
பாலிவுட் இயக்குநர் சுதன்ஷு சரியா இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `உலஜ்'.
ஜான்வி கபூர் ஏற்று நடித்திருக்கும் மற்றுமொரு ஃபீமேல் சென்ட்ரிக் திரைப்படம் இது! 'உலஜ்' என்றால் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிக்கிக் கொள்வது எனப் பொருள். நாயகி சுகானா (ஜான்வி கபூர்) லண்டனின் இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரியாக (IFS) நியமிக்கப்படுகிறார். இதன் மூலம் இத்துறையில் பணியில் அமரும் இளம் நபர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
அவரின் தாத்தாவும் தந்தையும் இதே போல வெளியுறவுத் துறை அதிகாரிகளாக பணியாற்றியவர்கள்தான். லண்டனில் பணியில் அமர்ந்த பிறகு நகுலுடன் (குல்ஷன் தேவையா) பழக்கம் ஏற்படுகிறது. சில விஷயங்களால் மாட்டிக் கொள்ளும் சுகானா நகுலால் பிளாக்மெயில் செய்யப்படுகிறார். பிளாக்மெயில் செய்யும் நகுல் சுகானாவிடம் நம்பிக்கைக்குரிய சில ஆவணங்களைக் கேட்கிறார். இதனால் சுகானா சந்திக்கும் சவாலான சூழல்கள் என்னென்ன, தேசத்துரோகி எனப் பட்டம் பெறும் சுகானா எப்படி அதிலிருந்து மீண்டார் என்பதுதான் இந்த 'உலஜ்' படத்தின் கதை.
பயம், பதற்றம், கோபம் எனப் பல எமோஷன்களை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். குல்ஷன் தேவய்யாவின் நடிப்பில் குறையேதுமில்லை. இருப்பினும் இவருடைய கதாபாத்திரத்தின் பின்னணியை இன்னும் ஆழமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூஸ் தந்திரமான விஷயங்களை அதற்குரிய தன்மையில் அரங்கேற்றி கதாபாத்திரமாகவும் நடிகராகவும் மிளிர்கிறார். சோர்வை உண்டாக்கும் காட்சிகளில் வரும் இவருடைய காமெடி டிராக் மட்டுமே கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.
சில முக்கியமான ஆக்ஷன் காட்சிகளைத் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியால் கச்சிதமாக எடுத்து மாஸ் ரகத்தில் அரங்கேற்றி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் சுதன்ஷு சரியா. குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக் காட்சி பகுத் அச்சா! கதாபாத்திரங்களின் தன்மையை விளக்கும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுதியிருக்கலாம். இப்படியான விஷயங்கள் சில காட்சிகளோடு ஒன்றிணையவிடாமல் பார்வையாளர்களைத் தள்ளி வைக்கின்றன.
நாயகி சந்திக்கும் சிக்கல் என்பதாகப் பரபரப்பாகத் தொடங்கும் திரைக்கதை சிறிது நேரத்திலேயே டைட்டிலுக்கேற்ப சில சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. அடுத்து என்ன நிகழப்போகிறது என்றளவுக்கு ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகள் இந்த அரசியல் த்ரில்லரில் இல்லாமல் போனது திரைக்கதையின் மைனஸ்! இதைத் தாண்டி கதையின் முக்கிய திருப்பமாக அமைய வேண்டிய ட்விஸ்ட்களும் படத்தின் தொடக்கத்திலேயே கணிக்கும்படியாக அமைந்து ஏமாற்றுகின்றன.
லண்டன் நகரத்தைப் படம்பிடித்து நம் கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயா தேவ் டூபே. கதாபாத்திரங்களின் எமோஷனுக்கேற்ப அமைந்துள்ள 'குறியீடு' ஃப்ரேம்களைப் பாராட்டலாம். குறிப்பாக ஒரு சிறிய வீட்டிற்குள் இடம்பெறும் ஆக்ஷன் காட்சியைப் படம்பிடித்த விதம் ஃபர்ஸ்ட் கிளாஸ்! இதே கச்சிதத்தைப் படத்தொகுப்பாளர் நிதின் பைத்தும் பின்பற்றியிருக்கலாம்.
2 மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக இருந்தாலும் சில ரம்பம் அறுக்கும் காட்சிகள் நீண்டி.....ருக்கின்றன! அதனைக் கொஞ்சம் கவனித்துக் கத்தரித்திருக்கலாம். அனைத்து காட்சிகளையும் தனது பின்னணி இசையால் கைகொடுத்துத் தூக்கிவிட முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஷாஷ்வச் சச்தேவ். அதே போலப் பாடல்களையும் வைப் ரகத்தில் அமைத்து ஹீரோவாக ஜொலிக்கிறார்.
பாலிவுட்டின் டெம்ப்ளேட் த்ரில்லர் பார்முலாவில் நகரும் இந்தக் கதையில் கூடுதல் சுவாரஸ்ய அம்சங்களையும் அரசியல் முடிச்சுகளையும் சேர்த்திருந்தால் இந்த `உலஜ்' சிக்கல்களில் சிக்காமல் தப்பித்திருக்கும்!
from Movie Review | திரை விமர்சனம்
Umn news
