Chandu Champion Review: பாலிவுட்டிலிருந்து மற்றுமொரு பயோபிக் - இருந்தாலும் இதைத் தவிர்த்திருக்கலாம்!

0

`பஜ்ரங்கி பாய்ஜான்', `83' போன்ற படைப்புகளைக் கொடுத்த கபீர் கான் இயக்கத்தில் உருவாக்கியிருக்கிற மற்றுமொரு பயோபிக் பாலிவுட் சினிமா இந்த `சந்து சாம்பியன்'.

சீசன், டிரெண்ட் என எதைப் பற்றியும் யோசிக்காமல் பாலிவுட்டில் தொடர்ந்து பயோபிக் படங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். இப்படியான பயோபிக் படைப்புகளால் பாலிவுட் சந்தித்த ட்ரோல்களும் ஏராளம். ஆனால் அந்த ட்ரோல்களின் வாயை அடைப்பது போல 'மைதான்' போன்ற தரமான பயோபிக்குகளையும் சமீபத்திய நாள்களில் கொடுத்து வருகிறது பாலிவுட்.

Muralikant Petkar
பாரா ஒலிம்பிக்கில் முதல் முறையாகத் தனிநபராக இந்தியாவுக்குத் தங்கம் வென்று கொடுத்த முரளிகாந்த் பேட்கரின் வாழ்க்கையை மையப்படுத்தியதுதான் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். முரளிகாந்த் பேட்கராக நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்திருக்கிறார்.

மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸில் தனிநபராகக் களமிறங்கி வெண்கலப் பதக்கம் பெற்றுத்தந்த கே.டி. ஜாதவிற்கு கிடைக்கும் புகழும் வரவேற்பும் சிறுவனாகிய முரளிகாந்தை ஈர்க்கிறது. அதே போலத் தானும் இந்தியாவுக்கு ஒலிம்பிக்ஸில் தங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அதீத ஆர்வத்துடன் இருக்கிறார். அவர் வளர்ந்தவுடன் ஊரில் அதிகார பலத்துடன் சுற்றும் ஒருவரின் மகனை மல்யுத்தத்தில் வீழ்த்துகிறார். இதனால் அடைந்த அவமானத்தை எண்ணி முரளிகாந்தை கொலை செய்வதற்கு விரட்டுகிறார்கள். இதிலிருந்து தப்பி ஓடி வெளியூருக்குச் சென்று ராணுவத்தில் இணைந்துவிடுகிறார்.

Chandu Champion Still

ராணுவத்திலிருந்து ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என நினைத்து மல்யுத்தத்திலிருந்து குத்துச் சண்டைக்கு மாறி பயிற்சி எடுக்கிறார். இதன் பிறகு 1965-ல் நிகழ்ந்த போரில் காயமடைந்து அவரின் இடுப்புக்கு கீழ் இருக்கும் பாகங்களெல்லாம் செயலிழந்துவிடுகின்றன. அப்போதும் முனைப்புடன் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்கிறார். இதன் பிறகு இந்தியாவிற்காகத் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அவரின் கனவு எப்படி நனவானது என்பதுதான் இந்த பயோபிக்கின் கதை.

Chandu Champion Review

முரளிகாந்த் பேட்கராக கார்த்திக் ஆர்யன் தூள் கிளப்பியிருக்கிறார். முதிர்ச்சியற்ற தன்மையுடன் இருக்கும் பாத்திரத்திலும் தங்கப் பதக்கத்தை வென்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கை அளிக்கும் பாத்திரத்திலும் அற்புதமாக நடித்து 'வாவ்' சொல்ல வைக்கிறார். முரளிகாந்த்துக்குப் பயிற்சியளித்த டைகர் அலி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் ராஸ் நடித்திருக்கிறார். இவரை சீரியஸ் டோன்களிலேயே நாம் பெரும்பான்மையான திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், தனது பாதையைச் சற்றே திருப்பிக் கொண்டு காமெடியும் நிகழ்த்தி ரசிக்க வைக்கிறார்.

ஒரு தனிநபரின் வாழ்க்கையைத் திரை வடிவில் கொண்டு வரும்போது வியாபாரத்துக்காகச் சில விஷயங்களை எப்போதும் சேர்ப்பார்கள். அவை எவ்வாறு அமைகின்றன என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமானது. அதே போல இந்த பயோபிக் படத்தின் கதையில் சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சேர்த்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர் கபீர் கான். கூடவே எமோஷனல் காட்சிகளால் கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்திக் கலங்கவும் வைக்கிறார். இப்படியான விஷயங்களைத் தாண்டி இந்தப் படைப்பின் மூலம் நம்பிக்கையும் ஊட்டுகிறார். மேலோங்கிய ஆர்க்கிலேயே நகரும் முதல் பாதியின் திரைக்கதை கைதட்டி ரசிக்க வைக்கிறது.

Chandu Champion Review

ஆனால், இரண்டாம் பாதியின் சில காட்சிகளில் இந்த ஆர்க் சற்றே கீழிறங்கி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், டாக்குமென்டரி உணர்வைத் தரக்கூடியதாக அமைந்திருக்கும் சில காட்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்திருக்கலாம். இப்படியான விஷயங்களைத் தாண்டி கடைக்கோடியில் இருக்கும் கிராமத்திற்கு போதிய வசதிகள் கிடைப்பதற்கு எத்தகைய அங்கீகாரங்கள் தேவைப்படுகின்றன என்கிற அரசியலையும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதற்காகப் பெரியளவிலான காட்சிகளை எடுத்துக் கொள்ளாமல் ஒரு சில வசனங்களிலேயே அதைச் சொல்லியிருப்பது முதிர்ச்சியான எழுத்தின் சாட்சி.

வெக்கை பதிந்த வறண்ட நிலத்தையும், தோட்டா தெறிக்கும் போர்க் களத்தையும் தனது வெவ்வேறு லென்ஸ்களால் படம்பிடித்து மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதீப் சேட்டர்ஜி. இரண்டாம் பாதியில் சோர்வை உண்டாக்கும் காட்சிகளைத் தனது கத்திரியால் வெட்டி இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம் படத்தொகுப்பாளர் நிதின் பைட். போர்க் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் கிராபிக்ஸும் 'டீசன்ட்' தரத்தில் இருப்பது ஆறுதல்.

Chandu Champion Review
வேட்கையுடன் சுற்றித் திரிபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்தப் படைப்பை மனதாரப் பாராட்டலாம். `நான் தயார் பண்ற சேவலும் பந்தயமடிக்கும்' என்பதை மீண்டுமொரு இந்த பயோபிக் படைப்பால் நிரூபித்திருக்கிறார் கார்த்திக் ஆர்யன்.


from Movie Reviews
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*