
துபாயிலிருக்கும் வினு (பேஸில் ஜோசப்) ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காதல் தோல்வியிலிருந்து மீள முடியாமல் போராடுகிறார். அப்போது மனைவியைப் பிரிந்து வட இந்தியாவில் வேலை செய்துவரும் அவரது வருங்கால மைத்துனர் ஆனந்தன் (பிரித்விராஜ்) வினுவுக்கு ஒரு சகோதரனாகவும், நண்பனாகவும் ஆறுதல் அளிக்கிறார். இதனால் வினுவுக்குத் தனது வருங்கால மனைவி அஞ்சலியிடம் (அனஸ்வரா ராஜன்) காட்டவேண்டிய ரொமான்ஸை விட மச்சான் மீது ப்ரோமான்ஸ் அதிகமாகிறது. அதாவது காதலைவிட நட்பே பெரிதாகத் தெரிகிறது. ஆனந்தன் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக மனக்கசப்பில் பிரிந்த அவரின் மனைவி பார்வதியை (நிகிலா விமல்) அவருடன் மீண்டும் சேர்த்து வைக்க வினு ஐடியா கொடுக்க அதுவும் கிளிக்காகிறது.
திருமண தினம் நெருங்க இருவரும் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அதுவரையில் சுமுகமாக இருக்கும் இவர்கள் உறவில் அடுத்தடுத்த சம்பவங்கள் அந்த ப்ரோமான்ஸை ரிவென்ஜாக மாற்றுகின்றன. அதற்கான காரணம் என்ன, திருமணம் நடக்குமா நடக்காதா என்பதை காமெடியில் கொஞ்சமாகக் கதையைக் கலந்து கொடுத்திருப்பதே இந்த `குருவாயூரம்பல நடையில்' படத்தின் கதை.
சென்ற படைப்பில் பாலைவன வெக்கையில் தகிக்க வைத்த பிரித்விராஜ், இதில் அப்படியே நேரெதிராக நின்று சிரிக்க வைத்திருக்கிறார். மச்சானைக் காண்பதற்கு முன், பின் இருக்கும் மாற்றங்களை வைத்து அவர் செய்யும் லூட்டிகள் அட்டகாசம். அப்பாவியான முகபாவம், வெடித்துச் சிரிக்க வைக்கும் ஒன்லைனர், மச்சான் பாசம், இரண்டாம் பாதியில் செய்யும் ரகளைகள் எனப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் பேஸில் ஜோசப். இந்த இரண்டு மைய பாத்திரங்களை வைத்தே காட்சிகள் நகர்வதால் கதாநாயகிகள் நிகிலா விமல், அனஸ்வர ராஜன் ஆகியோருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. என்றாலும் அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இறுதியில் வரும் யோகி பாபுவின் காமெடி பெரிதாக ‘கிளிக்’ ஆகவில்லை.
'கே ஃபார் கல்யாணம்', 'கே ஃபார் கிருஷ்ணா' ஆகிய இரு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. அதிலும் க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் 'கிருஷ்ணா' பாடலின் ரீமிக்ஸ் அட்டகாசம். பின்னணி இசையில் முற்பாதியில் பழைய 'அழகிய லைலா' பாட்டை வைத்து அதிக நேரத்தை ஒப்பேற்றிய உணர்வைத் தந்தாலும், இரண்டாம் பாதியில் துள்ளலான இசையைத் தந்திருக்கிறார் அங்கித் மனோன். கொடுக்கப்பட்ட சிறிய இடத்துக்குள் பல்வேறு கேமரா கோணங்களைப் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரெவி. அதிலும் க்ளைமாக்ஸ் கல்யாண கலாட்டா, கால்பந்தாட்ட டர்ஃப்க்குள் நடக்கும் காட்சி ஆகியவை ஜான் குட்டியின் படத்தொகுப்போடு இணைந்து சிறப்பான திரை அனுபவமாக மாறியிருக்கிறது.
படம் ஆரம்பித்து 10 நிமிடங்களிலேயே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் கணிக்கக்கூடிய காட்சிகள் இருந்தாலும், காமெடி மேஜிக்கை அள்ளி தெளித்து அதையெல்லாம் மறக்கச் செய்து சிரிக்க வைக்கிறது திரைக்கதை. அதிலும் “ஆனந்தேட்டா… ஆனந்தேட்டா…” என பேஸில் ஜோசப் செய்யும் ரகளைகள் அடிப்பொலி சிரிப்பொலி. திரைக்கதையைப் பொறுத்தவரையில் பார்வையாளர்களுக்கு மட்டும் ட்விஸ்ட்டினைச் சொல்லி கதாபாத்திரங்களுக்கு அது தெரியாமல் நகரும் பழைய பாணி என்றாலும் அதனைச் சுவாரஸ்யமாகப் படமாகியுள்ளார் இயக்குநர் விபின் தாஸ். 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் 'அழகிய லைலா' பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் வைக்கப்பட்ட இடம் “வைப்” என்றால், 'த்ரிஷ்யம்' படத்தின் சீரியஸான வசனத்தைப் பயன்படுத்திய இடம் 'ஹாஹா'.
அதேபோல ஒரு சில பழைய மலையாளத் திரைப்படங்கள் ரெஃபரன்ஸ் கேரளப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு க்ளிக் ஆகலாம். இரண்டாம் பாதி சற்றே நீளமாக இருந்தாலும் கடைசி பத்து நிமிடங்கள் பழைய டெம்ப்ளேட் காமெடி படங்களில் நடக்கும் கல்யாண கலாட்டாவாகச் சிரிப்பு பட்டாசாக வெடிக்கிறது. ஜாலியான படமென்றாலும் இரண்டு பெண் கதாபாத்திரங்களின் பிரச்னைகளையும் கொஞ்சம் அழுத்தமாகவே பேசியிருக்கலாம். ஆணாதிக்கத்தை அற்புதமாகப் பகடி செய்த ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ இயக்குநருக்குப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேச முடியவில்லையா என்கிற ஆதங்கமும் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் மிகவும் சிம்பிளான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, சலிப்படையாத திரைக்கதையின் மூலம் வெற்றி நடைபோட்டிருக்கிறது இந்த `குருவாயூரம்பல நடையில்'!
from Movie Reviews
Umn news
