து அவர்களுக்கு ஏதாவது நடக்கிறது என்றால் பதைபதைப்பை உருவாக்குகிறது. இது அப்படியே இப்போதைய படத்தில் மிஸ்சிங். அதே போல நைட்ரோகிளிசரின் பயணமும் கடைசி 90 நிமிடங்களில்தான் ஒரிஜினல் வெர்ஷனில் தொடங்குகிறது. ஆனால் இங்கே கதை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அந்த த்ரில் பயணம் தொடங்கினாலும் "எந்தப் பயனும் இல்லை" என்பதாகத்தான் காட்சிகள் நகர்கின்றன.
படத்தின் முதுகெலும்பே கதையும் திரைக்கதைதான். சுவாரஸ்யம் என்பது எவ்வளவு செலவு செய்கிறோம், எப்படி பிரமாண்டம் காட்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. இதற்கு உதாரணமாகப் படத்தின் தலைப்பைப் போலக் கறுப்பு வெள்ளை படத்தில் நம்மை ஒருவித பய உணர்வு துரத்திக் கொண்டே வருகிறது. ஆனால் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு சிறப்பாகவே எடுக்கப்பட்டுள்ள தற்போதைய படத்தில் இந்த ஃபீல் சுத்தமாக மிஸ்ஸிங்! நைட்ரோகிளிசரினை பல்வேறு கோணங்களில், குரூரமான பி.ஜி.எம் கொண்டு காட்டுவதன் மூலமும், பெரும் வெடிப்புகளை நிகழ்த்துவது மூலமும் பய உணர்வு வந்துவிடும் என்று நினைத்து காசை கரியாக்கி இருக்கிறார்கள். அது 'எந்த பயனும் இல்லை (2)' என்பதாகவே முடிகிறது.
முந்தைய படத்தில் துப்பாக்கிக்கு எதிராக வசனமே வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாஜி இனவெறி அரசியல், எண்ணெய் நிறுவனங்களின் சுரண்டல் ஆகியவற்றைக் கேள்வியும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய படத்தில் இதைத் தேடினால் 'ERROR 404' என்றே பதில் வருகிறது.
மொத்தத்தில் ரீமேக்குக்கு எந்த நியாயமும் செய்யாத இந்தப் படத்தை `ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்' போன்று ஒரு கமெர்ஷியல் படமாக வேண்டுமானால் சேர்க்கலாம். பெரிதாகக் கதையை எதிர்பார்க்காமல் ஆக்ஷன் காட்சிகளை மட்டும் விரும்புவதாக இருந்தால் இதை ஒருமுறை பார்க்கலாம்.
from Movie Reviews
Umn news
